செவ்வாய், 27 ஜூன், 2017

Air Ambulance 1 மணித்தியாலத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் .. ஏர் ஆம்புலன்ஸ் கோவையில் அறிமுகம்

மின்னம்பலம்: கோவையைச் சேர்ந்த கங்கா மருத்துவமனை நோயாளிகளுக்கு விரைவாகச்
சேவை வழங்குவதற்காக ஏர் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக கங்கா மருத்துவமனையின் எலும்பியல் மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை துறையின் தலைவரான டாக்டர் ராஜசேகரன் நேற்று (25-06-17) கூறுகையில், "ஒரு தனியார் மருத்துவமனை முழுக்க முழுக்க மருத்துவத் தேவைக்காக மட்டும் அவசர கால முதலுதவிகளோடு கூடிய ஏர் ஆம்புலன்ஸை கொண்டுவந்திருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. இரண்டு விமானிகள் மற்றும் தொழில்நுட்ப அணியினர் இதில் பங்கெடுத்துள்ளனர். இதற்கு முன்னர் டில்லியில் ’எஃப் - 1’ கார் பந்தயத்தின்போது இதுபோன்ற ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 500 கிலோ மீட்டர் வரை இந்த ஹெலிகாப்டர் பறக்கும் வசதியைக் கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த விமானம் தரையிறங்குவது தொடர்பாகப் பேசுகையில், ”மாநிலத்தில் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட ஏராளமான ஹெலிபேடுகள் உள்ளன. அவற்றில் தரையிறங்க அனுமதியுள்ளது. ஒருவேளை ஹெலிபேட் வசதி இல்லாத பகுதியாக இருந்தால், பள்ளி மைதானங்கள் போன்ற பகுதியில் தரையிறங்கலாம். இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி தேவை. உள்துறை அமைச்சகம் ஏற்கனவே ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கக் கோரி அனைத்து ஆட்சியர்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த ஹெலிகாப்டரில் நோயாளிக்குத் தேவையான படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதி, பல்ஸ், ரத்தம் மற்றும் ரத்த அழுத்தத்தைக் கண்டறியும் வசதி, வெண்டிலேட்டர், இதயத் துடிப்பைச் சீராக்கும் கருவிகள் போன்ற அவசரக் கால வசதிகள் இருக்கின்றன. ”இது முழுக்க முழுக்க மருத்துவத் தேவைக்காக மட்டுமே. சாதாரண பயணங்கள் இதில் மேற்கொள்ளப்படமாட்டாது. உடலுறுப்புகளை ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னொரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் பயன்படும். இந்த ஹெலிகாப்டர் பத்தே நிமிடத்தில் 100 கிலோ மீட்டரைக் கடக்கும். மேலும் இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை எங்கள் மருத்துவமனைக்கும் மட்டுமானது அல்ல. கட்டணம் செலுத்தி எந்த மருத்துவமனையும் இந்த ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்த சாதாரணமாக ஒரு மணி நேரத்துக்கு இரண்டு லட்சம் முதல் 2.50 லட்சம் வரை ஆகும். ஆனால், நாங்கள் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு லட்சம் கட்டணமாக நிர்ணயித்துள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: