பயங்கரவாத விசாரணை பிரிவினர் எனக் கூறி தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி கடந்த காலத்தில் கோடிக்கணக்கில் கப்பம் பெற்று வந்த குழுவொன்றை சேர்ந்த தலைவர் உள்ளிட்ட 7 பேர் கடந்த 18 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.இவர்களிடம் இருந்து இரண்டு கைதுப்பாக்கிகள், ஒரு கிளைமோர், இராணுவத்தினரின் இலச்சினையுடன் கூடிய கார் மற்றும் மோட்டார் சைக்களில் என்பவற்றை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த குழுவை வழிநடத்தி வந்த யாக்கா சம்பத், சமிந்த சம்பத் ஆகியோர் சூரியவௌ மற்றும் பத்தரமுல்லை பிரதேசங்களில் கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்கள் இராணுவ கமாண்டோ படையில் சில காலம் பணியாற்றி விட்டு, விலகியவர்கள் எனவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள மூவர் சூரியவௌ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றும் இருவர் கிரிபத்தொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த குழுவைச் சேர்ந்த சிலர் ஏற்கனவே கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் தாம் பயங்கரவாத விசாரணை பிரிவு மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பை சேர்ந்தவர்கள் எனக் கூறி, கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள தமிழ் செல்வந்த வர்த்தகர்களை அச்சுறுத்தி கோடிக்கணக்கில் கப்பம் பெற்றுள்ளனர். இந்த குழுவைச் சேர்ந்த மேலும் சிலரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக பயங்கரவாத விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக