தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 14-ஆம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 9 நாட்களாகக் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், ரம்ஜான் பண்டிகை காரணமாக 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டசபை இன்று ஜூன் 28ஆம் தேதி புதன்கிழமை மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு அவை கூடியதும் , கேள்வி நேரத்தின்போது, கூடலூர் கிழமை நீதிமன்றத்தைத் தரம் உயர்த்தப்படுமா என்று எம்.எல்.ஏ. திராவிட மணி கேள்வி கேட்கையில், சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கூடலூர் நீதிமன்றத்தின் தரம் உயர்த்தப்படுவது குறித்து உயர்நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்றார்.
மேலும், தொழிலாளர் நீதிமன்றம் அமைப்பது தொடர்பாகவும் உயர்நீதிமன்ற பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று பதில் கூறினார்.
அதையடுத்து, லால்குடி எம்.எல்.ஏ. சௌந்திர பாண்டியன் பேசுகையில், லால்குடியில் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதில் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரம் டன் அளவுக்கு சேமிப்புக் கிடங்கு உள்ளது. லால்குடியில் சேமிப்புக்கிடங்கு தேவையென்றால் அவசியம் அமைக்கப்படும். மேலும், லால்குடியில் சேமிப்புக்கிடங்கு அமைப்பதற்காகக் கையகப்படுத்தப்பட்ட இடம் போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறினார்.
அதன் பின்னர், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தடையை மீறி குட்கா விற்பனை செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் லஞ்சம் பெற்றதாக செய்தி வெளியானது குறித்து அனுமதிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். ஆனால், அதற்கான அனுமதியைச் சபாநாயகர் தரவில்லை. செய்தித்தாள்களில் வரும் விஷயங்கள் தொடர்பாக விவாதிக்க முடியாது. தற்போது அதுகுறித்து இங்கு விவாதிக்க அனுமதிக்க முடியாது. இந்த விவகாரம் ஆய்வில் உள்ளது, முறையான ஆதாரதம் இருந்தால் அனுமதி கொடுக்கப்படும் என்று சபாநாயகர் கூறினார்.
அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் இன்று அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்கள் “ராஜினாமா செய் ராஜினாமா செய் ஊழல் அரசே ராஜினாமா செய்” என்று திமுக-வினர் முழக்கமிட்டனர். அதன் பின்னர் அவையில் இருந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய டைரியிலும், கணக்கு புத்தகத்திலும், யார் யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் உள்ளது. டி.ஜி.பி., ராஜேந்திரன், தீயணைப்பு துறை டிஜிபி ஜார்ஜ் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர்களுக்கு ரூ.40 கோடி ரூபாய் லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி அந்த டைரியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வருமான வரித்துறை சார்பில்,அப்போது தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன் ராவுக்கு கடிதம் அனுப்பியது. ஆனால், 10 மாதமாகியும், இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்த செய்தி “தி இந்து” பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக வெளியாகியது. ஆனால், அதில் அமைச்சர் பெயர் இடம்பெறவில்லை.போலீஸ் அதிகாரி பெயரும் இல்லை. ஆனால் நேற்று இரவு (ஜூன் 27) ஆங்கில தொலைக்காட்சிகளில் அவர்களுடைய பெயர்கள் தெளிவாக வெளியிடப்பட்டது. இதே வருமான வரித்துறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சோதனையின் போதும் கைப்பற்றப்பட்ட 89 கோடி ரூபாய் கைப்பற்றியது.அதில் முதலிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயர், அடுத்ததாக செல்லூர் ராஜு,தங்கமணி,வேலுமணி என 9 அமைச்சர்களின் பெயர்கள் இருக்கின்றன. இது குறித்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஆணையிட்டது.ஆனால் ஆவணங்களில் இடம்பெற்றவர்களின் மீதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குட்கா நிறுவனம் சார்பில், போலீஸ் கமிஷனருக்கு தீபாவளி மாமூல் ரூ.15 லட்சம், கிறிஸ்துமஸ் மாமூல் ரூ.15 லட்சம் கொடுக்கப்பட்டது.டிசம்பர் 2016 ல் மட்டும் 1.14 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தாக அந்த டைரியில் இருக்கிறது.அப்போது கமிஷனராக இருந்தது ஜார்ஜ் மற்றும் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன். இது குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் அளித்தும் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை
சுகாதாரத்துறை அமைச்சர், மக்கள் உடல் நலன் சார்ந்த பிரச்னையில் துரோகம் செய்துள்ளார். உயிரைக் காப்பாற்ற வேண்டிய அமைச்சர் கொலை குற்றவாளி அமைச்சராக உள்ளார்.அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதை முதல்வர் செய்ய வேண்டும்.ஆனால் அவர் செய்ய மாட்டார்.காரணம் ஊழல் பட்டியலில் அவர் முதல் குற்றவாளியாக இருக்கிறார்.எனவே அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தற்காலிகமாக வெளிநடப்பு செய்துள்ளோம். இன்று பொதுபணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளின் மானியகோரிக்கை இருக்கிறது அதில் பங்கேற்று எங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக