வெள்ளி, 30 ஜூன், 2017

கடத்தப்பட்ட நஜீப் .. தகவல் தெரிவித்தால் 10 லட்சம் ,, சி பி ஐ அறிவிப்பு JNU மாணவன் ..

நஜீப்பைக் கண்டுபிடித்தால் ரூ.10 லட்சம் பரிசு: சிபிஐ!காணாமல் போன நஜீப் அகமது குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நஜீப் அகமது, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயோ டெக்னாலஜி பயின்று வந்தார். இவர், பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்திருக்கும் மஹி - மாந்தவி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி காலை 11 மணி முதல் நஜீப் அகமதுவைக் காணவில்லை. அவரைக் கண்டுபிடித்து தருமாறு பல்கலை மாணவர்களும் அவருடைய தாயும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நஜீப் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று டெல்லி காவல்துறை அறிவித்தது. இருப்பினும் அவரைப் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. மேலும் இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கு கடந்த 2ஆம் தேதி நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி மற்றும் ரேகா பள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவ்வழக்கைக் காவல்துறையினரிடமிருந்து சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பான அடுத்தகட்ட விசாரணை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஜூன் 29ஆம் தேதி சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “காணாமல் போன ஜே.என்.யூ மாணவர் நஜீப் அகமதுவைக் கண்டுபிடித்து தருபவர்கள் அல்லது அவர் எங்கு இருக்கிறார் என்று தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது. காவல்துறையைத் தொடர்ந்து தற்போது சிபிஐ-யும் பரிசுத் தொகை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: