வெள்ளி, 5 ஜூலை, 2019

வைகோ கடும் எதிர்ப்பு: தீர்ப்பை திருத்திய நீதிபதி!

வைகோ கடும் எதிர்ப்பு: தீர்ப்பை திருத்திய நீதிபதி!மின்னம்பலம் : 2019 ஜூலை 5 காலை முதலே, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வரவுக்காக ஏராளமான மதிமுக நிர்வாகிகளும், மதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் சென்னை எம்.பி,.எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் காத்திருந்தார்கள்.
சரியாக 10.20க்கு தேவதாஸ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் புடைசூழ வந்தார் வைகோ. சட்டெனெ அவரைச் சுற்றி மதிமுக வழக்கறிஞர்கள் பலர் வளையம் அமைத்தனர். தேவதாஸ், நன்மாறன், செந்தில், தென் சென்னை மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி, ஆவடி அந்திரிதாஸ், பொடா அழகு சுந்தரம், தூத்துக்குடி மாசெவான புதுக்கோட்டை செல்வம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் வைகோவை சுற்றி நின்றனர்.
இருபது ஆண்டுகளுக்குப் பின் தங்கள் தலைவர் எம்.பி.யாக முடியுமா என்பதை தீர்மானிக்கும் தீர்ப்பு என்பதால் மதிமுகவினர் ஒவ்வொருவருக்குள்ளும் பதற்றம் மையம் கொண்டிருந்தது. அவர்களை நோக்கித் தனது வழக்கமான புன்னகையை உதிர்த்தபடியே கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள நீதிமன்றத்துக்குள் நுழைந்தார் வைகோ.

2009 ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில், ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற வைகோவின் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகங்கள் பற்றி வைகோ அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்த மனுக்களின் தொகுப்புதான் அந்த நூல்.
இதில் பேசிய வைகோ இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துகளைப் பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்டு தேச துரோக வழக்குத் தொடுக்கப்பட்டது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் அமைக்கப்பட்ட பின் இந்த வழக்கு இந்த நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சாந்தி விசாரித்து வரும் இந்த வழக்கில் கிட்டத்தட்ட அனைத்து வாய்தாக்களிலும் ஆஜரான வைகோ கடந்த ஜூன் 17 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானபோது ஜூலை 5 தீர்ப்பு என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படியே இன்று காலை 10.30 க்கு நீதிமன்றத்துக்குள் நுழைந்து அமைதியாகக் காத்திருந்தார் வைகோ. சரியாக 10.40க்கு நீதிபதி சாந்தி நீதிமன்றத்துக்கு வந்தார். அனைவரும் எழுந்து மரியாதை செலுத்தினர். முதல் இரண்டு வழக்குகளுக்குப் பின் மூன்றாவது வழக்காக வைகோவின் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிபதியின் முன் வைகோ நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தார். நீதிமன்றம் நிசப்தமானது.
‘உங்கள் மீதான தேச துரோகக் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியிருக்கிறது. நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டார் நீதிபதி சாந்தி. இதைக் கேட்டு வழக்கறிஞர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
சற்றும் தாமதிக்காமல் வைகோ, ”என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ இப்போதே கொடுத்துவிடுங்கள்” என்றார் வைகோ.
இதையடுத்து நீதிபதி, “ஒருவருடம் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது” என்று தண்டனையை மட்டும் வாசித்துவிட்டு தீர்ப்பின் நகலை வைகோவின் வழக்கறிஞர்களிடம் கொடுத்தார்.
தண்டனை விதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று ஏற்கனவே மேற்கொண்ட ஆலோசனையின் பேரில் உடனடியாக வைகோவின் வழக்கறிஞர் டீம் பத்தாயிரம் அபராதத்தை செலுத்திவிட்டு, தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ஒரு மனுவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதெல்லாம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, வழக்கறிஞர் தேவதாஸ் அங்கேயே தீர்ப்பினைப் படித்துப் பார்க்க ஆரம்பித்தார். அவர் ஒரு கட்டத்தில் வைகோவிடம் தீர்ப்பின் சில வரிகளை சுட்டிக் காட்ட வைகோவின் முகம் சிவந்தது.
காரணம், ‘தனக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கி கருணை காட்டுமாறு குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பில் கேட்டுக் கொண்டபடி...’ என்ற பொருள் படும் வாசகத்தை தீர்ப்பில் பார்த்துவிட்டார் வைகோ.
உடனே கையில் தீர்ப்பு நகலை வைத்துக் கொண்டு நீதிபதியிடம், ‘அம்மா... நாங்கள் எந்த இடத்திலும் எனக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கும்படி உங்களிடம் ஒரு நாளும் கோரிக்கை வைக்கவில்லையே... வாதாடவில்லையே.. ஆனால் தீர்ப்பில் நான் குறைந்த பட்ச தண்டனை கேட்டதாக குறிப்பிட்டுள்ளீர்களே...? இது நீதிபதியின் எண்ணத்தில் இருக்கும் விஷத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது’ என்று சொன்னதும் நீதிபதி சாந்தி அதிர்ச்சியாகிவிட்டார். ஏனெனில் நீதிமன்றத்தில் இதுவரை யாரும் இப்படி அவரைக் கேள்வி கேட்டதில்லை.
உடனடியாக சில ஆவணங்களை எடுத்துப் பார்த்தவர், ‘ஆமாம்... நீங்கள் குறைந்த பட்ச தண்டனை தர சொல்லி கேட்கவில்லை. நான் உடனடியாக தீர்ப்பைத் திருத்திவிடுகிறேன்’ என்று சொல்லி அந்த சர்ச்சைக்குரிய வாசகங்களை தன் கைப்பட அடித்து அதில் தன் கையெழுத்தையும் இட்டு நீதிமன்றப் பணியாளர்களிடம் கொடுத்தார். இதெல்லாம் நடந்து முடிவதற்கு அரைமணி நேரம் ஆகிவிட்டது. அதற்குள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரும் மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு தண்டனையை ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைத்தது நீதிமன்றம்.
வைகோவுக்கு தண்டனை என்று அறிவிக்கப்பட்ட தகவல் வெளியே கசிந்து மதிமுக தொண்டர்கள் முழக்கமிடத் தொடங்கிவிட்டனர். வெளியே வந்த வைகோ அவர்களைக் கட்டுப்படுத்துமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டபடியே செய்தியாளர்களை சந்தித்தார்.
‘இன்று என் வாழ்வில் மகிழ்ச்சியான நாள்’ என்று ஆரம்பித்து நீதிமன்றத்தில் நடந்ததைப் பகிர்ந்துகொண்டவர் அங்கிருந்து புறப்பட்டு மதிமுக தலைமை அலுவலகத்தை அடைந்தார். அங்கே வழக்கறிஞர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
”வழக்கமாக குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே தங்களுக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறு கோரிக்கை வைப்பார்கள். அந்த ரீதியில் வைகோவின் தீர்ப்பிலும் அப்படிப்பட்ட வாசகத்தை நீதிபதி சேர்த்திருக்கலாம். ஆனால் எங்கள் தலைவர் வித்தியாசமானவர் என்பதை இன்று நீதிபதி புரிந்துகொண்டிருப்பார்” என்கிறார்கள் மதிமுக வழக்கறிஞர்கள்.

கருத்துகள் இல்லை: