வெள்ளி, 19 நவம்பர், 2010

காணாமல்போனோரை வைத்து அரசியல்


காணாமல்போனோரின் குடும்பங்களை வைத்து எதிர்க்கட்சிகள் செய்து வரும் அரசியல் நடவடிக்கைகளின் ஒரு பகுதி யாழ்ப்பாணத்தில் அரங்கேறியது.ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ரில்வின் சில்வா, விஜித ஹேரத், சுனில் ஹந்துனெத்தி ஆகியோருடன், ஜே.வி.பி. சார்பு பல்கலைக்கழக மாணவர் அமைப்புப் பிரதிநிதிகளும் “நாம் இலங்கையர்” என்ற புதிய அமைப்பின் பெயரில் காணாமல்போனோர் தொடர்பான விபரங்களை வெளியிடுமாறு யாழ்ப்பாணத்தில் ஒரு போராட்டத்தை திங்களன்று (15-11-2010)நடத்தினர்.
சாத்தியமான எல்லாக் கதவுளையுமே தட்டிக்கொண்டிருக்கும், தமது உறவுகளைக் காணாது தவிக்கும் அவர்களது உறவினர்களில் ஒரு சிலர், தீர்வு கிடைக்காதா என்ற அங்கலாய்ப்பில், இந்தப் போராட்டத்திலும் கலந்துகொண்டு கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர்.
காணாமல்போனோரை விடுவிக்குமாறு கோரும் இத்தகைய போராட்டம் ஒன்றை ஜே.வி.பி. மட்டும்தான் நடத்தியது என்றில்லை. எதிர்க்கட்சிகள் பலவும் இவ்வாறு அடிக்கடி இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துக்கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றன.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் நீண்ட காலமாகவே இந்த விவகாரம் தொடர்பாக அடிக்கடி போராட்டங்களை நடத்தி வருகிறார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, தனித்தும், இதர அமைப்புக்களுடன் சேர்ந்தும் இவ்வாறான போராட்டங்களை அடிக்கடி நடத்தி வருகிறது.
காணாமல்போனோர் தொடர்பான விபரங்களை வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் இத்தகைய போராட்டங்களால், காணாமல்போனதாகத் தெரிவிக்கப்படும் ஒருவரையேனும் இதுவரையில் கண்டுபிடிக்க முடிந்திருக்கவில்லை.
காணாமல்போனோரின் உறவினர்களைப் பொறுத்தவரையில், தமது உறவுகள் தொடர்பான ஏக்கமும், தவிப்பும், அங்கலாய்ப்பும் காரணமாக, சாத்தியமான எல்லா வழிகளையும் அவர்கள் நாடிக்கொண்டுதானிருக்கின்றனர்.
கொல்லப்பட்டுவிட்டால் உடலை எடுத்து தகனம் செய்து கிரியைகளை முடித்து ஒரு முடிவுக்கு வந்துவிடலாம். ஆனால், இருக்கிறார்களா, இல்லையா என்று தெரியாத இந்த அவல நிலையில், “இருக்கிறார்கள்” என்ற நம்பிக்கையுடன் அவர்களுடைய காலம் ஓடுகிறது.
இலங்கையில் காணாமல்போவதென்பது இன்று நேற்று ஆரம்பித்த ஒன்றல்ல. 1995 ரிவிரச நடவடிக்கையின் பின்னர் யாழ்ப்பாணத்தில் சுமார் 600 இளைஞர்கள் காணாமல்போனதாகத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு காணாமல்போனோரின் மனைவிமார் பலர் இன்றும் தமது பிள்ளைகளுடன் கணவருக்காகக் காத்திருக்கின்றனர்.
காணாமல்போனவர் இறந்துவிட்டார் என்று நிரூபனமானாலொழிய, அவர் இருக்கிறார் என்ற நம்பிக்கைதான் இந்த ஏழை உள்ளங்களிடம் இருக்கும். அந்த நம்பிக்கையுடன் பல ஆண்டுகளாக அவர்கள் அலைக்கழிந்துகொண்டிருக்கின்றனர்.
பல பத்து ஆண்டுகளாகக் காணாமல்போனோர் என்று தெரிவிக்கப்படும் இவர்கள் இப்போது உயிருடன் இல்லை என்றால், அதை உறுதிப்படுத்த யாராவது முன்வந்தால், வேதனையைச் சுமந்துகொண்டு வாழ்வின் அடுத்த கட்டங்களுக்கு நகரலாம். எதுவுமே தெரியாமல் நீளும் இந்தச் சோகத்துக்கு எப்போதுமே முடிவு கிட்டப்போவதில்லை.
இது தெரிந்துதானோ என்னமோ, இன்று மிகவும் பலவீனமான நிலையிலிருக்கும் எதிர்க்கட்சிகள் பலவும் அடிக்கடி இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துக்கொள்கின்றன. ஒரு முடிவு காணப்பட முடியாமலிருக்கும் விவகாரத்தை வைத்து தொடர்ந்து அரசியல் செய்யும் வாய்ப்பும் இங்கு கிடைக்கிறது.
இந்த எதிர்க்கட்சிகளின் வரிசையில், அரசாங்கத்தை எதிர்ப்பதற்கான ஒரு ஆயுதமான ஜே.வி.பி.யும் இப்போது இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துக்கொண்டுள்ளது.
உண்மையிலேயே காணாமல்போனோர் தொடர்பான உண்மையான அக்கறை இந்த எதிர்க்கட்சிகளுக்கு இருக்குமானால், தனித்தனியே தமது கட்சிகளின் பெயரில் அல்லது புதிய பெயர்களில் இத்தகைய போராட்டங்களை முன்னெடுக்காமல், ஒருமித்து இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணும் நடவடிக்கையை முன்னெடுக்கலாம்.
காணாமல்போனோரைக் கண்டுபிடித்து, அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதை நிரூபித்து, காணாமல்போனோரின் உறவினர்களின் துயரைத் துடைக்கும் உண்மையான அக்கறை இவர்களுக்கிருந்தால், அனைவரும் ஒருமித்து இந்த விவகாரத்துக்கு ஒரு முடிவு காண முயலலாம்.
ஜே.வி.பி. கிளர்ச்சிக் காலத்தில் காணாமல்போனதாகத் தெரிவிக்கப்பட்ட எத்தனையோ சிங்கள இளைஞர்கள் தொடர்பாக இதுவரையில் எந்தத் தகவலும் இல்லை.
பல பத்து ஆண்டுகள் கடந்து விட்ட தங்கள் சொந்தக் கட்சியின் உறுப்பினர் விவகாரத்துக்கே தீர்வுகாண முடியாதவர்கள், காணாமல்போன தமிழர்கள் பால் இப்போது கொண்டிருக்கும் அக்கறையை என்னென்பது?
- யாழ்ப்பாணம் இன்று -

கருத்துகள் இல்லை: