சனி, 1 ஜூலை, 2017

savukkuonline.com: குட்கா விற்ற காசு கசக்காது... இந்த உயர் உயர் அதிகாரிகளை அம்பலப்படுத்துவது நமது கடமை.

DSC_0081_0ஒரு வருடம் முடியப் போகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா கோடவுனில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி ஒரு வருடம் முடியப் போகிறது.  7 ஜுலை 2016 அன்று அந்த சோதனை நடைபெற்றது.  இந்த சோதனைகளில் கிடைத்த ஒரு பதிவேடுதான் இந்த சோதனையை முக்கியத்துவம் பெறச் செய்கிறது.

தமிழகத்தில் குட்கா தடை செய்யப்பட்டு சில ஆண்டுகள் ஆகின்றன.  குட்கா உடல்நலத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால்தான் இது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டிய கடமை, உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரத் துறையினருக்கும் காவல் துறையினருக்குமே உள்ளது.    ஆனால் இந்த வேலிகள் பயிரை மேய்ந்த கதையைத் தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் வீட்டில் 21 டிசம்பர் 2016 அன்று சோதனை நடத்தியதும்தான் ஜார்ஜ் கலங்கிப் போனார். வருமான வரித் துறையினர் குட்கா தயாரிப்பாளரிடமிருந்து மாமூல் பெற்றது குறித்து எழுதிய கடிதம் வருமான வரித் துறையினர் சோதனையில் சிக்கியது என்பதை அறிந்த பிறகே, மறு நாளே 22 டிசம்பர் 2016 அன்று குட்கா விவகாரத்தில் மாமூல் வாங்கிய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டிஎஸ்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நல்லவர் போல உள் துறைச் செயலாளருக்கு கடிதம் எழுதுகிறார். 
இது குறித்து சவுக்கு தளத்தில் உத்தமப் புத்திரன் என்ற கட்டுரை, ஜார்ஜின் கடிதத்தோடு அம்பலப்படுத்தியது.
ஜார்ஜ் இந்த கடிதத்தை எழுதிய பிறகு, பிப்ரவரி மாதத்தில் தமிழக அரசு ஜார்ஜின் கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு குட்கா விவகாரத்தில் விசாரணை நடத்துமாறு உத்தரவிடுகிறது.   சட்டவிரோத குட்கா தயாரிப்பில் மாமூல் வாங்கிய பெரும் தலைகள், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் இரண்டு மாநகர ஆணையர்கள் ஜார்ஜ் மற்றும் டிகே.ராஜேந்திரன்.   ஆனால் இவர்களைப் பற்றி மூச்சே விடாமல் டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தரத்தில் உள்ள அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.  ஒரு புறம் விசாரணைக்கு உத்தரவிட்டு விட்டு, அந்த விசாரணைக்கு எந்த விதத்திலும் ஒத்துழைப்பு அளிக்க மறுத்தது எடப்பாடி அரசு.   லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து வருமான வரித் துறை தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தின் நகல் கேட்கப்பட்டபோது மறுக்கப்பட்டுள்ளது. இது போல எந்த ஒத்துழைப்பும் அளிக்காத காரணத்தால், அந்த விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது வெறும் கண்துடைப்பு நாடகம் என்பதை அனைவருமே அறிவார்கள்.  ஆய்வாளர்களையும், காவல்துணை கண்காணிப்பாளர்களையும் விசாரணை வளையத்துக்குள் உட்படுத்தி அவர்களை பலிகடா ஆக்கும் முயற்சியிலேயே தமிழக அரசு ஈடுபட்டது.    அமைச்சரும் உயர் அதிகாரிகளும் மாமூல் வாங்கிய விவகாரம் குறித்து ஆதாரங்கள் இருந்தபோதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.    வருமான வரித்துறை அதிகாரிகள் வெறும் மாமூல் பட்டியலை மட்டும் அனுப்பவில்லை.  அந்த சட்டவிரோத குட்கா நிறுவனத்தை நடத்தியவரிடம் இருந்து ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.   காவல்துறை அதிகாரிகள் முன்பாக அளிக்கப்படும் வாக்குமூலம்தான் நீதிமன்றத்தின் முன் செல்லாது.  ஆனால் வருமானவரித் துறை, கஸ்டம்ஸ் போன்ற அதிகாரிகள் முன்பு அளிக்கப்படும் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் செல்லுபடியாகும்.   இந்த வாக்குமூலத்தோடு வருமான வரித் துறை அனுப்பிய கடிதத்தின் மீதுதான் எடப்பாடி பழனிச்சாமி ஒரு வருடமாக ஒய்யாரமாக அமர்ந்து கொண்டிருக்கிறார்.
மேலும் இந்த ஆவணங்கள் முக்கியத்துவம் பெறுவதற்கான மற்றொரு காரணம், இது ஒரு சாதாரணமான டைரி குறிப்புகள் அல்ல. ஒவ்வொரு பணப் பட்டுவாடாவுக்கும் வவுச்சர் எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் அனைத்துமே நீதிமன்றத்தில் செல்லுபடியாகத் தக்கவை.
வருமான வரித் துறை சோதனை நடத்திய பிறகு, எம்டிஎம் குட்கா நிறுவனத்தின் பங்குதாரர் மாதவ ராவிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அந்த நிறுவனத்தின் பணப்பட்டுவாடா லெட்ஜரில் உள்ள ஒவ்வொரு பதிவுக்கும் அவரிடம் விளக்கம் கேட்டு வாக்குமூலம் தயாரித்துள்ளனர்.  இந்த விபரத்தை, வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு இயக்குநர் பாலகிருஷ்ணன் தனது கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.   ஆனால் இதன் பிறகும் மாமூல் வாங்கிய டிகே.ராஜேந்திரனை எடப்பாடி பழனிச்சாமி டிஜிபி பதவியில் அமர்த்தி அழகு பார்த்து வருகிறார்.  அவருக்கு இரண்டாண்டு பணி நீட்டிப்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளார்.
Capture
2215065
ஊழல் வழக்குகளில் ஒரு பூர்வாங்க விசாரணை நடத்தப்பட்ட பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.  இந்த நேர்வில், வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு பூர்வாங்க விசாரணையை நடத்தி முடித்த பின்னரே அவர்களின் அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளனர்.   அதன் பின்னரும் இந்த மொத்த விவகாரத்தையும் மூடி மறைக்கும் பணிதான் நடைபெற்று வருகிறது.
இந்த ஒட்டுமொத்த குட்கா விவகாரத்தில் அடிப்படையான செய்தி என்னவென்றால், தங்களின் நலனை மேம்படுத்திக் கொள்வதற்காக, உடலுக்கு பெருந்தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு போதைப் பொருளை சட்டவிரோதமாக தயாரித்து உற்பத்தி செய்யும் நபர்ளோடு கை கோர்த்து, அவர்களிடம் இருந்து மாத மாமூல் வாங்குவதற்கு, உயர் உயர் அதிகாரிகள் சற்றும் தயக்கம் காட்டவில்லை என்பதுதான்.   ஜார்ஜ் சென்னை மாநகர ஆணையாளர் பணியிலிருந்து மாற்றப்பட்ட பிறகும் கூட, கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக 15 லட்ச ரூபாயை பணம் வாங்கியுள்ளது இந்த படித்த உயர் அதிகாரிகள் எப்படிப்பட்ட மோசமான பிச்சைக்காரர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
வருமான வரித்துறை புலயாய்வுப் பிரிவு இயக்குநரின் கடிதம்

வருமான வரித்துறை புலயாய்வுப் பிரிவு இயக்குநரின் கடிதம்
மாமூல் பட்டியல்
மாமூல் பட்டியல்மாநகர ஆணையர் பதவியிலிருந்து மாற்றப்பட்ட பிறகு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மாமூல் வாங்கிய ஜார்ஜ்
மாநகர ஆணையர் பதவியிலிருந்து மாற்றப்பட்ட பிறகு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மாமூல் வாங்கிய ஜார்ஜ்
6
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடைபெற்று வரும் தமிழக அரசின் நிர்வாகம், முழுக்க முழுக்க ஊழல் நிறைந்ததாக நடைபெற்று வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  ஜெயலலிதா இருந்தால் நடவடிக்கை பாயும் என்று பயந்த அதிகாரிகள் தற்போது கேள்வி கேட்பார் இன்றி வசூல் வேட்டைகளில் ஈடுபட்டுள்ளனர்.   அரசு நிர்வாகத்தில் மூலை முடுக்கெல்லாம் ஊழல் மலிந்துள்ளது.   மீண்டும் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த, அதிமுக எம்எல்ஏக்களும், அமைச்சர்களும், ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்காமல் வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்த ஊழல்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து தங்கள் அறிக்கைகளின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தி வருகின்றனர்.
குட்கா ஊழல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், “தமிழக அரசு நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தும்படி வருமானவரித்துறை  கடிதம் எழுதுவதும், அதை தமிழக அரசு கிடப்பில் போடுவதும் இது முதல்முறையல்ல. மணல் கொள்ளை சேகர் ரெட்டியின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வின் போது கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில் தற்போதைய  தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு ரூ.300 கோடிக்கும் அதிகமான பணம் கையூட்டாக கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு  வருமானவரித்துறை கடிதம் எழுதியிருந்தது. அதுமட்டுமின்றி, இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்தது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும்படி தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இவற்றில் எந்த பரிந்துரை மீதும் தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல்  ஊழல் குற்றவாளிகளை காப்பாற்றும் பணியை மட்டுமே செய்து வருகிறது. இது வெட்கக்கேடானது.
ஜனநாயகம் எனப்படுவது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சியாகும். ஆனால், தமிழகத்திலோ ஊழல் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக ஊழல் குற்றவாளிகளால் நடத்தப்படும் ஊழலாட்சி தான் நடைபெறுகிறது. ஆட்சியாளர்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் குட்கா ஊழல், மணல் ஊழல் ஆகியவற்றில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் ஊழல் குற்றவாளிகளுக்கும், அவர்களை பாதுகாத்த ஆட்சியாளர்களுக்கும் மக்கள் தண்டனை அளிப்பர்.”
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “உயர் போலீஸ் அதிகாரிகள், குறிப்பாக கமிஷனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் பெற்ற மாமூல் விவரங்களை வருமான வரித்துறை தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதமாக அனுப்பி வைத்தது என்றும் அது குறித்து விசாரணை நடக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றிய விசாரணையை அப்போது டி.ஜி.பி.யாக இருந்த அசோக்குமார் மேற்கொண்டதும், அவர் நள்ளிரவில் கட்டாயமாக அந்தப் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதும் அதிமுக ஆட்சியில் தான் நடைபெற்றது. சென்னை மாநகர காவல்துறையில் இதுபற்றி விசாரணை செய்த குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அருணாசலம் திருநெல்வேலி சரக போக்குவரத்து கழகத்திற்கு திடீரென மாற்றப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியது. உயர் போலீஸ் அதிகாரிகளின் மாமூல் பற்றி விசாரித்த டி.ஜி.பி.க்கும், ஐ.ஜி.க்கும் அதிமுக ஆட்சியில் நேர்ந்த இந்த கதியால் குட்கா பேரமும், ஊழல் விசாரணையும் முற்றிலும்  முடக்கப்பட்டது.
பிறகு மாநில தலைமை செயலாளர் வீடு, அலுவலகங்களில் ஏன் தலைமைச் செயலகத்திலேயே ரெய்டு நடத்தப்பட்டு தமிழகத்தின் மானம் கப்பலேறியது. ஆனாலும் குட்கா ஊழல் பற்றி விசாரணை நடத்தவில்லை. அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் அதிமுக அரசால் காப்பாற்றப்பட்டார்கள். இந்நிலையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்றவற்றை தமிழகத்தில் தாராளமாக விற்பனை செய்தது யார், அந்த நபர்களுக்கும் அதிமுக ஆட்சியில் உள்ளவர்களுக்கும் என்ன தொடர்பு, அதில் தொடர்புடைய உயர் போலீஸ் அதிகாரிகள் யார், போலீஸ் கமிஷனர் யார் என்பதை பற்றியெல்லாம்,  தீவிர விசாரணை மேற்கொள்ளும் சுதந்திரம் தமிழக லஞ்ச ஊழல் தடுப்பு துறைக்கு அதிமுக ஆட்சியில் நிச்சயமாக இல்லை.
“வேலியே பயிரை மேய்வது போல்” காவல்துறையில் கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகளை கண்காணிக்க வேண்டிய போலீஸ் கமிஷனர்  அதிமுக ஆட்சியில், “மாமூல் கலாச்சாரத்தில்” திளைத்து  மக்களின் ஆரோக்கியத்திற்கு எதிராக நடைபெற்ற இந்த கொடூரமான குற்றச் செயல்களை கண்டும் காணாமல்  இருந்ததை, அதிமுக அரசு சகித்துக் கொண்டிருப்பது வெட்கக் கேடானது.  இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் போதைப் பொருட்கள்  விற்பனைக்கு உதவி செய்து வருங்கால தலைமுறையை போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்க முயற்சி செய்ததை,  வேடிக்கை பார்த்துக்கொண்டு ஊழலுக்காக மக்களின் நலனை சீரழிக்க இந்த அரசு கூச்சப்படாது என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்து விட்டது
ஆகவே, நான் ஏற்கெனவே கோரிக்கை விடுத்தது போல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உடனடியாக ஒரு விசாரணை கமிஷன் அமைத்து “குட்கா மாமூல் விவகாரத்தில்” சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் அதில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை கேட்டுக் கொள்கிறேன். அதற்கு முன்னோட்டமாக சம்பந்தப்பட்ட போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து நீதி விசாரணைக்கு நேர்மையான முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.”
எதிர்க்கட்சித் தலைவர்களின் இது போன்ற அறிக்கைகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் காதில் விழுந்ததாக தெரியவில்லை. அணு தினமும் ஊழலில் ஊறித் திளைக்கும் தனது அமைச்சர்களை காப்பாற்றுவதிலும், அதிகாரிகளை ஊக்கப்டுத்துவதிலுமே நேரத்தை செலவழிக்கிறார் எடப்பாடி.
ஊழலை எதிர்க்கிறோம், ஊழலை ஒழிப்போம் என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த பிஜேபியினருக்கும் மோடிக்கும் தமிழகத்தில் நடக்கும் இந்த ஊழல்கள் குறித்து அனைத்து விபரங்களும் தெரியும்.  மத்திய அரசின் வருமான வரித்துறை குட்கா ஊழல் குறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதி ஒரு வருடம் ஆன பிறகும், அது குறித்து எந்த அழுத்தத்தையும் தராமல் மத்திய அரசு மவுனம் காக்கிறது.  குட்கா ஊழல் மற்றும் ஆர்கே நகர் பணப்பட்டுவாடா ஊழல் ஆகிய இரண்டிலும் உருப்படியாக எந்த விசாரணையும் நடைபெறவில்லை என்பது மோடிக்கு நன்றாகவே தெரியும்.   ஆளுநர் நினைத்தால் இது குறித்து ஒரு விரிவான அறிக்கையை மாநில அரசிடம் கோர முடியும்.  தமிழர் நலனுக்கு விரோதமான எத்தனையோ திட்டங்களுக்கு ஒரு நிமிடமும் தாமதிக்காமல் மாநில அரசை மிரட்டி அனுமதி பெறும் மத்திய அரசு, எடப்பாடி அரசின் ஊழல்களுக்கு துணை போவதே அவர்கள் எத்தகையவர்கள் என்பதை உணர்த்துகிறது.
156353_1768911022770_6154220_nஇந்த விவகாரம் குறித்து பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன், “குட்கா விவகாரத்தில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.   பல உயர் அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.  இதனால் இந்த விசாரணையை தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்துவது முறையாக இருக்காது.  சிபிஐ விசாரணை அல்லது, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை மட்டுமே இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும்.  தொடர்ந்து ஊழல் புகார்களில் சிக்கி ஆதாரங்களோடு சிக்கிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அமைச்சராக தொடர்வது, ஜனநாயகத்துக்கே இழுக்கு.   அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.  பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.
அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் எம்எல்ஏக்களுமாவது தேர்தல் செலவுக்காக நாங்கள் லஞ்சம் வாங்குகிறோம் என்று ஒரு சப்பைக்கட்டு கட்ட முடியும்.  ஆனால் இந்த அதிகாரிகளுக்கு என்ன கேடு வந்தது ?   வீட்டில் வேலை செய்ய பத்து பேர், சகல வசதிகளோடு கூடிய வசிப்பிடம்.  மிக உயர்ந்த சம்பளம்.  இதற்குப் பின்னும் குட்கா வியாபாரிகள் போன்ற நபர்களிடம் லஞ்சம் வாங்கும் இவர்கள் எப்படிப்பட்ட கீழ்த்தரமானவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
டிகே.ராஜேந்திரன் வரும் ஜுன் 30ல் ஓய்வு பெற இருக்கிறார்.  தீயணைப்புத் துறை இயக்குநராக உள்ள ஜார்ஜ் செப்டம்பர் இறுதியில் ஓய்வு பெற இருக்கிறார்.   உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றால் இவர்கள் இருவரும் உடனடியாக பணி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.   இளைஞர்களின் உயிரோடு விளையாடிய இவர்கள் நிம்மதியாக பணி ஓய்வு பெற அனுமதிக்கப்படுவது, இங்கே நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல என்பதையே உணர்த்தும்.  ஆனால் இவையெல்லாம் நடக்குமா என்பது கேள்விக்குறியே. ஆனால் பெரிய மனிதர்களாக சமூகத்தில் வலம் வரும் இந்த உயர் உயர் அதிகாரிகளின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவது நமது கடமை.    இவர்கள் யாரென்று இந்த சமூகம் தெரிந்து கொள்ளட்டும்.

கருத்துகள் இல்லை: