புதன், 28 ஜூன், 2017

வீரமணி அதிமுகவுக்கு கோரிக்கை : நீட் தேர்வில் விலக்கு அளித்தால் மட்டுமே குடியரசு தேர்தலில் வாக்கு ..

மின்னம்பலம் : தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளித்தால் மட்டுமே குடியரசுத்
தலைவர் தேர்தலில் வாக்களிப்போம் என மத்திய அரசை அதிமுக வலியுறுத்த வேண்டும்’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தர்மபுரியில் நேற்று ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திராவிடர் கழகத் தலைவர் பேராசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசுகையில்: “தமிழக சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி எதிர்க்கட்சி உட்பட அனைத்து உறுப்பினர்களும் மசோதாவை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அந்த மசோதாவை இன்னும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
எனவே, அதிமுக சார்பில் தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நிறைவேற்றினால் மட்டுமே, குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்போம் என்று மத்திய அரசை அதிமுக வலியுறுத்த வேண்டும்.

இந்தியாவிலேயே 22 அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பெற்ற ஒரே மாநிலம் தமிழகம்தான். ஆனால், மத்திய அரசிடம் அதிமுக அரசு மாநிலத்தின் மொத்த உரிமைகளையும் அடகு வைத்துள்ளதையடுத்து, இந்த மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் சூழல் நேரிடும். மேலும், நீட் தேர்வுக்கு எதிராக ஒத்தக்கருத்துடைய அனைத்து கட்சிகளையும் அழைத்து, வரும் ஜூலை 4ஆம் தேதி கருத்தைக் கேட்டறிந்த பின்னர் அதுகுறித்த போராட்டங்கள் பற்றி முடிவெடுக்கப்படும்” என்றார்.

கருத்துகள் இல்லை: