புதன், 28 ஜூன், 2017

சீன புல்லட் ரயில் : மணிக்கு 400 கி.மீ வேகம்!


சீன புல்லட் ரயில் : மணிக்கு 400 கி.மீ வேகம்!
மணிக்கு 400 கி.மீ வேகத்தில் செல்லும் புதிய புல்லட் ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது. முழுக்க உள்நாட்டிலேயே இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. சீனத் தலைநகர் பீஜிங் - ஷாங்காய் வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. 1,318 கி.மீ தொலைவுள்ள இந்த இரு நகரங்களையும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புல்லட் ரயில் 5 மணி 45 நிமிடங்களில் இணைக்கிறது.
'ஃபக்ஸிங்' என்ற பெயரில் இந்த புதிய புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ரயில் சி.ஆர்.400ஏ.எஃப். என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 400 கி.மீ. வேகம் வரை செல்லும். சராசரியாக மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இந்த ரயில் பயணிக்கும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.
பீஜிங் முதல் ஷாங்காய் செல்லும் வழியில் பத்து இடங்களில் இந்த ரயில் நின்று செல்கிறது. குறிப்பாக ஜினான், ஷாங்டாங் மற்றும் தியான்ஜின் உள்ளிட்ட 10 முக்கிய நகரங்களில் நின்று செல்கிறது. தற்போது பீஜிங் - ஷாங்காய் இடையிலான வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு 5.5 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர்.
இந்த புதிய புல்லட் ரயில்கள் வேகத்தில் மட்டுமல்ல, பாதுகாப்பு அம்சங்களிலும் மிகவும் சிறந்தவை. அசாதாரண சூழ்நிலைகளில் தானியங்கி பிரேக் மூலமாக ரயிலை நிறுத்தும் வசதி இருக்கிறது. மேலும், ரயிலின் இயக்கம், தொழில்நுட்ப பிரச்னைகள் குறித்து எளிதாகக் கண்காணித்து எச்சரிக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களையும் இந்த புல்லட் ரயில்கள் பெற்றிருக்கின்றன. ரயில் பயணிக்கும் இடம் மற்றும் அதன் இயக்கம் பற்றிய நிகழ்நேரத் தகவல்களைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.
இதுகுறித்து சீன ரயில்வே நிர்வாகத்தின் பொது மேலாளர் லியூ டாங்ஃபு கூறும்போது, "இந்த புதிய புல்லட் ரயில் சீனாவின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு வளர்ச்சியில் பெரிய பங்கு வகிக்கும். இந்த வழித்தடத்தில் பயணிக்கும் சுமார் 5,05,000 பேர் வரை இதனால் பயனடைவர்" என்றார். உலகிலேயே மிகப் பெரிய புல்லட் ரயில் கட்டமைப்பை சீனா பெற்றிருக்கிறது. சீனாவில் 22,000 கி.மீ. தூரத்திற்கான புல்லட் ரயில் தடம் அமைக்கப்பட்டிருக்கிறது. உலகிலுள்ள புல்லட் ரயில் வழித்தடங்களை ஒப்பிடும்போது, 60 சதவிகித அளவிற்கான புல்லட் ரயில் கட்டமைப்பு சீனாவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: