புதன், 17 நவம்பர், 2010

மினுமினுத்துக் கொண்டிருந்த கம்பிகளை கதறக் கதற ஏற்றினர்''

குருநாகல் கொகரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்பலங்க தல்கொட பிடியவைச் சேர்ந்த 38 வயதுடைய மீனாட்சி லெட்சுமி தமக்கெனச் சொந்த வீடொன்றைக் கட்டிக் கொள்வதற்காக குவைத் நாடு சென்று தம் கை, கால்களில் கம்பிகளால் குத்தப்பட்டு சித்திர வதைக்குள்ளான நிலையில் நாடு திரும்பி தற்பொழுது குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம், மற்றும் கொகரெல்ல பொலிஸார் ஆகியோரிடம் இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்தபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
நான் பாடசாலை செல்லவில்லை. தென்னந் தோட்டப் பகுதியில் தனியார் தோட்டச் சொந்தக்காரர்களின் வீடுகளில் வசித்து வந்தேன். தோட்டத்தில் இருந்து கொண்டு கூலித் தொழில் புரியும் ரங்கசாமி என்பவரை மணம் முடித்தேன்.
தற்பொழுது வசந்தகுமார் என்ற வயதுடைய மகனும், 6 வயதுடைய மதுசானி நிரஞ்சலா என்ற பெண் பிள்ளையும் உள்ளார்கள். கூலி வேலை செய்து கொண்டு வாழ்க் கையை ஓட்டிச் செல்ல முடியாததன் காரணமாகவும் ஒரு சொந்த வீடொன்றைக் கட்டிக் கொள்வதன் காரணமாகவும் வெளிநாடு செல்லத் தீர்மானித்தேன்.
இந்த வகையில் தம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நபரின் ஊடாக வெளிநாடு செல்வதற்கு குருநாகல் நகரிலுள்ள பிரபலமான வெளிநாட்டு முகவர் நிலையத்தில் என்னுடைய கடவுச் சீட்டு ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது தான் வெளிநாடு செல்லும் பட்சத்தில் 20,000 ரூபா இலவசமாகத் தருவதாக சொன் னார்கள். என்னுடைய கடவுச் சீட்டின் இலக்கம் என்.3687565 ஆகும்.
இப் புத்தகத்தின் மூலம் இதற்கு முன் ஒரு தடவை சவூதி அரேபியா சென்றேன். எனக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மூன்று வாரங்களில் நாடு திரும் பினேன். இந்தக் கடவுச் சீட்டைப் புதுப்பித்து குருநாகல் புவக்கஸ் சந்தியிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பயிற்சி நிலையத்தில் பயிற்சியையும் முடித்துவிட்டு பின் மே மாதம் வெளிநாடு செல்வதற்குரிய சகல ஆவணங்களிலும் கையொப்ப மிட்டு விட்டு 50 குவைத் தினார் சம்பளத்திற்கு சென்றேன். அப்போது எம் பிரதேசத்தைச் சேர்ந்த முகவரின் மூலமாக 15,000 ரூபா கிடைக்கப் பெற்றது.
அங்கு ஒரு மாத காலம் எந்த விதமான பாகுபாடுமின்றி என்னை நன்கு கவனித்தார்கள். அந்தக் குடும்பத்தில் மூன்று சிறுவர்களும் ஒரு சிறுமியும் உள்ளார்கள். மூத்த சிறுவனின் வயது 9 ஆகும். நான் வீட்டில் சமைப்பதில்லை. பிள்ளை களைப் பராமரித்தல் மற்றும் வீட்டைச் சுத்தமாக வைத்திருத்தல் மாத்திரம் தான் என்னுடைய வேலை. வீட்டுத் தலைவன் அங்கு பொலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றுகின்றார். வீட்டுப் பெண் ஆசிரியையாகக் கடமையாற்றுகின்றாள்.
இரண்டு மாதங்கள் கழிந்து சம்பளம் பற்றிக் கேட்டேன். அடுத்த மூன்றாம் மாதம் தருவதாகச் சொன்னார்கள். மூன்றாவது மாதம் கேட்டேன். பணத்தை வைப்பிலிட கணக்குப் புத்தக இலக்கத்தை வாங்கிக் கொண்டார்கள். அதே நேரம் போகப் போக எனக்குச் சம்பளம் சரியாக வழங்கப்படுவதி ல்லை. சில சமயங்களில் நான் தனியாக இருந்து அழுவேன்.
கடந்த ஓகஸ்ட் மாதம் அங்குள்ள நேரப்படி இரவு எட்டு மணி அளவில் நான் மேல் மாடிக்குச் செல்லும் படியில் அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தேன். அங்கு திடீரென கணவனும், மனைவியும் வந்தார்கள். கணவன் என் முகத்தில் துணி ஒன்றைப் போட்டு மறைத்து கீழே என்னை வீழ்த்தினார்.
மனைவியின் கையில் மினு மினுத்துக் கொண்டிருந்த சிறு கம்பிகளை நான் கதறக் கதற என் உடலில் ஏற்றினார்கள். எனக்கு எதுவும் விளங்கவில்லை. அவர்களின் சிறு குழந்தை கீழே விழுந்தவுடன் என்னை விட்டுச் சென்றுவிட்டார்கள். என் கைகளிலிருந்தும் கால்களிலிரு ந்தும் இரத்தம் வந்து கொண்டிருந்தது.
அங்கே இருந்தவர்களிடம் இவ் விடயத்தைப் போய் சொன்னேன். அவர்கள் இவர்களை கடும்வார்த்தைக ளால் பேசினர். வீட்டுக்காரரின் தாயுடன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு அவர்கள் என்னை என் நாட்டுக்கு அனுப்புமாறு கோரினர். அதன்படி இலங்கை நாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்துடன் தொடர்புடைய குவைத் வேலை வாய்ப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டேன்.
அங்கு எனக்கு எந்த விதமான சிகிச்சையோ உதவியோ வழங்கப்படவில்லை. அவர்கள் இலங்கையிலுள்ள என் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தியும் தரவில்லை. அங்கு மூன்று மாதம் கழிந்த பின் கடந்த 7 ஆம் திகதி மீண்டும் காலை 5 மணிக்கு நாடு திரும்பினேன்.
இது குறித்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறங்கியவுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகப் பிரிவில் முறைப்பாடு செய்வதற்கு உடல் நிலை சீராக இல்லாததால் உடனே வீடு வந்து சேர்ந்தேன். என் பிரச்சினை அறிந்த எம் பிரதேச கிராம உத்தியோகத்தர் வீடு தேடி வந்து இது பற்றி பேசினார். பின் கொகரெல்ல பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கச் சென்றிருந்தேன்.
என்னை அனுப்ப துணையிருந்த எம் பிரதேசத்தைச் சேர்ந்த உப முகவர் அங்கு பொலிஸ் நிலையத்திற்கு வேறொரு தேவைக்காக வந்திருந்தார். அவர் இவ் விடயம் தொடர்பாக வெளிப்படுத்தினால் இந் நாட்டிலிருந்து வேலை வாய்ப்புக்காக செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவடைந்து விடும் எனவும் குறித்த முகவர் நிலையத்திற்கு பாதிப்பு ஏற்படும் என என்னை அச்சுறுத்தினார். அதையும் நான் முறைப்பாட்டில் தெரிவித்தேன்.
இதன் பின் கடந்த 9 ஆம் திகதி குருநாகல் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டேன் என்றார். இவ் விடயம் பற்றி குருநாகல் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்திய அதிகாரி எம். ரீ. எஸ். ராஜமந்திர கருத்துத் தெரிவிக்கையில் இந்தப் பெண்மணி தொடர்பாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள எக்ஸ்ரே கதிர் இயக்க ஆய்வை மேற் கொண்டபோது அவரது கைகளில் சிறிய கம்பிகள் காணப்பட்டன. அதன் பின் சத்திர சிகிச்சையின் போது இடது கையில் 8 சிறிய கம்பிகளும், இடது காலில் ஒரு கம்பியும் எடுக்கப்பட்டன எனவும் அவர் தற்பொழுது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: