திங்கள், 17 பிப்ரவரி, 2014

தஞ்சையில் தொடங்கியது பனிப்போர்! டி.ஆர்.பாலுக்கு ஸ்டாலின் ஆதரவு; பழனிமாணிக்கத்துக்கு கனிமொழி ஆதரவு

தஞ்சை தொகுதியில் திமுக சார்பில்
போட்டியிட முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலா ளருமான பழனி மாணிக்கத்தை முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு “ஓவர் டேக்” செய்துவிட்டதாக உறுதிப் படுத்தப்பட்ட செய்திகள் வருகின்றன.
தஞ்சையின் சிட்டிங் எம்.பி.யான பழனிமாணிக்கம் இங்கு எட்டு முறை போட்டியிட்டு ஐந்துமுறை ஜெயித்து இரண்டுமுறை அமைச்சராகவும் இருந்தவர். இம்முறையும் நமக்குத்தான் சீட் என நினைத்தார். ஆனால், இவருக்குப் போட்டியாக சொந்த ஊர்ப்பக்கம் வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார் டி.ஆர்.பாலு.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே பாலுவின் பார்வை தஞ்சைப் பக்கம் திரும்பிவிட்டது. மாவட்டக் கழகத்தை தாண்டி தஞ்சை மீது இவர் காட்டும் கரிசனத்தால் எரிச்சலடைந்த பழனிமாணிக்கம், பாலு செய்வதெல்லாம் சரிதானா? என தலைமையிடமே நியாயம் கேட்டார். இதையடுத்து இரண்டு தரப்பையும் அழைத்து சமாதானம் செய்துவைத்தார் கருணாநிதி. இதனால், தனது நடவடிக்கைகளை கொஞ்சம் மட்டுப்படுத்திக் கொண்டார் பாலு.
இந்நிலையில் அண்மை யில், தொகுதியில் உள்ள திமுக புள்ளிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் பாலு அனுப்பிவைத்த சுமார் 64 ஆயிரம் பொங்கல் வாழ்த்துகள் மீண்டும் பழனிமாணிக்கத்தின் நித்திரைக்கு வேட்டு வைத்தன.
இதுகுறித்து `தி இந்து’விடம் பேசிய தஞ்சை திமுக நடுநிலையாளர்கள், ``தஞ்சை திமுக பழனிமாணிக்கத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஆனால், முக்கியஸ்தர்களை எல்லாம் ஒவ்வொருவராய் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார் பாலு. அண்ணா விருது பெற்ற எல்.கணேசனுக்கு ஒரு வருடம் முன்பு பட்டுக்கோட்டையில் பாராட்டு விழா நடத்த கோரிக்கை வைத்தபோது பழனிமாணிக்கம் தரப்பு காதில் வாங்கவில்லை. இதனால், பாலு தரப்பு, `பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பேரவை’ என்ற பெயரில் அந்த விழாவை ஏற்பாடு செய்தது. இதில் கலந்துகொண்டு தானும் பாலு பக்கம் சேர்ந்துவிட்டதை உறுதி செய்தார் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி.
கட்சியினரை கவர்ந்திழுக்கும் வேலைகளுக்கு மத்தியில் மக்களையும் தனக்கு சாதக மாகப் தயார்படுத்தும் வேலைகளையும் கச்சிதமாக செய்துகொண்டிருக்கிறார் பாலு. சென்னை - மன்னார்குடி, பட்டுக்கோட்டை - மன்னார்குடி மார்க்கங்களில் புதிய ரயில் களை ஓடவிட்ட பாலு, இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் மன்னார்குடி - மயிலாடுதுறை, மன்னார்குடி - ஜோத்பூர் மார்க்கங்களிலும் புதிய ரயில்களை அறிவிக்க வைத்திருக்கிறார். அடுத்ததாக, பட்டுக்கோட்டை - தஞ்சைக்கும் ரயில் வரும் என்கிறார்.
`என்னுடைய சொந்தத் தொகுதியான தஞ்சைக்கு ஏதாச்சும் செய்யவேண்டும் என நினைக்கிறேன். அதனாலதான் இதையெல்லாம் செய்கிறேன்’ என்று பாலு சொன்னாலும், ‘ஐந்து முறை எம்.பி-யாக இருந்தவர் செய்யாததை நான் செய்திருக்கிறேன்’ என்று தொகுதிவாசிகளுக்கு நாசூக்காக சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால், தஞ்சை மக்கள் மத்தியில் பாலுவுக்கு செல்வாக்கு உயர்ந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. திமுக-வில் இப்போதுள்ள அரசியல் சூழலில் டி.ஆர்.பாலு ஸ்டாலினுக்கு பக்கபலமாய் நிற்கிறார். எனவே, பாலுவின் விருப்பத்துக்கு மாறாக எதுவும் நடக்காது. இதை தெரிந்துகொண்டு, கனி மொழியை சுற்றி வருகிறார் பழனிமாணிக்கம். ஆனால் ஒன்று, இருவரில் யாருக்கு சீட் கிடைத்தாலும் உள்ளடி வேலை நிச்சயம்’’ என்று மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. http://tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: