செவ்வாய், 27 ஜூன், 2017

கைலாச யாத்திரீகர்களை அனுமதிக்க சீனா மறுப்பு. .. மானசரோவர் செல்வதை தடுத்த சீன அதிகாரிகள்!


சிக்கிம் மாநில எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினர் திங்கள்கிழமை அத்துமீறி நுழைந்து, இரு ராணுவ நிலைகளை சேதப்படுத்தினர். இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
சிக்கிம் மாநிலம், பூடான், திபெத் ஆகிய பகுதிகள் சந்திக்கும் எல்லைப் பகுதியான டோகா லா-வில் கடந்த 10 நாள்களாகவே இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. அந்தப் பகுதி வழியாக கைலாச - மானசரோவர் புனிதப் பயணம் மேற்கொண்ட ஒரு குழுவினரை சீன ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியது. இந்த நிலையில், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைத் தாண்டி சீன ராணுவத்தினர் திங்கள்கிழமை இந்தியப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை முன்னேற விடாமல் தடுப்பதற்காக இந்திய வீரர்கள் மனிதச் சங்கிலி அமைத்து சீன வீரர்களுடன் கடுமையாகப் போராடினர்.
லால்டென் மற்றும் டோகா லா பகுதியில் இந்திய ராணுவத்தினரின் இரு பதுங்கு நிலைகள் சீனப் படையினரால் சேதப்படுத்தப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பிறகு, இந்தப் பகுதி இந்திய ராணுவம் மற்றும் இந்திய-திபெத் எல்லைப் படையினர் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியில் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், சர்வதேச எல்லையிலிருந்து 15 கி.மீ. தூர இடைவெளியில் இந்திய-திபெத் எல்லைப் படையின் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
அதையும் மீறி இந்தப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் பதற்றத்தைத் தணிப்பதற்காக, கடந்த 20-ஆம் தேதி இருதரப்பு மூத்த ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும், அந்தப் பேச்சுவார்த்தையில் பலன் எதுவும் ஏற்படாமல், பதற்றம் தொடர்ந்து வருகிறது.
திபெத்திலுள்ள மானசரோவர் ஏரிக்கு சிக்கிம் வழியாகச் செல்லும் பாதையை சீனா கடந்த 2015-ஆம் ஆண்டு திறந்து விட்டது. எனினும், அந்தப் பாதையின் சீனப் பகுதியில் உள்ள பாலம் உடைந்திருப்பதால் யாத்ரீகள் பயணம் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தினமணி

கருத்துகள் இல்லை: