புதன், 5 ஜனவரி, 2022

திரிகோணமலை பெட்ரோலியக் களஞ்சியம் - இந்தியாவுக்குப் பின்னடைவு!

 மின்னம்பலம் : இலங்கையின் கிழக்கு முனைப்பகுதியான திருகோணமலை துறைமுகத்தில் பெட்ரோலியக் களஞ்சியத்தைக் கட்டுப்படுத்துவது யார் என்பதில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டன் ஆட்சிக்காலத்தில் தமிழர் தாயகப் பகுதியான திருகோணமலையில் மிகப் பெரும் பெட்ரோலியக் களஞ்சியம் அமைக்கப்பட்டது.
இதில், ஒரே சமயத்தில் 80 இலட்சம் பேரல்களில் பெட்ரோலியப் பொருள்களை சேமித்துவைக்க முடியும். இவ்வளவு வசதி கொண்ட உலக அளவில் சிறந்த சில சேமிப்புக் களஞ்சியங்களில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது.


கட்டியமைத்து விரைவில் நூறு ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும், இந்த சேமிப்புக் களஞ்சியம் இன்னும் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதால், முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி காலத்திலிருந்து திருகோணமலை பெட்ரோலியக் களஞ்சியத்தைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தைச் செய்துகொள்வதில் இந்திய அரசு முனைப்பாக உள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் திருகோணமலை துறைமுகம் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும், கூடுதல் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது.

எந்த வகையிலாவது திருகோணமலைத் துறைமுகத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கோ அதைப் பயன்படுத்தும் அளவுக்கோ இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதில், சீன, அமெரிக்க அரசுகள் தொடர்ந்து முயற்சி செய்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பெட்ரோலியக் களஞ்சியத்தின் ஒரு பகுதியை சீன அரசு கூட்டுப் பராமரிப்பின் பேரில் கட்டுப்படுத்த உடன்பாடு செய்ய முயன்றது.

இந்திய அரசு ஏற்கெனவே பெட்ரோலியக் களஞ்சியத்தின் ஒரு பகுதியை, இலங்கை ஐ.ஓ.சி.( இலங்கை இந்தியன் ஆயில் நிறுவனம்) எனும் பெயரில் இயக்கிவருகிறது. இந்த நிலையில், இலங்கை அமைச்சரவையில் நேற்று இந்த விவகாரம் பற்றி முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டது.

அதன்படி, திருகோணமலை பெட்ரோலியக் களஞ்சியத்தில் இலங்கை ஐ.ஓ.சி. இப்போது பயன்படுத்திவரும் 14 தாங்கிகளை மட்டும் அதே நிறுவனம் தொடர்ந்து கையாள்வது என்றும் 24 பெட்ரோலியத் தாங்கிகளை இலங்கை அரசின் பெட்ரோலியக் கூட்டுநிறுவனத்துக்கு ஒதுக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 61 பெட்ரோலியத் தாங்கிகள் இலங்கையும் இந்தியாவும் கூட்டாக திருகோணமலை பெட்ரோலிய முனைய நிறுவனம் என்கிற பெயரில் நிர்வகிக்கப்படும். இதில் 51 சதவீத பங்குகள் இலங்கைத் தரப்பிடமும் 49 சதவீதப் பங்குகள் இந்தியத் தரப்புக்கும் இருக்கும்.

இலங்கை எரிசக்தி அமைச்சகம் முன்மொழிந்த இந்தத் திட்டத்துக்கு அந்நாட்டு அமைச்சரவை நேற்று அனுமதி அளித்தது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை பெட்ரோலியக் களஞ்சியத்துக்குச் சென்ற இலங்கை அரசின் அதிகாரிகளை இந்திய அதிகாரிகள் பிடித்துவைத்துக்கொண்டனர்; அப்போதிருந்து இந்த விவகாரம் அந்நாட்டு அரசியலில் பெரும் பிரச்னையாக இருந்துவருகிறது. இப்போதைய முடிவின் மூலம் திருகோணமலை பெட்ரோலியக் களஞ்சியத்தின் 85 சதவீத தாங்கிகளை மீண்டும் இலங்கை கைப்பற்றியிருப்பது பெரும் வெற்றியாகும் என்று அந்நாட்டின் எரிசக்தித் துறை அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

இலங்கை அரசின் இந்த முடிவால், திருகோணமலை பெட்ரோலியக் களஞ்சியம் சீனம் போன்ற வேறு தரப்புக்குச் செல்லவும் வாய்ப்பு உள்ளது என்பதால், இந்தியப் பெருங்கடல் பகுதி புவி அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அரசுத் தரப்புக்கு இது பின்னடைவாகவும் கருதப்படுகிறது.

-முருகு

கருத்துகள் இல்லை: