செவ்வாய், 27 ஜூன், 2017

சிறுதாவூர் கொலை ! சசிகலா உறவுகளின் அராஜக - சொத்து சேர்ப்பின் வண்டவாளம் #VikatanExclusive

சிறுதாவூர்ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் நேற்று
கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
‘ஜெயலலிதா பங்களாவின் உள்புறத்தில் காவல் காக்கும் செக்யூரிட்டி போலத்தான் தெரிகிறது. சொத்து விவகாரத்தின் ஒரு பகுதியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம்' என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கும் பங்களாக்களில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுதாவூருக்கு முக்கிய இடம் உண்டு. அவர் இருந்தவரையில், பங்களாவைச் சுற்றிலும் ஏராளமான போலீஸார் காவல் காத்து வந்தனர். அவர் இறந்த பிறகு, போயஸ் கார்டன், சிறுதாவூர், கொடநாடு ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. தற்போது சிறுதாவூர் பங்களாவைச் சுற்றிலும் ஆயுதப்படை போலீஸார் காவல் காக்கின்றனர். அவர்களும், 'இந்த இடத்தில் சரியான உணவு கிடைப்பதில்லை. காலையில் நான்கு இட்லி கொடுக்கின்றனர். அதுவும் சரியாக கிடைப்பதில்லை. மழை வந்தால்கூட ஒதுங்குவதற்கு இடம் இல்லை.

இரவு நேரங்களில் அச்சத்துடன் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது' என ஒருவித பயத்துடனேயே பேசுகின்றனர். இந்நிலையில், நேற்று சிறுதாவூர் பங்களாவில் இருந்து 500 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடு ஒன்று, போலீஸாரின் தூக்கத்தைத் தொலைத்துவிட்டது.
சிறுதாவூர் பகுதி மக்களிடம் பேசினோம். “பங்களாவில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் அந்த எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. பங்களாவுக்குள் கொலை நடந்ததா அல்லது செக்யூரிட்டியைக்
கொன்றுவிட்டு, இங்கு வந்து போட்டுவிட்டார்களா எனத் தெரியவில்லை. குறிப்பாக, ஜெயலலிதா பங்களாவை ஒட்டி, கிரீன் பீஸ் என்ற பெயரில் பண்ணை ஒன்று உள்ளது. அதில் மொத்தம் 600 லேஅவுட்டுகள் உள்ளன. ஒவ்வொன்றும் 3 கிரவுண்ட், நான்கு கிரவுண்ட் என்ற அளவில் உள்ளது.

ஜெயலலிதா பங்களாவை ஒட்டி வரும், இந்த லேஅவுட்டின் பல இடங்களை சசிகலா குடும்பத்தினர் வளைத்துவிட்டனர். பங்களாவைச் சுற்றி வரும் கிரீன் பீஸ் கார்டனின் பல பகுதிகள் சசிகலா குடும்பத்தில் உள்ள சிலரது கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்காக, 99-ம் ஆண்டு மிகப் பெரிய தாக்குதலே நடந்தது. பண்ணைக்குள் புகுந்து அராஜகம் செய்தனர் சசிகலா உறவுகள்.


கிரீன் பீஸ் கார்டனுக்கான கேட்டும் சிறுதாவூர் பங்களா போலீஸாரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஏகப்பட்ட கெடுபிடிகளால், இந்த 600 லேஅவுட்டும் காடாக மாறிவிட்டது. இங்கு சொத்து வாங்கியவர்கள் பலரும், பெரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஜெயலலிதா இருந்த வரையில், இந்த இடத்துக்குள் அவர்களால் நுழைய முடியவில்லை. இதையே காரணமாக வைத்து, சிலர் இந்த இடங்களை வளைக்கும் வேலைகளைத் தொடங்கியுள்ளனர்.

இந்த இடத்தின் மொத்த மதிப்பு ஆயிரம் கோடியைத் தாண்டும். அநேகமாக, பத்து நாள்களுக்கு முன்பு இந்தக் கொலை நடந்திருக்கலாம். இறந்தவரின் பாக்கெட்டில் பிஸ்கெட் பாக்கெட்டும் கொஞ்சம் சில்லறை நோட்டுகளும் இருந்துள்ளன. ஜெயலலிதா பங்களாவுக்கு உள்ளே பணிபுரியும் செக்யூரிட்டியாக இருக்கலாம் என நினைக்கிறோம். ஏனென்றால், வெளி ஆட்கள் யாரும் உள்ளே நுழைவதற்கு வாய்ப்பில்லை. இரண்டு தரப்பினருக்கு இடையில் நடந்த சண்டையில், செக்யூரிட்டி கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸார் நினைக்கின்றனர்.

 தவிர, காட்டுப் பகுதியாக மாறிவிட்டதால், நூறுக்கும் மேற்பட்ட நரிகள் வலம் வருகின்றன. இறந்து கிடந்த செக்யூரிட்டியின் உடலை நரிகள் கூறு போட்டுச் சென்றுவிட்டதற்கான அடையாளமும் உள்ளது" என்றனர் விரிவாக.

“சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, கொடநாடு, சிறுதாவூர், போயஸ் கார்டன் ஆகிய மூன்று பங்களாக்களின் பராமரிப்பும் தினகரன் கட்டுப்பாட்டுக்கு வந்தது. தினகரனும் திகார் சிறைக்குச் சென்றுவிட்ட நேரத்தில், சசிகலா குடும்ப உறவுகள் என சிலர் அடிக்கடி சிறுதாவூர் பங்களாவுக்கு வந்து சென்றனர். 'ஆடி காரில் வந்து செல்லும் இந்த நபர்கள் யார்?' என்ற சந்தேகம், போலீஸாருக்கு இருந்துள்ளது.

முகப்பு கேட்டில் கார் வந்து நின்றாலே, உள்ளே விடுமாறு பங்களாவுக்குள் இருந்து அழைப்பு வந்துவிடுகிறது. யார் வருகிறார்கள் என்பதே தெரியாத அளவுக்கு மர்ம பங்களாவாக மாறிவிட்டது. சில நாள்களுக்கு முன்பு, பங்களாவைச் சுற்றியுள்ள இடங்களில் ஆவணங்கள் எரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. தவிர, சுற்றியுள்ள நிலங்களுக்கான உரிமை குறித்த, சண்டையில் மோதல் வெடித்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இறந்து கிடந்த நபரை அடையாளம் காண்பதற்காக, தனியார் செக்யூரிட்டி கம்பெனிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. மாமல்லபுரம் போலீஸாருக்கு, இந்த மர்ம மரணம் கூடுதல் தலைவலியைக் கொடுத்திருக்கிறது" என்கின்றனர் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸார். விகடன்

கருத்துகள் இல்லை: