

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை தமிழகம் அமல்படுத்தினால் தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் 25% இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறது.
இதை நேற்று (ஜூலை 2) சுட்டிக்காட்டி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். “மத்திய அரசு அளிக்கும் 25% சலுகை என்பது மெல்லக் கொல்லும் விஷம் போன்றது. எனவே இந்த மயக்கத்திலும், கவர்ச்சியிலும் தமிழகம் ஏமாந்துவிடக் கூடாது” என்று கேட்டுக் கொண்டார் அவர்.
காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் இந்த விவகாரம் குறித்து பேசியபின் பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “10% இட ஒதுக்கீட்டை தமிழகம் அமல்படுத்தினால், ஆயிரம் எம்.பி.பி.எஸ் இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும். அதில் மத்திய ஒதுக்கீட்டுக்கு 150 இடங்கள் போல தமிழகத்துக்கு 850 இடங்கள் கிடைக்கும். அதில் பொதுப் பிரிவுக்கு 264 இடங்கள் போக, 69 % இட ஒதுக்கீட்டுக்கு 856 இடங்கள் கிடைக்கும். இதற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த 5 ஆண்டுகள் வரை சலுகை வழங்கப்படும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் கூறியிருப்பதை இந்தப் பேரவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். இதுகுறித்து அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.
விஜயபாஸ்கரை அடுத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், “இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்.
வெளிப்படையாக அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கு முன்பே இந்த விவகாரத்தில், அரசியல் கட்சித் தலைவர்களை ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
“10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதன் மூலம் கிடைக்கும் கூடுதல் இடங்களால் தமிழக அரசுத் தரப்பினருக்கு ஆதாயங்கள் கிடைக்கும் என்பதாலும், பாஜகவின் வற்புறுத்தலாலும் இதை ஏற்கும் மனநிலையில் இருக்கிறது அரசு. இதைஒட்டி வெளிப்படையாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதற்கு முன்பே சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைவரையும் அதிகாரபூர்வமற்ற முறையில் சந்தித்து இதுபற்றிய விவரங்களை எடுத்துச் சொல்லி ஆதரவு திரட்டி வருகிறார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் ஆகியோரை சந்தித்துப் பேசியிருக்கும் விஜயபாஸ்கர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். திமுக மாவட்டச் செயலாளர்களில் சிலர் இந்த இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், திமுக தலைவரிடமும் இதுபற்றி பேச முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அனைத்துக் கட்சிக் கூட்டம் நடப்பதற்குள் இது தொடர்பாக ஒருமித்த கருத்தை உருவாக்கவே விஜயபாஸ்கர் இந்த தலைவர்களின் சந்திப்பை நடத்திவருகிறார்” என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
10% இட ஒதுக்கீட்டுக்கு காங்கிரஸ்,கம்யூனிஸ்டுகளிடம் இருந்து எதிர்ப்பு இல்லை. மார்க்சிஸ்ட் எம்.பி. ரங்கராஜன் இதற்கு ஆதரவு தெரிவித்து மாநிலங்களவையில் பேசினார். அப்போதுதான், ‘என்னங்க இது அநியாயம்?’ என்று திமுக உறுப்பினர் கனிமொழி கேள்வி கேட்டார். அதிமுக வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்தது. திமுக இதை மாநிலங்களவையில் எதிர்த்தது. இட ஒதுக்கீட்டை எதிர்த்து திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக