வியாழன், 29 ஜூன், 2017

ஜல்லிகட்டு ஜூலியும் - பிக் பாஸ் நிகழ்ச்சியும் .. ஜல்லிகட்டையும் ஜூலியையும் போட்டு தாக்கிய காயத்திரி ரகுராம்!

எழில் : சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகவுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நமீதா, காயத்ரி ரகுராம், ஆர்த்தி உள்ளிட்ட 15 பேர் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ளார்கள். இவர்களில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்று, கோஷங்கள் மூலம் அரசியல்வாதிகளை விமரிசனம் செய்து புகழ்பெற்றவரான ஜூயானாவும் ஒருவர்.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்ற சமயத்தில் இவருடைய கோஷங்கள் வீடியோக்களாக சமூகவலைத்தளங்கில் அதிகம் பகிரப்பட்டன. அப்போது, வீரத்தமிழச்சி என்கிற பட்டமும் அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக வாட்ஸப்பில் வதந்திகள் உருவாகியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு ஒரு பேட்டியில், தான் நலமுடன் உள்ளதாக ஜூலி அறிவித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அவர் அறிமுகமானது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. இந்த நிகழ்ச்சியின் மூலமாகப் புதிய குடும்ப உறுப்பினர்களைப் பெறப்போகிறேன் என்று நட்புணர்வுடன் பதில் அளித்து கமலிடம் பாராட்டுப் பெற்றார் ஜூலி.
இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தலைவர்களை விமரிசித்தது ஏன் என ஜூலியிடம் காயத்ரி ரகுராமும் ஆர்த்தியும் கேள்வி எழுப்பி நெருக்கடி அளித்தார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றைய நிகழ்ச்சியில் இந்த விவகாரம் தொடர்பாக ஜூலி - காயத்ரி ரகுராம் - ஆர்த்தி இடையே நடைபெற்ற உரையாடல்: காயத்ரி ரகுராம்: நீ எதுக்கு பீச்சின் வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தாய்?
ஜூலி: ஜல்லிக்கட்டுக்காகத்தானே போனேன்.
காயத்ரி ரகுராம்: ஆனா நீ ஜல்லிக்கட்டுக்குப் போராடலையே?
ஜூலி: ஜல்லிக்கட்டுக்காக நிறைய வசனங்கள் பேசினேன். ஆனால் பேசிய வசனங்கள் வெளியே வரவில்லை.
காயத்ரி ரகுராம்: நீ வேற எதுவோ பேசினே?
ஜூலி: அதுக்குக் காரணம், அவசியம் என்பதால் பேசினேன். நான் திட்டியது மூன்றே மூன்று தலைகளை மட்டும்தான்.
காயத்ரி ரகுராம்: அது ஏன் மூன்று தலைகளைத் திட்டினாய்?
ஜூலி: ஏனென்றால் அவர்கள் நமக்கு ஒரு முடிவு சொல்லவில்லை இல்லையா? கேட்கக்கூடிய இடத்தில் அவர்கள்தானே இருக்கிறார்கள்
ஆர்த்தி (இடைமறித்து): அப்போ, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிக்கவேண்டும் என்றால் பிக் பாஸைத் திட்டுவீங்களா?
ஜூலி: நான் பிக் பாஸைத் திட்டவேயில்லையே.
ஆர்த்தி: அப்போ, ஜல்லிக்கட்டு கிடைக்கவேண்டும் என்றால் அவர்கள் பெயர்களைச் சொல்லிக் கலாய்த்தால் கிடைத்துவிடுமா?
ஜூலி: திட்டினாலாச்சும் கிடைக்குமா என்று பார்த்தோம். ஏனெனில் கெஞ்சியும் பார்த்தாச்சு...
ஆர்த்தி: பிக் பாஸைத் திட்டுங்க. கொடுப்பார்களா?
ஜூலி: பிக் பாஸ் எனக்கொன்று கெட்டது பண்ணலையே!
ஆர்த்தி: அவர்கள் மூன்று பேரும் உங்களுக்குக் கெட்டது பண்ணலையே!
ஜூலி: ஏங்க, பர்சனலா பண்ணாதான் திட்டணுமா என்ன?
ஆர்த்தி: நமக்கு ஒரு விஷயம் கிடைக்கவேண்டும் என்றால் மரியாதையாகக் கேட்கவேண்டும்.
ஜூலி: கேட்டு வரலை. அதனால்தான்...
காயத்ரி ரகுராம்: சாமிகிட்ட ஒரு வரம் கேட்கறீங்க. டபால்னு கொடுத்துடுவாரா? எல்லாத்துக்கும் நேரம் உள்ளது.
ஜூலி: சாமிக்கு நேரம் பார்த்துக்கொடுக்க அதில் ஒரு நியாயம் உள்ளது. இவர்களுக்கு என்ன? நமக்குச் செய்யத்தானே இருக்கிறார்கள்.
காயத்ரி ரகுராம்: ஜல்லிக்கட்டுக்காகப் போராடவேண்டும் என்றால் ஜல்லிக்கட்டுக்காக மட்டும் போராடவேண்டும். நாம் வேறு எதுவும் ரூட் மாறக்கூடாது. நீங்க ரூட் மாறினீர்கள். அதனால் சொல்கிறேன்.
ஜூலி: எனக்கு அப்படித் தோன்றவில்லை. எனக்கு என்னவென்றால், இப்படிப் பண்ணினாலாவது நம் கோரிக்கையை கேட்பார்கள் என நினைத்தேன்.
ஆர்த்தி: யாரோடு தூண்டுதலால் செய்தீர்கள்?
ஜூலி: தூண்டுதல் எல்லாம் இல்லை. நான் பண்ண காரணம் என்னவென்றால்.. எங்க வீட்டில் 10 ஜோடி மாடு இருந்தது. நான் பிறந்த ஐந்தாறு வருடம் வரைக்கும். ஆனால் இப்போது எங்கள் வீட்டில் ஒத்தை
ஜோடி மாடு தான் உள்ளது.
காயத்ரி ரகுராம்: ஏன் இருக்கு?
ஜூலி: ஏனெனில் அத்தனை மாடுகளும் போயாச்சு.
காயத்ரி ரகுராம்: ஏன் போச்சு?
ஜூலி: முக்கிய காரணம், மாடுகளைப் பார்த்துக்கொள்ள ஆள் இல்லை.
காயத்ரி ரகுராம்: அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
ஜுலி: அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தமா? ஜல்லிக்கட்டுக்குப் பின்னால் உள்ள விஷயங்களைப் பார்த்துதான் நான் போராட்டத்தில் கலந்துகொண்டேன்.
காயத்ரி ரகுராம்: அப்போ ஆக்டிவிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளமுடியாது. (சிரிக்கிறார்)
ஜூலி: நான் ஆக்டிவிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளவில்லையே. இன்றைக்கு வரைக்கும் சொல்லிக்கொள்ளவில்லையே.
காயத்ரி ரகுராம்: அப்போ நர்ஸ்தானா?
ஜூலி: ஆமாம். நான் போராளி என்று எங்கேயும் சொல்லிக்கொண்டதில்லையே.
*
இந்த உரையாடலையடுத்து நிகழ்ச்சியின் இறுதியில் கேமரா முன் வந்து ஜூலி பேசியது:
நான் மிகவும் சாதாரணமான பெண். எனக்கு சினேகன் அண்ணா மாதிரி பெருமை பேசத் தெரியாது, கவிதைப் பேசத் தெரியாது. நல்லா தமிழ் பேசத் தெரியாது. ஆனால் நான் ஒரு தமிழ்ப் பெண். எனக்குத் தமிழோட கலாசாரங்கள் தெரியும். வீரவிளையாட்டுகள் தெரியும். எனக்குத் தெரிந்தது அதுதான். ஜல்லிக்கட்டுக்காகப் போராடினால் அரசியல்வாதியாகப் போகிறாயா என்று கேட்கிறார்கள். நான் ஒரு சாதாரணப் பெண். அப்படிப்பட்டவள் நான் இந்தப் போட்டியை வென்றுவிடுவாள் என நினைக்கிறார்கள். ஏன் ஒரு சாதாரண பெண் போட்டியை வெல்லக்கூடாதா? தினமணி

கருத்துகள் இல்லை: