நெடியவனின் முக்கியமான பணி தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பினை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே. இதில் சிறிது தூரம்வரையில் கேபியின் கைதுக்குப் பிறகு அவர் வெற்றி பெற்றிருக்கிறார். பெரும்பாலான கேபியின் விசுவாசிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டுப்பாட்டை பெறும் போராட்டத்தைக் கைவிட்டு விட்டார்கள். அதற்குப் பதிலாhக ஸ்ரீலங்காவின் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களினதும் பொது மக்களினதும் மறுவாழ்வுக்கும் மீள்குடியேற்றத்துக்கும் உதவும் கேபியின் “நேர்டோ” மூலமான முயற்சிக்கு ஆதரவு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். உருத்திரகுமாரனின் நாடு கடந்த அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கிளைகளின் பிரபல முக்கியஸ்தர்களின் ஆதரவு எதுவுமற்ற ஒரு உன்னதமான அமைப்பு. முன்னணி நிலைக்கு வந்துள்ள போதிலும் நெடியவனின் வலையமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒழுங்குணர்வை புலம் பெயர் சமூகத்திடையே கையாள்வதற்கு வெகுவாகச் சிரமப் படுகிறது. அத்துடன் மே 2009 அழிவுக்குப் பின்னும் நிதி சேகரிக்கும் முயற்சியைத் தொடர்கிறது. நெடியவன் குழுவானது பொய்கள்pன் புகலிடமாகி கற்பனைகள் கட்டுக்கதைகளை சிருஷ்டித்து கட்டுப்பாட்டை காப்பாற்றவும் பணம் சேகரிக்கவும் முயல்கிறது. இக் கதைகளின் கருப்பொருளானது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் உயிருடன் இருப்பதாகக் கூறுவது. சமீப காலத்தில் எல்லை மீறி மிகைப்பட்ட கதையாக 12,000 புலிப் போராளிகள் ஸ்ரீலங்கா மீது ஆக்கிரமிப்பு செய்யப் போவதாக ஒரு கதை உலாவியது.
இந்த முயற்சிகளுக்கு மாறாக ஒரு தமிழ் ஊடகத்தின் இடைவிடாத பிரச்சாரமாக நிதி சேகரிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்ததில் 10 – 15 விகிதமாகக் குன்றிவிட்டதாகக் கூறுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிறுவனங்களை இரவல் பெயர்களில் நடத்தும் அநேகமான பினாமிகள் அதற்குப் பொருத்தமாக இருக்கிறார்கள். சிலர் அவர்களின் பெயர்களில் வாங்கப் பட்ட புலிகளின் சொத்துக்களை விற்றுப் பணத்தை தங்கள் பை களில் போட்டுக் கொள்கிறார்கள்.
நெடியவனின் மறைகுழுவிற்கு ஏற்பட்ட ஒற்றைப் பின்னடைவு அது கடந்த காலங்களில் புலம் பெயர் தமிழர்களிடையே தமிழீழ விடுதலைப் புலிகள் முடிந்துபோன கதையல்ல செயற்பட உறுதியான ஆதரவாளர்கள் உள்ளார்கள் எனும் நம்பிக்கை மற்றும் ஆர்வத்தை ஊக்குவிக்க இயலாமற் போனதே. இந்தக் காட்சியமைப்பு எவ்வாறாயினும் உருமாறப் போகும் புதிய அபிவிருத்திகளால் மறையப் போகிறது. வெளிநாட்டு புலிகள் ஒரு புதிய தலைவரைக் கண்டு பிடித்து விட்டார்கள் போலத் தோன்றுகிறது, அவரைச் சுற்றி முக்கியமான தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் அணி திரள்கிறார்கள். அது வேறுயாருமல்ல சிரேஷ்ட கடற்புலித் தலைவர் விநாயகம்தான், அவர் பெப்ரவரி 2009 ல் நடந்த ஒரு போரில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப் பட்டிருந்தது.
சாளை
55 வது படைப் பிரிவை அப்போது தலைமையேற்று நடத்திய பிரிகேடியர் பிரசன்ன டீ சில்வா 2009 பெப்ரவரி முதல் வாரத்தில் முல்லைத்தீவு கரையோரத்தின் சாளைப் பகுதியில் அமைந்துள்ள கடற்புலிகளின் தளத்தின் மீது வெற்றிகரமான ஒரு தாக்குதலை நிகழ்த்தினார். பிரசன்னாவுக்கு பிற்பாடு 59 வது கட்டளைப் பிரிவு வழங்கப் பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதித் தாக்குதல்களை வட்டுவாகல் பகுதியில் மே 2009 ல் வழி நடத்தினார். அதைத் தொடர்ந்து ஜெனரலாகப் பதவி உயர்த்தப் பட்டார். அவர் இப்போது லண்டனில் உள்ள ஸ்ரீலங்கா உயர் தானிகராலயத்தில் சேவையாற்றுகிறார்.
2009 பெப்ரவரி 4ந்திகதி புதன்கிழமையன்று 55 – 2 பிரிகேட்டின் கெமுனு கண்காணிப்பு 4 காயலைக் கடந்து வடக்குப் புறமாக உள்ள கடற்புலிகளின் தளத்தின் மீது தாக்குதலை நிகழ்த்தியது. லெப். கேணல் சின்னக்கண்ணன் மற்றும் மேஜர். அன்னவேலன் ஆகியோர் அன்றையதினம் மரணமடைந்த புலி உறுப்பினர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். மறுநாள் படைவீரர்கள் புலிகளின் பாதுகாப்புகளை நிர்மூலமாக்கி கடற்புலிகளின் தளத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். எதிர்த்துப் போரிட்ட பெரும்பாலான தமிழீழ விடுதலைப் புலிகள் பின்வாங்கி விட்டார்கள். தாக்குதலில் மரணமடைந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டவர்களில் கடற்புலிகளின் பிரதித் தளபதி விநாயகம் மற்றும் கடற்புலித் தலைவர்கள் பகலவன், கதிர், மற்றும் கண்ணன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. கடற் புலிகள் அமைப்பில் விசேட தளபதி சூசை மற்றும் தளபதி செழியனுக்கு அடுத்ததாக மூன்றாவது தளபதியாக விநாயகம் இருந்தார் எனச் சொல்லப் படுகிறது.
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நாணயக்கார மற்றும் கடற்படைப் பேச்சாளர் கப்டன். திசாநாயக்க இருவருமே ஊடகங்களுக்கு விநாயகத்தின் மரணத்தைப் பற்றிச் சொல்லியிருந்தார்கள். அந்தச் சம்பவம் லங்காவிலும் வெளிநாடுகளிலும் விரிவாக குறிப்பிடப் பட்டிருந்தது. விநாயகத்தின் மரணத்தைப் பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுத் தொடர்புகளைக் கண்காணித்தது மூலம் அறியப் பட்டதாகக் கூறப்பட்டது. அவரது உடல் கண்டுபிடிக்கப் படவில்லை என மேலும் கூறப்பட்டது.
விநாயகத்தின் மரணத்தைப் பற்றி தமிழீழ விடுதலைப் புலிகள் அச்சமயம் உறுதிப் படுத்தவுமில்லை, மறுக்கவுமில்லை. ஆனால் கிளிநொச்சி வீழ்ச்சியுற்றதன் பின்பு தமிழீழ விடுதலைப் புலிகள் போர்முனைச் செய்திகளை முறையாக ஒலிபரப்புச் செய்வதை நிறுத்தியிருந்தார்கள். அவர்கள் மேலும் போரில் மரணமடைந்த போராளிகளை பகிரங்கமாகக் கௌரவிப்பதை நிறுத்தியதுடன் மட்டுமல்லாது புலிகளின் மரணங்கள் பற்றி அரசு வெளியிடும் அறிக்கைகளை மறுப்பதையும் நிறுத்தியிருந்தார்கள். அதன் பிறகு விநாயகத்தைப் பற்றி எதுவும் கேள்விப் படவில்லை என்பதுடன் சிரேட்ட கடற் புலித் தளபதி விநாயகம் உயிருடன் இல்லை எனப் பொதுவாக அனுமானிக்கப் பட்டது.
மைக் போர்
பார்க்கும் போது அது அப்படியில்லை. இப்போது சொல்லப்படுவது சாளை கடற்புலித் தளத்தில் நடந்த சண்டையில் விநாயகம் கொல்லப் படவில்லை என்று. இப்போது சொல்லப்படும் கதையானது, விநாயகம் இரகசியமாக இந்தியாவுக்கு ஒரு மறைவான ஒப்படைப்புக்கு வேண்டி சாளை கடற்புலித் தளம் வீழ்ச்சியடைவதற்கு சில வாரங்கள் முன்பே அனுப்பப்பட்டு விட்டதாக. விநாயகத்தின் தொடர்பை அடையாளம் காணும் சங்கேத வார்த்தை “மைக் போர்”. புலிகள் வேண்டுமென்றே தங்களின் தொடர்பாடல்களை கண்காணிக்கும் இராணுவத்தினை தவறாக வழிநடத்த வேண்டி மைக் போர் கொல்லப் பட்டதாக நம்பவைத்தார்கள். இப்போது சாட்டப்படுவது பாதுகாப்பு படையினர் ஏமாற்றப்பட்டு 3வது கடற்புலித் தளபதி விநாயகம் கொல்லப் பட்டதாக முழு உலகுக்கும் அறிவித்து விட்டார்கள் என்று.
விநாயகம் இந்தியாவுக்கு அனுப்பட்டதின் குறிக்கோள் என்ன என்று தெரியவில்லை. ஆனால் கூறப்படுவது என்னவெனில் அவரிடம் அந்த ஒப்படைப்பு பணி புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானால் புலிகளின் தலைவர் பிரபாகரனின் அனுமதியுடன் ஒப்படைக்கப் பட்டதாக.
ஆனால் விநாயகம் கடற்புலி பிரிவிலிருந்து புலனாய்வுப் பிரிவுக்கு பிரபாகரனின் விளக்கமான அறிவுறுத்தல் பிரகாரம் ஜனவரி 2009 ல் மாற்றப்பட்டதாகவும் மற்றும் அவர் வசம் இந்தியாவுக்கான பணி ஒப்படைக்கப் பட்டதாகவும் தெளிவாக தெரியவருகிறது.
திரும்பவும் அறியப்படாதது என்னவெனில் இந்தியாவில் நடைமுறைப் படுததும்படி விநாயகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்ட பணியினை எவ்வாறு அல்லது எவ்வளவு தூரம் செய்து முடித்தார் என்பதுதான். ஆனால் 2009 மேயில் நடந்த புலிகளின் விரிவான இராணுவத் தோல்விக்குப் பின்னர் விநாயகம் இந்தியாவை விட்டு வெளியேறி சில காலங்களை தென்கிழக்காசிய நாடொன்றில் கழித்த பின்னர் ஐரோப்பாவை அடைந்து விட்டார்.
அவர் இப்போது ஒரு நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். வெளிநாட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் 2009 பெப்ரவரியில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட கடற்புலிகளின் சிரேஷ்ட தலைவர் கேணல் விநாயகம் உயிரோடு உள்ளார், அவர் ஐரோப்பாவிலுள்ளார் எனக் கூறியபோதிலும், இந்தக் கோரிக்கை பற்றி சில பகுதிகளிலிருந்து சந்தேகங்கள் எழுப்பப் படுகின்றன. சிலர் சந்தேகிப்பது என்னவெனில் தமிழீழ விடுதலைப் புலிகள் விநாயகத்தின் பெயரில் வேறு ஒருவரை ஐரோப்பாவில் விருத்தி செய்து தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக அறிவித்திருப்பதாக,
விநாயகம் என்கிற பெயர் பிள்ளையார் அல்லது கணேஷ் என்கிற யானைத் தலையுடைய இந்து இறைவேதக் கடவுளை குறிக்கிறது. சில அருமையான பக்திப் பாடல்கள் சிவன்; பார்வதியின் மூத்தமகனும் முருகக் கடவுளின் மூத்த சகோதரனுமான விநாயகனுக்கு அர்ப்பணிக்கப் பட்டிருக்கின்றன.(எனக்கு விருப்பமான பாடல்“விநாயகனே வினை தீர்ப்பவனே” எனும் சீர்காழி கோவிந்த ராஜனின் பாடல் இந்துக்கள் பொதுவாக எந்தக் காரியத்தை தொடங்கும் முன்பு அல்லது பயணங்களை ஆரம்பிக்கும் முன்பு விநாயகனை அல்லது பிள்ளையாரை வணங்கிய பின்பே ஆரம்பிப்பார்கள்.
விநாயகம்
விநாயகம் என்கிற பாவனைப் பெயருடைய கடற்புலிகளின் தலைவர் யாழ்குடாநாட்டின் வடமராட்சி கிழக்கு பிரிவில், உடுதுறைப் பகுதியில் உள்ள மருதங்கேணியில் உள்ள கடற் தொழில் புரியும் குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் இடது கண்ணின் பார்வைத் தடங்கலினால் அவதிப்படுபவர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புக்கு அருகில் உள்ள வல்லிபுனம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
விநாயகம் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்தது அவரது பதின்ம வயதில். கடந்த நூற்றாண்டின் எண்பதுகளின் பிற்பகுதியில் அவர் ஸ்ரீலங்காவின் வடபகுதியில் தனது உள்ளுர் பயிற்சியைப் பெற்றபின் முதலில் பணிபுரிந்தது தமிழீழ விடுதலைப் புலிகளின் தென்மராடசிப் பகுதியான சாவகச்சேரியில். அப்போது முன்னாள் புலிகளின் அரசியல் ஆணையாளர் சுப்பையா பரமு தமிழ்ச்செல்வன், தினேஷ் என்கிற பாவனைப் பெயரில் தென்மராட்சி பொறுப்பாளராக இருந்தார். முன்னாள் விளையாட்டுப் பகுதித் தலைவர் பாப்பா அவருக்கு இரண்டாவதாக இருந்தார்.
விநாயகம் பிறகு தொண்ணூறுகளில் பொட்டு அம்மானின் கீழ் புலனாய்வுப் பகுதிக்கு மாற்றப்பட்டார். விநாயகம் இயங்கியது பொட்டு அம்மானின் மூதாதையர் வாழ்ந்த அரியாலை நாயன்மார்கட்டுப் பகுதியில் ஆனந்த வடலி வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு அருகாமையிலிருந்து. அதனால் அப்போது அவர் பொட்டு அம்மானுடன் மிகவும் நெருக்கமானார்.
கடற்புலிகள் பிரிவு தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தில்லையம்பலம் சிவநேசன் என்றழைக்கப்படும் சூசையின் கீழ் விரிவு படுத்தப்பட்ட போது விநாயகம் அந்தப் பிரிவுக்கு மாற்றப் பட்டார். அந்தக் கடற்புலிகள் பிரிவில்தான் விநாயகம் தனது அடையாளத்தைப் பதித்தார். அவர் துணிவுள்ளதும் புத்திக் கூர்மையுடன் சாதுரியமாகச் செயலாற்றும் ஒரு போராளியாகக் குறிப்பிடப்பட்டார். விநாயகம் தனது பணிநிலைகளில் உறுதியாக உயர்ச்சி பெற்றார்.
2002ல் யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்த போது விநாயகமும் ஐரோப்பாவைச் சுற்றி வந்த புலிகளின் தூதுக் குழுவில் ஒருவராக போலிக் கடவுச்சீட்டில் பயணம் செய்தார்.அவர் பல்வேறு கப்பல் பட்டறைகளுக்கும் விஜயம் செய்து பல்வேறு விதமான கப்பல் கலங்களைப் பரிசோதித்து தனது நேரத்தைச் செலவிட்டார். கடற் புலிகளின் விசேட தளபதி சூசைக்கும் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மானுக்கும் இடையில் உள்ள போட்டி தமிழீழ விடுதலைப் புலிகளின் சுற்று வட்டாரத்தில் நன்கு பிரபலமானது. பொட்டு அம்மானுடனும் சூசையுடனும் சீரான நல்லுறவை பேணி வந்த கடற்புலிகளின் உயர் மட்ட உத்தியோகத்தர்களில் விநாயகமும் ஒருவர்.
2007ல் கடலில் ஒரு விபத்து ஏற்பட்டு சூசையின் இளைய மகன் கொல்லப் பட்டதுடன் சூசைக்கும் காயம் ஏற்பட்டு சிறிது காலம் காட்சிக்குத் தென்படாமல் இருந்தார். இது வதந்தித் தொழிற்சாலைகளுக்கு மேலதிக நேர வேலை கொடுத்தது, ஊடகங்களில் பொட்டு அம்மான் சூசையை அகற்றி விட்டதாகவும் சூசையைப் பற்றி இனி கேட்கவே முடியாது என்று பல ஊகங்கள் வெளியாயின. இது வெளிநாடுகளிலுள்ள சூசையின் விசுவாசிகளுக்கும் பொட்டுவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் அதிக குழப்பத்தையும் ஏன் உராய்வினைக் கூட ஏற்படுத்தியது.
இந்தச் சமயத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் சேதத்தைத் தடுக்கும் முயற்சியாக மௌனத்தைக் கலைத்தார்கள். சூசை விபத்தில் சிக்கியதாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த நிகழ்ச்சி கடற்புலிகளின் தொடர் வெளியீடான ஒரு ஒளிப்பதிவு நாடா இல.11 வெளியீட்டு விழாவாக இருந்தது. அதில் சிரேட்ட கடற்புலித் தளபதி விநாயகம் தனது பேச்சில் விபத்தைப் பற்றிக் குறிப்பிட்டு சூசை விரைவாகக் குணமாகி வருவதாகவும் கூறினார். வைத்தியசாலையில் இருந்தபடியே சூசைதான் இந்த ஒளிப்பதிவு நாடா வெளியீட்டைத் திட்டமிட்டதாக விநாயகம் கூறினார். சூசை பகிரங்கமாக விரைவில் தோன்றுவார் என அவர் முன்கூட்டியே தெரிவித்தார். விநாயகம் தெரிவித்த படி சூசை சில வாரங்கள் கழித்து செப்டம்பர் 2007 ல் தோன்றினார்.
செயல் முறைகள்
விநாயகம் தமிழீழ விடுதலைப் புலிகள் மத்தியில் முக்கியத்துவமும் மதிப்பும் பெற்றது ஜூலை 9 1997ல் புல்மோட்டைக்கு வெளியே “எம்.வி.கோடியாலிற்றி” கப்பல் தாக்குதலை வழிநடத்திய போதுதான். பனாமாவில் பதிவு செய்யப்பட்ட சீனப் பணிக்குழுவினைக் கொண்ட கப்பல் ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் பெரிய அளவிலான
இல்மனைட் கனிப் பொருளை ஏற்றிச் செல்வதற்காக ஒப்பந்தம் செய்யப் படடிருந்தது. அது தமிழீழ விடுதலைப் புலிகளின் கொமாண்டோ பிரிவான சிறுத்தைகளுடன் கூட்டாகச் சேர்ந்து நடத்தப் பட்ட தாக்குதல் ஆகும். கடற்படையினரின் சிறு கப்பற்படை கப்பலுக்கு பாதுகாப்பு வழங்கி வரும்போது கடற்புலிகளாலும் சிறுத்தைகளாலும் தாக்குதல் நிகழ்த்தப் பட்டது. மூன்று கடற்படை பீரங்கிப் படகுகள் சேதமடைந்ததாகவும் ஒன்று அழிக்கப் பட்டதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரியிருந்தனர். புலிகளால் நிலத்தில் நடத்தப் பட்ட இரண்டு பாரிய தாக்குதல்களுக்கு கடல் வழியாகப் போராளிகளை ஏற்றிச் சென்றதில் விநாயகம் முக்கிய பங்கினை வகித்துள்ளார்.
இல்மனைட் கனிப் பொருளை ஏற்றிச் செல்வதற்காக ஒப்பந்தம் செய்யப் படடிருந்தது. அது தமிழீழ விடுதலைப் புலிகளின் கொமாண்டோ பிரிவான சிறுத்தைகளுடன் கூட்டாகச் சேர்ந்து நடத்தப் பட்ட தாக்குதல் ஆகும். கடற்படையினரின் சிறு கப்பற்படை கப்பலுக்கு பாதுகாப்பு வழங்கி வரும்போது கடற்புலிகளாலும் சிறுத்தைகளாலும் தாக்குதல் நிகழ்த்தப் பட்டது. மூன்று கடற்படை பீரங்கிப் படகுகள் சேதமடைந்ததாகவும் ஒன்று அழிக்கப் பட்டதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரியிருந்தனர். புலிகளால் நிலத்தில் நடத்தப் பட்ட இரண்டு பாரிய தாக்குதல்களுக்கு கடல் வழியாகப் போராளிகளை ஏற்றிச் சென்றதில் விநாயகம் முக்கிய பங்கினை வகித்துள்ளார்.
ஒன்று பிரபலமான கரையோர இறக்கம்,வடமராட்சி கிழக்குக் கரைக்கு அப்பால் மாமுனை – குடாரப்பு பகுதியில் ஏப்ரல் 2000ல் பிரிகேடியர் பால்ராஜினால் நடத்தப் படும் ஒரு அதிரடிப் படையினரை கடற்புலிகள் கொண்டுவந்து கரை இறக்கினர். பின்னர் பால்ராஜ் உட்புறமாக நகர்ந்து ஒரு சரித்திரப் பிரசித்தி பெற்ற போரில் ஏ-9 பாதை அல்லது யாழ் - கண்டி வீதியில் இத்தாவில் பகுதியில் வைத்து அரச படைகளுக்கான வழங்கல்களைத் துண்டித்தார். இதனால் ஆனையிறவு மற்றும் இயக்கச்சி முகாம்களிலுள்ள அரச படைகள் முற்றாகத் துண்டிக்கப் பட்டன, இதன் விளைவாக இரண்டு முகாம்களும் புலிகளிடம் வீழ்ந்தன.
அடுத்தது விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்பட்ட கேணல் கருணா தலைமையிலான கிழக்குப் போராளிகளின் கிளர்ச்சியை முறியடிக்க ஏப்ரல் 2004 ல் நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டம். தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்து போராளிகளை படகுகளில் ஏற்றி கடல் வழியாக அவர்களை கிழக்கின் பல இடங்களுக்கும் பால்சேனை – வாகரை மற்றும் திருக்கோவில் கரையோரங்களில் இறக்கினர். கடற்புலிகளின் இந்த வெற்றிகரமான படகு வழியான இறக்கம் கருணாவின் கலகக்கார கும்பலை வெற்றி கொள்ள மிகப் பெரிய உதவியாக இருந்தது.
இன்னும் சொல்லப் படுவது சீனாவின் ஆழ்கடல் மீன்பிடிக் கப்பலான “பியு யுவான் யா 225” மீதான 2003 மார்ச் 20ல் நடத்தப்பட்ட தாக்குதலையும் விநாயகமே நடத்தியதாக.இத் தாக்குதலில் 15சீனர்கள் 2ஸ்ரீலங்கன்கள் உட்பட குறைந்தது 17கப்பல் பணியாளர்கள் கொல்லப் பட்டார்கள். அப்போது யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப் பட்டதால் இது அப்பட்டமான ஒரு மீறலாகக் கருதப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் வெட்கமின்றி அதன் உத்தரவாதத்தை மறுதலித்தார்கள்.
விநாயகத்தின் மற்றோர் வீரச் செயல் மே 2006ல் “எம்.வி பேர்ள் குருஷி 2” கப்பலுக்கு பாதுகாப்பு வழங்கி வந்து கொண்டிருந்த கடற்படையினரின் சிறு கப்பல் படையைத் தாக்கியது. இந்த வணிகக் கப்பலானது வடக்குக்கு அனுப்பப் பட்ட 710 பாதுகாப்பு படையினரை ஏற்றிக் கொண்டு வந்திருந்தது. பருத்தித்துறை கரைக்கு அருகில் நடந்த கடற் போரில் கடற்படைக்குச் சொந்தமான ஒரு டிவோரா பீரங்கிப் படகு(P- 418) முற்றாக நிர்மூலமாக்கப்பட்டு அதிலிருந்த கப்பல் பணியாளர்கள் எல்லோரும் கொல்லப் பட்டனர்.மற்றொரு டிவோரா பீரங்கிப் படகு (P-420) பலத்த சேதமடைந்தது.
விநாயகம் கடற்புலி பிரிவில் எதிர் தாக்குதல் தளபதி பதவி உட்பட பல்வேறுபட்ட தரத்திலான பதவிகளை வகித்துள்ளார். அவர் கடற்புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாகவும் இருந்து பொட்டு அம்மானுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் கடற்புலிகளின் பொறுப்பாளராக மேற்கு மற்றும் வடக்கு – மேற்கு கரையோரப் பகுதியில் கடமையாற்றியுள்ளார். இந்தக் காலப்பகுதியில்தான் 24மே 2007 ல் நெடுந்தீவில் கடற்புலிகள் வெற்றிகரமான ஒரு கூட்டுத் தாக்குதலை நிகழ்த்தினார்கள். இதை விநாயகமே திட்டமிட்டு கூட்டுச்சேர்ந்து படைநடத்தி தாக்குதல் நடத்தினார். தீவின் கடற்கரையிலிருந்து தூரத்தில் அமைந்திருந்த கடற்படையினரின் சாவடி தாக்கப்பட்டு புலிகளால் இரண்டு விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள், இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள், ஒரு ஆர்.பி.ஜி.லோஞ்சர், எட்டு கைத்துப்பாக்கிகள் ஆகியன இந்த நெடுந்தீவு தாக்குதலில் கைப்பற்றப் பட்டன. இதற்கு மேலதிகமாக நெடுந்தீவில் பொருத்தப் பட்டிருந்த ராடர் கருவியையும் புலிகள் எடுத்துச் சென்றார்கள்.
சுவடுகளின் பதிவுகள்
சிலவேளைகளில் கடற்புலிகளின் சிரேஷ்ட தளபதியின் இந்தச் சுவட்டுப் பதிவுகள்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்மட்டத்தின் நம்பிக்கைக்கு விநாயகத்தைப் பாத்திரமாக்கி 2009 ன் தொடக்கத்தில் அவரை இரகசிய ஒப்படைக்காக இந்தியாவுக்கு அனுப்ப வைத்திருக்கலாம். விநாயகம் ஐரோப்பாவில் திரும்பவும் காணப்பட்டது 2009 மே பேரழிவுகளின் பின்னரே எனத் தெரிகிறது.
இதில் முக்கியமானது இதன் காரணம் எப்படியாயினும் விநாயகம் மேற்கத்தைய நாடொன்றில் புகலிடம் கோரியபின் சாதாரணமாகப் பொய்கூறி மனநிறைவடையப் போவதில்லை. அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தினர்கள் மற்றும் முன்னாள் அங்கத்தினர்கள் எல்லோருடனும் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார். மேலும் கடினமான முயற்சிகளில் முயன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களுக்கு உயிரூட்டுவதில் ஈடுபடுவார். விநாயகம் இப்போது கோருவது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பொறுப்பையா அல்லது அதனிடம் எஞ்சியிருக்கிற ஏதாவது ஒன்றையா?
மேலும் தெரியவருவது விநாயகம் நெடியவனுடன் நல்லுறவுடன் வேலை செய்யக்கூடிய தொடர்பைக் கொண்டிருக்கிறார். நெடியவனும் கடற்புலித் தளபதியைச் சுற்றி அணிசேரக் கூடியதாக நிலமையை விருத்தியாக்கி வருகிறார். விநாயகத்தின் சுறுசுறுப்பான போர் அனுபவங்களும் மற்றும் திறமையான கடற் தளபதி என்கிற மதிப்பு மிக்க சொத்துக்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளிலுள்ள பருந்துகளைப் போன்ற புலி ஆதரவாளர்களிடையே கவர்ச்சிகரமான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தலாம்.
நெடியவனின் கண்ணோட்டமானது தனது நிலைக்கு எந்த அச்சுறுத்தலும் வராதபடி கேணல். விநாயகம் உடைய தோற்றம் வெளிநாடுகளிலுள்ள ஒழுக்கமற்ற புலிச் செயற்பாட்டாளர்களை முலாம்பூசி நடமாட வைக்கும் என்பதாகும். எனவே நெடியவன் கூட விநாயகத்தை புதிய தலைவராக தரமுயர்த்த முயல்வார். நெடியவனும் விநாயகமும் ஒன்று சேர்ந்து வெளிநாட்டிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் குழவாக்கவும் உயிரூட்டவும் முயற்சி செய்து நிறைவேற்றி முடிப்பார்களா?
நாடுகடந்த அரசாங்கம் மற்றும் குளோபல் தமிழ் அமைப்பு இவற்றைக் கொண்ட முதலாவது வகையான தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான கட்டமைப்பு தனது பணியை தொடர்வது முற்றிலும் ஒப்பீடு சார்ந்த வெளிப்படையான நவீன நிகழ்ச்சித் திட்டத்தினூடாக. இரண்டாவது வகையான நெடியவனின் வலையமைப்பு மற்றும் விநாயகத்தின் ஆட்சியின் கீழான தமிழீழ விடுதலைப் புலி அங்கத்தினாகளைக் கொண்டது படிப்படியாக “உண்மையான தமிழீழ விடுதலைப் புலிகளாகத்” தோன்றி மிகவும் தீவிரமான நிகழ்ச்சித் திட்டங்களை நிறைவேற்றக் கூடும். அநேகமான தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் மற்றும் முன்னாள் அங்கத்தவர்கள் நெடியவனையோ அல்லது மற்றாரையும் விடவும் விநாயகத்தையே அதிகம் விரும்புவார்கள், விநாயகத்தை புதிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக்க மேடை தயாராக உள்ளது.
பங்காளித்துவம்
விநாயகம் இதில் விருப்பமற்றவராக காணப்படவில்லை, ஆனால் அவர் தற்போது வெளிச்சத்துக்கு வருவதை விரும்பவில்லை. அவர் விரும்புவது புலி ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஊடாக ஆரவாரமில்லாமல் இருவர் ஓட்டும் மிதிவண்டியைப் போல நெடியவனுடன் கூட்டுச் சேர்ந்து தளத்தகைமையான ஒரு பங்காளித்துவத்தை அமைக்கவே. ஏற்கனவே விநாயகம் அமைதியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள். செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு தான் உயிரோடு இருப்பதாகவும் பொறுப்பேற்கப் போவதாகவும் கூறி வருகிறார். அவர் மேலும் சொல்லுவது என்னவெனில் எல்லாம் முடிந்து போகவில்லை கெதியாய் ஏதோ நடக்கப் போகுது” என்று.
சுவராஸ்யமான விடயமாக முன்பு கூறியதைப்போல சில சூழல்களில் விநாயகத்தின் உண்மையான அடையாளத்தைக் குறித்து சந்தேகங்கள் எழுப்பப் படுகின்றன.வெளிநாட்டுப் புலிகளிடையே பல விதமான எண்ணங்கள் உள்ளன. அவர்கள் நம்புவது சிரேஷ்ட கடற்புலித் தலைவர் விநாயகம் பெப்ரவரி 2009 ல் சாளையில் நடந்த இராணுவத் தாக்குதலில் நிச்சயமாக கொல்லப்பட்டு விட்டார், ஐரோப்பாவில் வந்திறங்கியுள்ளவர் வேறு ஒரு ஆள். இவர் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் ஏதோ ஒரு உயர்தர பதவி வகித்திருக்கலாம் என்று.
இந்தப் பார்வையின்படி பார்த்தால் புலனாய்வுப் பகுதி விநாயகம் பிரபாகரனின் கட்டளைப்படி பொட்டு அம்மானால் ஒரு விசேட ஒப்படைப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின் ஐரோப்பாவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளார். இதில் நம்பப் படுவது அவர் இப்போது ஒரு புதிய தலைவராக ஐரோப்பாவில் தோன்றி நெடியவனினதும் அவருடைய வலையமைப்பினதும் முழு ஆதரவுடன் புலிகள் இயக்கத்தை மீள்குழுக்களாக்கி உயிர் கொடுக்க முயற்சிக்கிறார்.
புலனாய்வுப் பகுதி விநாயகத்தை சிரேஷ்ட கடற்புலித் தலைவர் விநாயகமாகச் சித்திரம் தீட்ட முயற்சிப்பது குழப்பத்தை உருவாக்க வேண்டுமென்றே நகர்த்தப்பட்ட முயற்சி என நம்பப்படுகிறது. விநாயகத்தின் அடிச்சுவட்டின் பின்னுள்ளவர்களைத் தவறாக வழி நடத்துவது மட்டுமன்றி இந்த அடையாளங்களை கலவையாக்குவது பிரபாகரன் உயிரோடிருக்கிறார் எனும் கட்டுக்கதைக்கு மேலும் உரமூட்டுவது போலாகிவிடும்.
2009 பெப்ரவரியில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட விநாயகம் உயிரோடிருந்து ஐரோப்பாவுக்கு வந்திருந்தால், மே 2009ல் இறந்ததாக அறிவிக்கப் பட்ட தலைவர் பிரபாகரனும் உயிரோடிருந்து தோன்றக் கூடும் என்பதும் விவாதத்துக்குட்பட்டது.
இந்தப் பார்வைகளில் அதாவது கடற்புலித்தலைவர் விநாயகம் கொல்லப்பட்டு விட்டார், மற்றும் ஐரோப்பாவில் உயிரோடிருப்பது புலிகளின் புலனாய்வுப் பகுதியைச் சேர்ந்த மற்றொருவர் என்பதில் என்ன உண்மையிருந்தாலும், விநாயகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக வெளிப்படுத்தப்பட்டது, நெடியவனின் பின்பலத்தோடுதான் என்பதில் எந்த சந்தேகமில்லை. இதிலிருந்து உணர்வது நெடியவனும் விநாயகமும் பரஸ்பரம் ஆதாயம் தேடும் தளத்தகையான பங்காளித்துவத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதே.
நெடியவனுக்கும் விநாயகத்துக்கும் இடையிலுள்ள தளத்தகையான பங்காளித்துவத்தின்நடப்பாக்கலையும் மற்றும் இதனால் தமிழ் புலம் பெயர்ந்தவர்களுக்கும், ஸ்ரீலங்காவில் வாழும் தமிழர்களுக்கும், அத்தோடு பாதுகாப்பு நிலைகளில் உண்டாகக் கூடிய எதிர் தாக்கங்களையும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றியும் இனி வரும் கட்டுரைகளில் விரிவாக ஆராய்வோம்
தமிழில்: எஸ்.குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக