சனி, 6 ஜூலை, 2019

4 சதவீதம் தான் தொல்லியல் ஆய்வு நடந்துள்ளது... ’ -அமெரிக்க தமிழ் மாநாட்டில் ஸ்டாலின் குணசேகரன்

snakkheeran.in - jeevathangavel : தமிழர் வரலாற்று ஆய்வுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென" இன்று அமெரிக்காவில் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நிகழ்வில் கலந்து கொண்ட ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் உரை நிகழ்த்தினார்.
;வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32 ஆம் ஆண்டுத் தமிழ்விழா, 10ஆவது உலகதமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 50 ஆவது ஆண்டுவிழா ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் அமெரிக்கா நாட்டின் சிகாகோ நகரத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இதில், தமிழகத்திலிருந்து இலக்கியவாதிகள், கட்டுரையாளர்கள், பேச்சாளர்கள் என பல துறை வல்லுனர்கள் பலர் கலந்துள்ளனர்.
;இம்முப்பெரும் நிகழ்வின் தொடக்க நாளில் கலந்து கொண்ட  ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் 'தமிழ்... தமிழர்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். இவரது உரை நான்குநாள் நிகழ்வுகளின் முதல் சொற்பொழிவாக இருந்தது.
அவர் பேசும் போது : -   "ஒட்டுமொத்தத் தமிழர்களின் எண்ணிக்கையில் இருபது சதவிகிதம் பேர் தமிழ்நாட்டைத் தாண்டி ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்கின்றனர்.   உலகில் எழுத்து வடிவம் உள்ளதும் அல்லாததுமாகச் சேர்த்து சுமார் ஆறாயிரம் மொழிகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரம் கூறுகிறது. அதில் உலகளவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பேசக்கூடிய மொழிகள் என்ற பட்டியலில் தமிழ் 17 ஆவது இடத்தில் உள்ளது.

இந்தக் காரணங்களினால் தமிழர்களைக் குவலயக் குடும்பத்தினர் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  தமிழ் செம்மொழி, செவ்வியல் மொழி என்று உலகளவில் அங்கீகாரம் பெற்றதற்குப் பல வலுவான காரணங்கள் உள்ளன. இயல்பாகவே தமிழ்மொழி செம்மொழித் தன்மை கொண்டிருந்தாலும் அதனை  அறிவியல்  பூர்வமாக உலக அரங்கில் நிறுவியவர்கள் தமிழ் அறிஞர்களும் ஆராய்ச்சி யாளர்களுமாவர்.

உ.வே.சாமிநாத ஐயர், சி.வை. தாமோதரம் பிள்ளை போன்ற எண்ணற்ற தமிழ் ஆய்வாளர்கள் தங்களின் தொல்லியலாய்வுகள் மூலம் சங்கத்தமிழ், தொல்காப்பியம், திருக்குறள் போன்ற பழந்தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களை தங்கள் வாழ்நாளையே முழுமையாக அர்ப்பணித்துப் பதிப்பித்துள்ளனர்.   பேராசிரியர் கே.ராஜன் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினர் 2009 ஆம் ஆண்டு 'தமிழக தொல்லாய்வு அட்டவணை' என்ற நூலினை வெளியிட்டுள்ளனர். அதில் தமிழ்நாட்டில் 2000 இடங்கள் தொல்லாய்விற்கான இடங்களென்று மாவட்ட வாரியாகத் துல்லியமான விபரங்களுடன் வெளியிட்டுள்ளனர். இந்நூல் வெளியான பிறகு இடைப்பட்ட பத்தாண்டுகளில் மேலும் 500 தொல்லியல் ஆய்வுக்கான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்திலுள்ள 2500 தொல்லியல் ஆய்விற்கான இடங்களில் இதுவரை 100 இடங்களில் மட்டும் தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்படியானால் தமிழகத்தில் மொத்தமுள்ள தொல்லியல் ஆய்வுக்காகத் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் 4% மட்டுமே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 100 இடங்களில் நடைபெற்ற ஆய்வுகளில் மிகக் குறைவான அளவிற்கே முழுமையான ஆய்வுப்பணிகள் நடைபெற்றுள்ளன. 

இந்தியாவில் இதுவரை சுமார் 1,50,000 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் மட்டுமே 60,000 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் 30,000 கல்வெட்டுகள் மட்டுமே படிக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கல்வெட்டுகள் இதுவரை ஆய்விற்கே எடுத்துக் கொள்ளப்படாமல் உள்ளன.>தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 800 செப்பேடுகளில் பாதிக்கும் மேல் பதிப்பிக்கப்படாமல் உள்ளது. இப்படி தமிழ் மொழி வரலாறு உலகளாவிய அளவில் விரிந்துள்ளது" என்றார்.

கருத்துகள் இல்லை: