வெள்ளி, 19 நவம்பர், 2010

To Jayalalitha,ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பு.எல்லாம் அம்மா!



உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எல்லாம் எங்களுக்குக் கிடைக்கும் என்பதில்

துளியும் நம்பிக்கை இல்லை. ஆயினும், நம் கட்சியில் நடக்கும் சில விபரீத விஷயங்களை உங்களுக்குத் தெரிவிக்காமல் இருந்தால், அப்புறம் நான் அ.தி.மு.க. தொண்ட னாக இருப்பதில் அர்த்தம் இல்லை. எனவே, சில விஷயங்களை இந்தக் கடிதம் மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் அம்மா! ''நிலைமக்கள் சால உடைதெனினும் தானைதலைமக்கள் இல்வழி இல்'' - இந்தக் குறளின் அர்த்தம் யாருக்குப் புரிகிறதோ, இல்லையோ... நம் அ.தி.மு.கழகத் தொண்டனுக்கும், இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலருக்கும் மிக நன்றாகவே புரியும். 'போர் சேவகர்களின் எண்ணிக்கை மிகுந்து இருந்தால்கூட, சரியான படைத் தலைவர்கள் இல்லாவிட்டால், அந்தச் சேனை பயனற்றதாகும்!' என்பதுதான் பொருள். இது போலத்தான் அம்மா, நம் கட்சியின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் போய்க்கொண்டு இருக்கிறது!

கோவை, திருச்சி, மதுரையில் எல்லாம் நம் தொண்டர்களின் எழுச்சியை தமிழகமே பார்த்து வியந்தது. ஆனால், தொண்டர்களை வழிநடத்தும் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் சரியாக நடந்துகொள்கிறார்களா? 'பாசக்காரனாகத் தொண்டன், மோசக்காரனாக இரண்டாம் கட்டத் தலைவன்' என்று இரு வேறாகப் பிரிந்து கிடக்கின்றனர். கோவையில் நீங்கள் பேசுவதற்கு முன்பு, தி.மு.கழகத்துக்குத் தாவ நேரம், காலம் குறித்து வைத்து இருந்த இந்த மோசக்காரர்கள் பலரும் மூன்று ஊர்களில் நம்முடைய தொண்டர்களின் எழுச்சியையும், உங்களின் ஆக்ரோஷ மேடைப் பேச்சையும் பார்த்து, அப்படியே பிரேக் அடித்து நம் கட்சியிலேயே நின்றுவிட்டனர் என்பது நிஜம்!

முன்பெல்லாம், 'பங்காளி' என்றுதான் செல்லமாக நாங்கள் அழைத்துக்கொள்வோம். அந்தப் பங்காளிகள் எல்லாம் இன்று பகையாளிகளாக மாறி வருகிறார்கள். தி.மு.கழகத்துக்கு இங்கே இருந்து சென்ற முக்கியப் பிரமுகர்களுக்கு அங்கு நல்ல மரியாதை. நம் கட்சியினரோடும் இன்னும் மறைமுகத் தொடர்பில் உள்ள அவர்கள், இங்கே நடக்கும் உட்தகவல்களை எல்லாம் கேட்டு அங்கே சொல்லுகிறார்கள். எனவே, இங்கே இருந்து போனவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை முதலில் களையெடுங்கள் அம்மா.

அடுத்து, நீங்கள் செய்ய வேண்டிய விஷயம் இது. கடந்த நாலரை ஆண்டுகளில் ஆளும் கட்சி எதிர்ப்பு விஷயங்களில் சுறுசுறுப்பாக செயல்படாத நம் கட்சி நிர்வாகிகளின் பெயர்களைப் பட்டியலிடுங்கள். அந்த சந்தேகப் பட்டியலில் உள்ள நபர்களின் ஃபேமிலி ட்ரீ (வாழ்க்கை மரக்கிளை) போடுங்கள். உறவினர், குடும்பத்தினர், நண்பர்கள் என்று பெயர்களைக் குறியுங்கள். கடந்த நாலரை வருட தி.மு.கழக ஆட்சியில் இவர்களில் யார் யார் என்னென்ன சலுகைளைப் பெற்றனர் என்பது குறித்த விவரங்களை சேகரியுங்கள்.

வெளியில் இருந்து பார்த்தால், எல்லாம் சட்டப்படி நடந்ததுபோல் தெரியும். கொஞ்சம் பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தால்... நம்மவர்களுக்கு தி.மு.கழக பிரமுகர்கள் எலும்புத் துண்டுகளை ஏராளமாக அள்ளி வீசி இருப்பது புரியும் அம்மா. பழங்காலத்தில் குறுநில மன்னர்களாக இருந்தார்களே... இன்றைக்கும் அதேபோல வேறு ஒரு போர்வையில் அதாவது, கல்வி நிறுவனங்கள் நடத்துவதாகச் சொல்லிக்கொண்டு பல நூறு ஏக்கர்களை வளைத்துப்போட்டு குறுநிலக் கல்வி மன்னர்களாகவே வலம் வருகிறார்கள். மத்திய மண்டலத்தில் வசிக்கும் நம் கட்சிப் பிரமுகர், தி.மு.கழக கோட்டைப் பிரமுகர் ஒருவரின் இளவலுக்கு தோஸ்த். அதைவைத்து, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், பலவித லைசென்ஸ்கள், தடையில்லா சான்றிதழ் வாங்கித் தருவதில் ஆரம்பித்து புதிய கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்க ஆலோசனை வழங்கியே கோடீஸ்வராகி விட்டார். அவரும்கூட, வருகிற தேர்தலில் உங்களிடம் ஸீட் கேட்க ரெடியாகி வருகிறார். இவரைப்போல கடந்த நாலு வருடங்களில் தி.மு.கழக ஆட்சியில் பல்வேறு துறையில் ஸ்பெஷல் அனுமதி பெற்ற நம்மவர்களின் லிஸ்ட்டை, உங்களின் விசுவாசிகளான அரசு உயர் அதிகாரிகளிடம் கேட்டு வாங்கிப் பாருங்கள் அம்மா.

''இதுவரை எத்தனையோ கான்ட்ராட்கள், டிரைவர் - கண்டக்டர் வேலை, டாஸ்மாக் பார் நடத்துவது என இப்படிப் பல்வேறு சலுகைகளை ரகசியமாகத் தந்தோம். இனியும் அதே பாணியில் தருவோம். ஆனால், நீ அ.தி.மு.க-விலேயே இரு. எங்கள் கட்சிக்கு இப்போது வர வேண்டாம். நாங்கள் சொல்லும் சில வேலைகளைப் பார்!'' என்று சொல்லி இருக்கிறார்களாம். நம் கட்சியின் முக்கிய நடவடிக்கைகளை உளவு பார்த்து எதிரிகளுக்குத் தகவல் சொல்லுவது, நீங்கள் அறிவிக்கும் தி.மு.கழக எதிர்ப்புப் போராட்டங்களைப் பிசுபிசுக்கவைப்பது, தேர்தல் நேரத்தில் உள்ளடி வேலை பார்த்து நமக்குப் பின்னடைவை ஏற்படுத்துவது, திறமையான கட்சி நிர்வாகிகள் மீது மொட்டை பெட்டிஷன் போட்டு மனச் சோர்வை உண்டாக்குவது... எல்லாம் அவர்களின் திருவிளையாடல்கள்தான் அம்மா!

சென்னையில் சேகர்பாபு, கோவையில் செ.ம.வேலுச்சாமி போன்றவர்களை டம்மி ஆக்கியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், 'தி.மு.கழக வி.ஐ.பி-க்களுடன் ரகசியத் தொடர்பு வைத்திருந்ததால்தான் இப்படி' என்ற பேச்சு அடிபட்டது. இவர்களைத் தவிர, சென்னையில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை பரவிக்கிடக்கும் நம் கட்சியில் உள்ள நம்பிக்கைத் துரோகிகள், கூட இருந்தே குழி பறிக்கும் கயவர்கள், நம்முடைய வியூகங்களை அப்படியே தி.மு.க-வுக்குப் போட்டுக்கொடுக்கும் பாதகர்களை எப்போது கண்டுகொள்ளப் போகிறீர்கள்? இவர்களை நம்பியா அம்மா, வருகிற சட்டமன்றத் தேர்தலை நாம் எதிர்கொள்ளப் போகிறோம்?

பகலில் ஒரு தோற்றம், இரவில் ஒரு மாற்றம்போல... நம் கட்சியில் ஒரு முகம், எதிர்க் கட்சியினரிடம் இன்னொரு முகம், தனிப்பட்ட சொத்துகள் சேர்ப்பதில் மற்றொரு முகம் எனப் பல முகங்களுடன் நம்மவர்கள் நடமாடுகிறார்கள். வெளியே மேடைகளில் தி.மு.கழகத்தைத் தாக்கிப் பேசுவார்கள். ஆனால், திரைமறைவில், சம்பந்தப்பட்டவர்களிடம் ஸாரி கேட்டு அசடு வழிவார்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் ராஜகண்ணப்பன் கலந்துகொண்ட பொதுக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் ஒரு பேச்சாளர் உள்ளூர் மந்திரி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆரை கடுமையாக விமர்சித்தார். அந்தப் பேச்சாளருக்குக் கடிவாளம் போடும்படி தி.மு.கழகத் தரப்பில் இருந்து பிரஷர் வர... நம் கட்சியின் மாவட்டப் பிரமுகர் ஒருவரே அந்தப் பேச்சாளருக்கு 'அன்பான' உத்தரவு போடுகிறார். உத்தரவு போட்ட பிரமுகரின் உறவினர் ஒருவருக்கு கோடி ரூபாய் மதிப்புள்ள கான்ட்ராக்ட் ஒன்று அண்மையில் அரசால் தரப்பட்டதுதான் விசுவாசத்துக்குக் காரணம்.

அம்மா, நதிக்கரை ஓரங்கள் எல்லாம் நம்மவர்களையும் தி.மு.க-வினரையும் நன்றாக இணைக்கிறது! திருட்டு மணல் அள்ளும் பிசினஸ் கூட்டணிதான் இதற்கான காரணம். இந்த விஷயத்தில் நம் தென் மாவட்டப் பிரமுகர் ஒருவருக்கு மாத மாமூலாகப் பத்து லகரம் பலன் கிடைக்கிறதாம்! மணல் விவகாரத்தைக் கிளப்பாமல் வாயடைத்துவைக்க, இப்படி நம்மவர்களுக்கு வாய்க்கரிசி போடுவது, தமிழகம் முழுக்க நடக்கிறது.

புதுக்கோட்டையில் ஒரு லாட்ஜில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் திருட்டு மணல் மாமூலை பிரித்துக்கொள்ளும் வைபவம் கனஜோராக நடக்கிறது. அங்கே தவறாமல் போகும் நம் கட்சிப் பிரமுகர் பிறகு எப்படி தி.மு.கழகத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பார்?

அம்மா, உங்கள் அருகி லேயே கட்சியின் துணை அமைப்பு ஒன்றின்முக்கிய பிரமுகர் ஒருவர், கிரானைட் பிசினஸில் 20 வருடங்களுக்கு அரசிடம் இருந்து குத்தகை உரிமை வாங்கி இருக்கிறார். டாகுமென்ட் ஆதாரமே உள்ளது!

மேற்கு மண்டலப் பிரமுகர் ஒருவர், தனது மகன் பெயரில் ஒரு கல்லூரி ஆரம்பிக்கிறார். அதற்காக வழக்கமான தட்சணை எதுவும் வாங்காமல், அனுமதிகள் அவரைத் தேடிப் போகின்றன. இந்தப் பிரமுகர் கை காட்டிய நபருக்கு முக்கிய கோயில் ஒன்றின் டிரஸ்டி பதவி தந்துள்ளனர். இதே மண்டலத்தில் தறி நெய்யும் சத்தம் எப்போதும் கேட்கும் ஊரில் உள்ள இன்னொரு பிரமுகர், நீங்கள் தேர்தல் பிரசாரத்துக்கு அங்கே வரலாம் என்பதால், சொகுசாக, நீங்கள் தங்க வசதியாக பிரமாண்ட மாளிகை கட்டி வருவதாகச் சொல்கிறாராம் அம்மா. எப்படிக் கட்டுகிறார் தெரியுமா? இந்தக் கட்டட விஷயத்தில், உள்ளாட்சி நிர்வாகத்தில் பொறுப்பில் இருக்கும் தி.மு.கழகப் பிரமுகர் ஒருவருடன் ரகசியக் கூட்டணியாம். அங்கே உறுப் பினர்களாக இருக்கும் நம் கட்சிக்காரர்கள், இதுவரை எந்த ஒரு முக்கியத் தீர்மானத்துக்கும் எதிர்ப்பே தெரிவித்தது இல்லை!

டெல்டா மாவட்டம் ஒன்றின் பிரமுகர், ரொம்பத் 'தங்க'மானவர். சொன்னால், அம்மா நீங்கள் நம்புவீர்களோ என்னவோ... நம் ஆட்சியில் இவர் எடுத்த கான்ட்ராக்ட்களை விட, தி.மு.க. ஆட்சியில்தான் நிறைய வேலைகளைச் செய்திருக்கிறார். அரசில் அப்படி ஒரு செல்வாக்குடன் வலம் வருகிறார். இந்த வருடத் தீபாவளிக்கு இவர் எம்.எல்.ஏ. ஸீட் கேட்கப்போகும் தொகுதியில் உள்ள கட்சி உறுப்பினர்களில் ஒரு லட்சம் பேருக்கு மேல் நம் கட்சிக் கரை போட்ட வேட்டி-சட்டை பரிசு வழங்கினார்!

செம்மொழி மாநாட்டுப் பணிகளில் ` 30 கோடி அளவுக்கு நம்மவரான ஒரு எம்.எல்.ஏ-வுக்கு கான்ட்ராக்ட்களைக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது தி.மு.க. அரசு!

சில நாட்களுக்கு முன்பு, தி.மு.கழக அமைச்சர்கள் நம் கட்சியைப்பற்றி கமென்ட் அடிக்கும்போது, 'பில்டிங் ரொம்ப ஸ்ட்ராங்.. பேஸ்மென்ட் வீக்' என்று நடிகர் வடிவேலுவின் காமெடியைச் சொல்லிச் சிரித்தார்களாம் அம்மா. அப்படி நம்மை நையாண்டி செய்கிற அளவுக்கு நம் கட்சியில் சிலருடன் தொடர்பு வைத்துக் கொண்டு பல வேலைகளை செய்து வருகின்றனர்.

கடந்த ஆறு மாதங்களாக நமது தலைமைக் கழகத்தில் புகார் மனு வாங்கும் படலம் நடக்கிறது. மேலே சொன்ன விஷயங்களில் பலவும் நிச்சயமாக அவற்றில் தெரிவிக்கப்பட்டு இருக்கும். ஆனால், அவற்றுக்கான ஆக்ஷன்களே இல்லாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை அம்மா!

நம்ம கட்சியில் சரமாரியாக உங்களுக்கு வருகிற 'போட்டுக்கொடுக்கும்' கடிதங்கள் போல இதை நீங்கள் நினைத்துவிடக் கூடாது. யாரையும் காட்டிக் கொடுத்து, அவர்கள் இடத்தைப் பிடிப்பதற்காக எழுதப்படும் கடிதம் அல்ல இது. கட்சியைத் தூக்கிப் பிடிக்கும் ஒரே ஆசையுடன் எழுதி இருக்கிறேன் அம்மா.

எதிர்பார்க்கிறோம் உங்களின் தக்க நடவடிக்கை களை!

இப்படிக்கு,
ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பு.

கருத்துகள் இல்லை: