புதன், 3 ஜூலை, 2019

தினகரன் : நிர்வாகிகள் விலகலை சசிகலா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை!

நிர்வாகிகள் விலகல்: சசிகலாவின் கருத்து என்ன?
மின்னம்பலம் : சசிகலா சந்தித்த பிறகு பேட்டியளித்த தினகரன், நிர்வாகிகள் விலகல் தொடர்பான சசிகலாவின் கருத்து குறித்து பேட்டியளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்தித்த நிலையில், அடுத்தடுத்து பல்வேறு நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். தினகரனின் முக்கிய
தளபதிகளில் ஒருவராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதேபோல முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணையவுள்ளார். தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் முதல்வரை சந்தித்து அதிமுகவில் மீண்டும் செயலாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து நிர்வாகிகள் விலகி வரும் சூழலில், இன்று (ஜூலை 3) பெங்களூரு சென்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்துப் பேசினார். அப்போது கட்சியைப் பதிவு செய்வது குறித்து விவாதித்தவர், புதிய நிர்வாகிகள் பட்டியலை காட்டி ஒப்புதல் பெற்றிருக்கிறார். மேலும் நிர்வாகிகள் விலகிவருவது குறித்து இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம் நிர்வாகிகள் விலகல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகளுக்கு மேல் இருந்த சசிகலா அவருடைய பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைப் பார்த்தவர். அதனால் நிர்வாகிகள் விலகலை பெரிதாக அவர் எடுத்துக்கொள்ளவில்லை” என்று பதிலளித்தவர்,
தேர்தல் தோல்விக்குப் பின்னர்தான் விலகுகிறார்கள். அதற்காக வேறு வேறு காரணங்களை கூறுகிறார்கள். போகிறவர்கள் போகட்டும் என நான் அகங்காரமாக சொல்கிறேன் என சிலர் சொல்கிறார்கள். ஆனால் ஒரு நிர்வாகி வெளியேற முடிவெடுத்துவிட்டால் அதனை தடுத்து நிறுத்த முடியுமா? தடுப்பதுதான் நியாயமாக இருக்குமா? அரசியலில் ஒரு இயக்கத்தில் சுயவிருப்பத்துடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இசக்கி சுப்பையாவின் விமர்சனத்திற்கு பதிலளித்த தினகரன், “இசக்கி சுப்பையா என்னுடைய வலதுகரமோ, இடதுகரமோ அல்லது முக்கிய தளபதியோ கிடையாது. நீண்டகாலம் தெரிந்த நண்பர். அவர் நான் பதற்றத்தில் பேசுவதாகக் கூறுகிறார். பேட்டியளிக்கும்போது ஒரு ப்லோவில் 2017 என்பதற்கு 2007 என்றுவிட்டேன். உடனே நான் பதற்றத்தில் இருப்பதாகக் கூறுகிறார்.
புகழேந்தியோ அல்லது சேலஞ்சர் துரையோ விலகினால் எனக்கு வருத்தம் இருக்கும். அவர்களிடம் விலக வேண்டாம் என பேசிப்பார்ப்பேன். ஏனெனில் அவர்களை எனக்கு 20 வருடங்களுக்கு மேலாக தெரியும். ஆனால், இசக்கி சுப்பையா அமமுகவிலிருந்து விலகிவிடுவார் என்ற பதற்றமெல்லாம் எனக்குக் கிடையாது. ஏனெனில் அமமுகவிலிருந்து விலக வேண்டும் முடிவெடுத்துவிட்டுச் செல்கிறார்” என்று தெரிவித்தார்.
மேலும், “அவருக்கு காண்டிராக்ட் தொழிலில் அரசிடமிருந்து பாக்கி வரவேண்டி இருக்கிறது, அரசு அவருக்கு நெருக்கடி கொடுக்கிறது என அனைவருக்கும் தெரியும். 70 கோடி ரூபாய் பாக்கி இருப்பதாக என்னிடம் ஒன்றரை வருடமாகக் கூறிவருகிறார். அப்போதெல்லாம் இந்த ஆட்சி போய்விடும், அமமுக வெற்றிபெற்றுவிடும் என்று நினைத்து இங்கு இருந்திருக்கலாம். இப்போது ஆட்சி போகவில்லை என்றதும் சுய காரணங்களுக்காக செல்கிறார். எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தின் அப்பாயின்மெண்டை வாங்கிக் கொண்டு அவர் ஊருக்குச் செல்கிறார்” என்றும் விமர்சித்தார்.
அமமுக என்பது தொண்டர்களின் இயக்கம் என்ற அவர், “நிர்வாகிகள் விலகுவது ஊடகங்களுக்கு ஒருநாள் செய்தியாக இருக்கலாம். அந்த பொறுப்புகளை நிரப்பி வருங்காலத்தில் தொடர்ந்து செயல்பட ஆரம்பிப்போம்” என்றார்

கருத்துகள் இல்லை: