செவ்வாய், 27 ஜூன், 2017

டொனால்ட் ட்ரம்ப் நரேந்திர மோடி சந்திப்பு ....

‘இந்திய நாட்டுக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு
எச்சரிக்கை விடுக்கும்வகையில், அதன் எல்லைக்குள்ளேயே புகுந்து இந்தியா நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து, உலகில் உள்ள எந்த நாடும் கேள்வி கேட்கவில்லை’ என்று அமெரிக்காவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றார். போர்ச்சுகல் நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, அந்த நாட்டுடனான நல்லுறவை மேம்படுத்துவதற்காக 11 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பின்னர், போர்ச்சுகல் பயணத்தை முடித்துக்கொண்டு, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் ஜூன் 25ஆம் தேதி அமெரிக்கா சென்றடைந்தார்.

தொடர்ந்து, வர்ஜினியாவில் வசிக்கும் அமெரிக்காவாழ் இந்தியர்கள் மத்தியில் மோடி பேசுகையில், “உலகின் அமைதி மற்றும் மக்களின் வாழ்க்கையைத் தீவிரவாதம் சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாம் தீவிரவாதம் பற்றிப் பேசியபோது, தீவிரவாதத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. உலக நாடுகள் அதை ஏதோ சட்டம்-ஒழுங்கு பிரச்னை என்றே நினைத்தன. இப்போதுதான் தீவிரவாதம் என்றால் என்ன என்பது அவர்களுக்குப் புரிந்துள்ளது.
தீவிரவாதிகளை அழிப்பதற்காகவே இந்தியா கடந்த ஆண்டு சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தியது. தன்னை தற்காத்து கொள்வதற்காக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும், தாக்குதல் நடத்தவும் இந்திய தயங்காது என்பதை அந்த சர்ஜிக்கல் நடவடிக்கை உலகுக்கு நிரூபித்துக் காட்டியது. தீவிரவாதத்தின் முகத்தை இன்று உலக நாடுகளுக்கு இந்தியா வெற்றிகரமாகக் காண்பித்துள்ளது. அதையடுத்து, தீவிரவாதத்துக்கு எதிரான சர்ஜிக்கல் தாக்குதலை இந்தியா ஏன் நடத்தியது என்று உலகின் எந்த நாடும் இந்தியாவிடம் கேள்வி கேட்கவில்லை. அது மட்டுமல்ல, சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியதன்மூலம் இந்தியாவின் வலிமையையும் உலக நாடுகள் உணர்ந்துள்ளன” என்று மோடி பேசினார்.
அதன் பின்னர், வாஷிங்டனில், அமெரிக்க தொழில் அதிபர்களுடனான சந்திப்பின்போது, டிம் குக் (ஆப்பிள் நிறுவனம்), டக் மெக்மில்லன் (வால்மார்ட்), ஜிம் அம்பிள்பை (கேட்டர் பில்லர்), சுந்தர் பிச்சை (கூகுள்), சத்யநாதெள்ளா (மைக்ரோஃசாப்ட்) ஆகியோரைப் பிரதமர் மோடி சந்தித்து பேசியபோது, “இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள்” என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். கடந்த மூன்றாண்டுகளில் இந்தியாவில் தொழில் தொடங்க வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் செய்து கொடுத்துள்ள வசதிகள், வாய்ப்புகள் பற்றியும் அவர் பட்டியலிட்டு தெரிவித்தார். மேலும், ரயில் நிலையங்களில் ஓட்டல்கள் தொடங்குவது, ஜி.எஸ்.டி. வரி மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்கள் பற்றியும் பிரதமர் மோடி பேசினார்.
அதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜூன் 26ஆம் தேதி திங்கள்கிழமை இரவு அதிபர் டொனால்டு ட்ரம்பைச் சந்தித்துப் பேசினார். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு முதன்முறையாக அவரை மோடி சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பின்போது எச்1பி விசா விவகாரம், பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து பணியாற்றுவது, அணுசக்தித் துறை ஒத்துழைப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ட்ரம்ப்புடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார் என்று தெரியவந்துள்ளது.
இந்தச் சந்திப்பு முடிந்ததும் மோடி நேற்றிரவே டென்மார்க் புறப்பட்டுச் சென்றார். இன்று ஜூன் 27ஆம் தேதி அந்நாட்டு மன்னரைச் சந்திக்கும் அவர், பின்னர் தனது வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்புகிறார்  மின்னம்பலம் 

கருத்துகள் இல்லை: