செவ்வாய், 27 ஜூன், 2017

ரயிலில் ஜுனைத் கொலையாளி போதையில் இல்லை.. துக்கத்தினால் ஈத் கொண்டாடத கிராமம்

Lulu Moses கொல்லப்பட்ட ஜுனைதின் சகோதரன் ஷகீல் கூறியதாவது: "என்
சகோதரனை கொலை செய்தவர்கள் குடி போதையில் இருக்கவில்லை. இது வக்கீல்கள் புனையும் அப்பட்டமான பொய்! இதையே மீடியாக்களும் பரப்புகின்றன!" முகம்மது அசாருதீன் என்னும் கல்லூரி மாணவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்: "வெறும் ஒரு கொலையாக மட்டுமே இதை ஹைலைட் செய்யும் மீடியாக்கள் இஸ்லாமியர்கள் என்பதற்காகவே மனிதர்கள் தினமும் கொல்லப்படுவது ஒரு பதிவாகிவிட்டது என்பதை ஏன் எடுத்து சொல்ல மறுக்கிறார்கள்? 2015ல் உத்தர பிரதேசத்தில் தன் வீட்டு ஃப்ரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்ற வதந்தியால் கொல்லப்பட்ட முகம்மது அக்லக், ராஜஸ்தானில் கொல்லப்பட்ட கால் நடை வியாபாரி பெஹ்லு கான், ஜார்கண்டில் கொல்லப்பட்ட நபர், மத்திய பிரதேசத்தின் இமாம், இப்போது ஜுனைது - இவர்கள் அனைவருமே மாட்டிறைச்சிக்காக கொல்லப்பட்ட இஸ்லாமியர்கள் என்பதை ஏன் மீடியாக்கள் இணைத்துப் பார்க்கவில்லை? மோடியின் ட்விட்டர் பதிவுகளிலோ வானொலி பேச்சுக்களிலோ ஏன் எங்கள் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்படுவதில்லை?


tamilthehindu : டெல்லி-மதுரா பயணிகள் ரயிலில் கடந்த வியாழனன்று 3 முஸ்லிம் சகோதரர்களை 20-25 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்கியதில் ஜுனைத் என்ற 17 வயது இளைஞர் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தை அடுத்து பரிதாபாத்தில் உள்ள கந்தவாலி கிராமத்தில் ஜுனைத் குடும்பத்தினர் மட்டுமல்லாது கிராம முஸ்லிம் சமுதாயமே கறுப்புப் பட்டை அணிந்து ஈத் பண்டிகையை கண்ணீருடனும் துக்கத்துடனும் அனுசரித்தனர்.

அதாவது நமாஸ் மட்டும் செய்த முஸ்லிம்கள், ஈத் பண்டிகையைக் கொண்டாடவில்லை.

வியாழனன்று காலை பல்லப்காரிலிருந்து எந்த நேரத்தில் புறப்பட்டார்களோ இந்தச் சகோதரர்கள், டெல்லிக்குச் சென்று புதிய பைஜாமா, குர்தா, புதிய ஷூக்களுடன் வீடு திரும்ப வேண்டிய இளைஞர் ஜுனைத்தின் சடலம்தான் அவரது வீட்டுக்கு வந்தது, இவரது சகோதரர்கள் ஹஷிம் மற்றும் ஷகீர் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இருக்கை குறித்த தகராறு என்று போலீஸ் முதல் தகவலறிக்கையில் திசைத் திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது, உண்மையில் முஸ்லிம் என்பதற்காக இந்த மூவரையும் வசை பாடி 20-25 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளனர் என்றே நேரில் பார்த்த சாட்சியங்கள் கூறுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈத் பண்டிகையும் அதுவுமாக கொண்டாட்டத்துடன் காணப்பட வேண்டிய கந்தவாலி கிராமம் துக்கத்துடனும், துயரத்துடனும் காணப்பட்டது. ஈத் பண்டிகையின் அர்த்தமே தொலைந்து விட்டது என்கின்றனர் அக்கிராம முஸ்லிம் மக்கள், “எப்போதுதான் கொலைகள் முடியுமோ?” என்கின்றனர் அவர்கள்.

கொல்லப்பட்ட ஜுனைத்தின் தந்தை ஜலாலுதீன் (55) செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘எங்கள் குடும்பத்திற்கு ஈத் பண்டிகை எப்போதும் போல் இருக்க நியாயமில்லை.
கிராம முஸ்லிம் மக்கள் வழிபாடு செய்தனரே தவிர ஈத் கொண்டாட்டங்கள் இல்லை. ஜுனைத் குடும்பத்தினர் வீட்டின் முன் கிராம மக்கள் குழுமினர். தந்தையையும் குடும்பத்தின் பிற உறுப்பினர்களையும் மற்ற முஸ்லிம் மக்கள் ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தனர்.

மேவத் உள்ளிட்ட பிற இடங்கலிலும் மக்கள் கறுப்புப் பட்டையுடன் துக்கம் அனுசரித்தனர், கொடூரமான கொலையை எதிர்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஜுனைத்தின் உறவினர் சனோவர் கான், சமூக வலைத்தளத்தில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ததாக தெரிவித்தார்.

அந்தக் கொடூர வியாழனன்று ரயிலில் நடந்ததைக் கூறும்போது ஜுனைத்தின் சகோதரர் ஹஷிம் பல முறை அழுகையில் உடைந்து போனார்.

“மிகக் கொடூரமாக ஜுனைத்தைக் கொலை செய்தனர். திடீரென 20-25 பேர் ரோக்லா ரயில் நிலையத்தில் ஏறினர். ஏறியவுடன் என் சகோதரன் ஜுனைத்தை பிடித்துத் தள்ளினர் அவன் கீழே விழுந்தான்.

ஏன் அவனைத் தள்ளினீர்கள் என்று நான் கேட்டேன், அவர்கள் என் இஸ்லாமிய தொப்பியை சுட்டிக்காட்டினர். நாங்கள் முஸ்லிம்கள், தேச விரோதிகள், பாகிஸ்தானியர்கள், பசுமாமிசம் சாப்பிடுபவர்கள் என்று தாறுமாறாக ஏசினர், கூச்சலிட்டனர். என்னுடைய தொப்பியை கழற்றி தூக்கி எறிந்தனர். என்னுடைய தாடியையும் பிடித்து இழுக்க முயன்றனர்” என்று அழுகையை அடக்க முடியாமல் பேசினார்.

அப்போது தந்தை ஜலாலுதின் தொடர்ந்தார், ஜுனைத் உண்மையில் வயதானவருக்காக தனது இருக்கையை விட்டுக் கொடுத்தான்., இருக்கைத் தகராறு என்பது ஜோடிக்கப்பட்ட ஒன்றாகும். இந்தச் சம்பவம் முற்றிலும் மததுவேஷம் காரணமாக நடந்துள்ளது, இதில் என் மகன் அவனுடைய மத அடையாளத்துக்காக இலக்காகியுள்ளான். நாங்கள் நமாஸ் செய்தோம் ஆனால் பண்டிகையைக் கொண்டாடவில்லை. ஜுனைத் மரணத்துக்கு நீதி தேவை, கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

ஹரியாணா அரசிலிருந்து யாராவது சந்தித்தனரா என்ற கேள்விக்கு, கீழ்நிலையில் உள்ள ஒரு அதிகாரி கூட வரவில்லை. முதல்வரைப் போய் நாம் என்ன சொல்ல முடியும்? அரசு தரப்பிலிருந்து இந்தச் சம்பவத்தை ஒருவரும் கண்டித்ததாகக் கூட தெரியவில்லை.

கந்தவாலி கிராமத்தைச் செர்ந்த ஷகீல் என்பவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஜுனைத் கொலை செய்யப்பட்டதால் ஈத் பண்டிகையை வழக்கமான் மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியவில்லை. எப்போதுதான் இது நிற்கும்? அரசு இழப்பீடு கொடுக்கிறது, மக்கள் அதனுடன் சென்று விடுகின்றனர். ஆனால் கேள்வி என்னவெனில் இது நிற்குமா என்பதே” என்றார்.

இந்த கொலை வழக்கில் இதுவரை ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் ஜுனைத் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் கொடுத்தனர். வக்ஃப் போர்டு சேர்மனும் ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர், போலீஸ் காவலில் வைக்கப்படும் முன்பாக செய்தியாளர்களிடம் கூறியபோது, சம்பவம் நடந்த போது தான் மதுபோதையில் இருந்ததாகவும் சக பயணிகள் தூண்டுதலின் பேரில்தான் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: