சனி, 22 பிப்ரவரி, 2014

மன்றல் 2014 ! பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்

“மன்றல் 2014” என்னும் தமிழகத்தின் மாபெரும் ஜாதிமறுப்பு இணைதேடல் பெருவிழாவினை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சென்னை பெரியார் திடலில் எதிர்வரும் 23.2.2014 ஞாயிறு அன்று நடத்திடவுள்ளது.
இதுதொடர்பாக பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் இயக்குநர் திருமகள் கூறியிருப்பதாவது,
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் 1974-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, சென்னையில் உள்ள பெரியார் திடலைத் தலைமையிடமாகக் கொண்டு தொடர்ந்து 40 ஆம் ஆண்டில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான திருமணங்களை இத்திருமண நிலையம் நடத்திவைத்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் இத்திருமண நிலையத்தின் மூலமான தங்களுக்கேற்ற வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து மணம் முடித்துள்ளனர். முற்றிலும் வணிக நோக்கின்றி சமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தின் வெற்றியையே கருத்தில் கொண்டு பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் நடைபெற்று வருகிறது.
எண்ணற்ற ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மண முறிவு - துணையை இழந்தோர் மறுமணம் ஆகியவற்றை நடத்தி வைத்திருந்தாலும், இந்த வாய்ப்பைப் பரவலாக எடுத்துச் செல்லும் நோக்கில் தமிழ்நாடெங்கும் இதன் கிளைகள் விரிவு படுத்தப்பட்டன.
தமிழகம் முழுவதும் மன்றல்
சென்னையில் கடந்த 2012- ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் நாள் “மன்றல்” தொடங்கப்பட்டது. தமிழகம் முழுக்க இருந்து 300-க்கும் அதிகமான குடும்பங்கள் பங்கேற்றுப் பலனடைந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும்க் கவரும் வண்ணம் திருச்சி, மதுரை, கோவை நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதனால் பலன் பெற்றுள்ளனர். இதற்கு பலதரப்பட்ட அமைப்புகளும், சங்கங்களும் பல வழிகளிலும் தங்கள் பங்களிப்பை அளித்துவருகின்றனர். இவ்வாண்டும் தமிழகத்தின் முக்கியப் பகுதிகளான ஈரோடு, சேலம், வேலூர், தஞ்சை, திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களில் மன்றல் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
சென்னையில் மீண்டும் மன்றல்
இந்நிலையில் வரும் 23.2.2014 ஞாயிற்றுக்கிழமை சென்னை - பெரியார் திடலில் தமிழகத்தின் மாபெரும் ஜாதி மறுப்பு இணைதேடலான “மன்றல்” நடைபெற இருக்கிறது. பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் இதற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்துள்ளது. இன்றைய சமூகச் சூழலில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்யத் தயாரானவர்களுக்கும் அவர்கள் விரும்பும் இணையர் (வாழ்க்கைத் துணை) கிடைப்பதில் இருக்கும் தாமதத்தையும், குறைகளையும் போக்கும் வண்ணம் பெருமளவில் மக்கள் கலந்துகொள்ளும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாற்றுத் திறனாளிகள்
ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய விரும்புவோருக்கான மிகப்பெரிய வாய்ப்பாக இந்நிகழ்வு அமையும். அது தவிர, மத மறுப்புத் திருமணம், மண முறிவு பெற்றோர், துணையை இழந்தோர் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவுகளும் உணடு. மாற்றுத் திறனாளிகளுடன் மண வாழ்க்கை அமைத்துக் கொள்ள விரும்புவோருக்கான சிறப்புப் பிரிவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்வில் பங்கேற்க வருவோருக்கு குருதிப் பரிசோதனை செய்யவும், அவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கவும் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும்.
கி.வீரமணி, மருத்துவர் ஷாலினி மற்றும் திரைப்பிரமுகர்கள் பங்கேற்பு

மன்றல் நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணியளவில் தொடங்கும். பதிவு செய்ய வருவோர் தொடர்ந்து தங்களைப் பதிவு செய்துகொள்வர். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்நிகழ்வு நடைபெறும். இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மனநல மருத்துவர் ஷாலினி, மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், வாழ்வியல் வழிகாட்டிகள் மற்றும் ஜாதி/மத மறுப்புத் திருமணம் செய்துகொண்ட திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்று தங்கள் அனுபவத்தைப் பகிர்கிறார்கள். மேலும் தொடர்புகளுக்கு: 9176757083, 9176757084. இவ்வாறு கூறியுள்ளா  nakkheeran.in

கருத்துகள் இல்லை: