புதன், 17 நவம்பர், 2010

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஒரு அபாய எச்சரிக்கை!: பகிடிவதையினால் சிங்கள மாணவி தற்கொலை முயற்சி

கிழக்குப் பல்கலைக்கழகம் வந்தாறுமூலையில் சிங்கள மாணவரிடையே நிகழ்ந்த பகிடிவதை சம்பவத்தால் முதல்வருட வணிகவியல் பிரிவைச் சேர்ந்த சிங்கள மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய எத்தணித்துள்ளார். இன்று (16.11.2010) மதியமளவில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட சிங்கள மாணவர்கள், அண்மையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட முதலாம் வருடத்தைச் சேர்ந்த சிங்கள மாணவி ஒருவரை பகிடிவதை செய்ய எத்தனித்துள்ளனர்.
இந்நிலையில் மேற்படி மாணவி அச்சமுற்று இரசாயனவியல் கூடத்தின் இரண்டாம் மாடியில் இருந்த கீழே குதிக்க முற்பட்டதாகவும், பின்னர் அங்கிருந்து தன்னைக் காப்பாற்றும்படி கதறியவாறு விடுதிக்குச் சென்றதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
மூன்று பெண்களும் சில ஆண்களும் கொண்ட மாணவர் குழுவே இச் செயலைப் புரிந்ததாக கூறப்பட்ட போதிலும், பகிடிவதையின் போது, தலையைக் குனிந்தே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இப் பெண் இருந்தமையால் தன்னை சித்திரவதைக்குட்படுத்தியவர்களை அடையாளம் காட்ட முடியாமல் போனதாக கூறியிருக்கிறார்.
அப் பெண் கதறியழும்போது, தன்னை கன்னத்தில் அறைந்ததாகவும், தனது மேற்சட்டையினை கழற்ற முற்பட்டதாகவும் கூறியிருக்கின்றார். எனவேதான், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வாறு குதிக்க முற்பட்டதாக தன் சிநேகிதகளிடம் கூறியதாக அங்கிருந்த சிங்கள மாணவிகள் கூறினர்.
இச் சம்பவம் தொடர்பாக விஞ்ஞானபீடத்தின் விரிவுரையாளர் திரு. வினோபாவா அவர்களும் ஏனைய விரிவுரையாளர்களும் இணைந்து சம்பந்தப்பட்ட சிரேஷ்ட மாணவர்களுடன் அனைத்து இரண்டாம் வருட சிங்கள மாணவர்களையும் வைத்து தகவல் தொழில்நுட்ப மையத்தில் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தனர்.
இச் சம்பவத்தினாலும் சிங்கள மாணவர்களின் தொடர்ச்சியான செயல்களினால் ஆத்திரமடைந்திருந்த தமிழ் மாணவர்களும் கூட்டம் நடைபெற்ற கட்டடத்தின் முன்னால் கூட்டத்தின் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
சுமார் ஒரு மணிநேரம் வரையில் நடைபெற்று முடிவடைந்த கூட்டத்தில் பிரச்சினை சுமூகமாகத் தீர்க்கப்பட்டது என்று சிலரும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பத்து வருடம் வரை பரீட்சை எழுதத் தடை விதிக்கபட்டுள்ளது என்று சிலரும் கூறுகின்ற போதிலும் சரியான முடிவுகள் தெரியவரவில்லை.
ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி உடனடியாகத் தன் வீடு நோக்கிச் சென்றுவிட்டதாகவும் விடுதி மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: