செவ்வாய், 2 ஜூலை, 2019

வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் .. மதிமுக உயர்மட்ட குழுவில் ஏகமனதாக தெரிவு

BBC : தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்
அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுவார் என அக்கட்சியின் உயர்மட்டக்குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவையில் 18 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் தி.மு.கவைச் சேர்ந்த கனிமொழி, அதி.மு.கவைச் சேர்ந்த அர்ஜுனன், ஆர். லட்சுமணன், வி. மைத்ரேயன், டி. ரத்தினவேல், சி.பி.ஐயைச் சேர்ந்த டி. ராஜா ஆகிய ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவுக்கு வருகிறது.
புதிய உறுப்பினர்களைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு ஜூலை 1ஆம் தேதி துவங்கியது. தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள பலத்தின் அடிப்படையில், ஆளும் அ.தி.மு.கவுக்கு மூன்று மாநிலங்களவை உறுப்பினர் இடங்களும் தி.மு.கவுக்கு மூன்று மாநிலங்களவை உறுப்பினர் இடங்களும் கிடைக்கும்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின்போது, ஒரு மாநிலங்களவை இடத்தை வைகோ தலைமையிலான ம.தி.மு.கவுக்கு அளிப்பதாக தி.மு.க. வாக்களித்திருந்தது. அதன்படி, ஓரிடம் ம.தி.மு.கவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக் குழு, ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், ம.தி.மு.கவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்பாக, 1978 முதல் 1996வரையிலான காலகட்டத்தில் தி.மு.க. சார்பில் வைகோ நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டு, செயல்பட்டார்.

கருத்துகள் இல்லை: