புதன், 28 ஜூன், 2017

சவுதியில் விற்கப்பட்ட சென்னை பெண் மீட்பு .. வீட்டு பணிப்பெண்களை செல்வதை தடுக்க வக்கற்ற அரசுகள்

devarajan. சென்னை: சவூதியில் வீட்டுவேலை வாங்கித் தருவதாகக் கூறி விற்கப்பட்ட சென்னைப் பெண்ணை, புகாரின் பேரில் சென்னைப் போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் சந்தான காளீஸ்வரி. கணவனை இழந்து 3 குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார். அவரது குடும்ப வறுமையைப் பயன்படுத்தி வெளிநாட்டில் 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வீட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏஜென்ட் ஒருவர் அணுகியுள்ளார். இதனடிப்படையில், திருவல்லிக்கேணியில் உள்ள அட்லான்டிக் ஏஜென்ஸி உரிமையாளர் தனபால் மூலம் சவூதி அரேபியாவுக்கு கடந்த மாதம் அப்பெண்ணை அனுப்பியுள்ளார்.
ரூ. 1 லட்சத்துக்கு விற்பனை
சவூதி அரேபியாவில் 25 பேர் கொண்ட ஒரு வீட்டில், 24 மணி நேரமும் உணவு, உறக்கமின்றி பணியாற்றிய போதுதான், ஒரு லட்சம் ரூபாய்க்கு தாம் விற்கப்பட்டது அப்பெண்ணுக்குத் தெரிய வந்துள்ளது.
பாஸ்போர்ட் பறிப்பு
செல்போன், பாஸ்போர்ட்டை அந்த குடும்பத்தினர் பறித்து வைத்துக் கொண்டனர். அதனால் அங்கிருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் சந்தான காளீஸ்வரி தவித்துள்ளார்.

சென்னையில் போலீசில் புகார்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சவூதி போலீசிடம் விசாரணை
மேலும், அட்லான்டிக் ஏஜென்ஸி மூலம் சவூதியில் உள்ள குடும்பத்தினரிடம் திருவல்லிக்கேணி போலீசார் பேசியுள்ளனர். அப்போது அடுத்த கட்ட நடவடிக்கையைத் தவிர்க்க காளீஸ்வரியை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு கூறி எச்சரித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சந்தான காளீஸ்வரி
பின், இந்தியத் தூதரக அதிகாரிகளின் உதவியோடு, சந்தான காளீஸ்வரி அங்கிருந்து மீட்டு சென்னை அழைத்து வரப்பட்டார். பின்னர், உறவினர்களிடம் சந்தான காளீஸ்வரி ஒப்படைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை: