புதன், 5 ஜனவரி, 2022

நாகினி சீரியல் நடிகர்களை பார்க்க யாழ்பணம் ஊடாக இந்திய செல்ல முயன்ற சிங்கள சிறுமிகளை போலீசார் மீட்டனர்

kuruvi.lk : ‘நாகினி’களை சந்திக்க யாழ். ஊடாக இந்தியா செல்ல திட்டமிட்ட சிறுமிகள்! நடந்தது என்ன?
தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் நாளாந்தம் ஒளிபரப்பாகும் பிரபல இந்திய தொலைக்காட்சி நாடகம் ஒன்றில் நடிக்கும் ஷிவன்யா மற்றும் சேஷா ஆகியோரை நேரில் பார்க்க படகு மூலம் இந்தியாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த மூன்று சிறுமிகளை இடைநடுவில் ஹார்ப்பர் பொலிசார் கடந்த 31 ஆம் திகதி கண்டுபிடித்துள்ளனர்.
இலங்கை சிங்கள தொலைக்காட்சி அலைவரிசைகளில் இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ஹிந்தி நாடகங்கள் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன.

இந்த தொலைக்காட்சி நாடகங்களை பார்ப்பதற்கு பெருந்தொகையான ரசிகர் கூட்டம் இருக்கின்றது.

குறிப்பாக கொரோனா லொக்டவுன் காலகட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத மக்கள் இந்த தொலைக்காட்சி அலைவரிசைகளபார்த்து ரசிப்பதை பொழுதுபோக்காகக் கொண்டிருந்தனர்.இதற்கு சிறுவர் சிறுமியர்கள் விதிவிலக்கல்ல. இவர்கள் நாடகத்துடன் ஒன்றிப் போவார்கள்.

8, 12 மற்றும் 14 வயதுகளையுடைய சிறுமிகளை காணவில்லையென்று அவர்களது பெற்றோர் ஹொரஹபொத்தானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.ஹொரவபொத்தானை, கும்புகொள்ளாவை, இதிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இந்தச் சிறுமிகளைத் தேடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.அப்போது பொலிசார் ஹொரவப்பொத்தானை பஸ்நிலையத்தில் இந்த சிறுமிகள் யாழ்ப்பாணம் செல்வதற்காக தரித்து நின்றபோது கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சிறுமிகள் பெற்றோருக்குத் தெரியாமல் கடந்த 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி சென்றதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மூன்று சிறுமிகளும் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் யானை காட்டுக்கு மத்தியிலுள்ள வீதி வழியாக நடந்து வெளி பொத்தானை சந்தியில் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் இ போ ச பஸ் வண்டியில் அதிகாலை 5 45 மணி அளவில் ஏறியுள்ளனர்.

அந்த பஸ் வண்டியில் வந்து கெபித்தி கொள்ளாவ நகரில் இறங்கிய அந்த சிறுமிகள் மீண்டும் அந்த நகரிலிருந்து கஹட்டகஸ்திலிய நகர் வரை செல்லும் பஸ் வண்டியில் ஏறி கஹட்டகஸ்திலிய நகரை வந்தடைந்துள்ளனர். பின்னர் அவர்கள் வழி தவறிவிட்டது என தெரிந்துகொண்டு மீண்டும் கஹட்டகஸ்திலிய நகரிலிருந்து ஹொரவப்பொத்தான செல்லும் பஸ் வண்டியில் ஏறி ஹொரவபொத்தானைநகரை வந்தடைந்துள்ளனர்.அங்கு யாழ்ப்பாணம் செல்லும் பஸ் வண்டியை எதிர்நோக்கி பஸ் தரிப்பிடத்தில் நின்றுள்ளனர் அங்கு நின்று கொண்டிருக்கும்போது 31ஆம் திகதி காலை 10.30மணியளவில் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

தொலைக்காட்சி நாடகத்தில் (நாகினி) நடிக்கும் சஷிவன்யா மற்றும் சேஷா ஆகியோரை பார்க்க ஆசைப் பட்டதாகவும் இதற்காக மூவரும் நீண்டகாலமாக திட்டம் தீட்டியதாவும் தெரிவித்த சிறுமிகள் அவர்கள் இந்தியாவில் இருப்பதால் இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கும் நகர் யாழ்ப்பாணம் என நண்பி ஒருவர் தெரிவித்ததால் முதலில் யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து படகில் இந்தியாவுக்குச் செல்வதே தமது நோக்கம் என அவர்கள் பொலிஸ் விசாரணையின்போது தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் இந்த சிறுமிகள் தமது பெற்றோரின் தொலைபேசியை பயன்படுத்தி இந்தியா உலகின் எந்தப் பகுதியில் இருக்கின்றது என்பதை அறிந்து கொண்டனர். பின்னர் இந்தப் பயணத்துக்காக நீண்டகாலமாக பணத்தைச் சேமித்து வந்ததாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

ஹொரவபொத்தானை பொலிசார் சிறுமிகளின் பெற்றோரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து கடுமையாக எச்சரித்த பின்னர் சிறுமிகளை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேபோல் கடந்த அக்டோபர் மாதமளவில் கொழும்பு குணசிங்கபுர பிரதேசத்தைச் சேர்ந்த 11,12 மற்றும் 14 வயதுகளையுடைய மூன்று முஸ்லிம் சிறுமிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிகளை பார்த்து தாமும் இதைப்போல் நடனமாட வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர்.

ஒருநாள் அதிகாலை வீட்டைவிட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறி இரண்டு நாட்களாக பல நகரங்களில் சுற்றித் திரிந்துவிட்டு இறுதியாக கொழும்பு திரும்பியுள்ளனர்.பின்னர் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் தமக்கு நடனம் பயில்வதற்கு ஒரு இடத்தை தெரிவு செய்து சேர்த்து விடும்படி கேட்டுள்ளனர்.

அங்கிருந்த எதிர்க்கட்சித் தலைவரின் உதவியாளர் இந்த சிறுமிகளுக்கு புத்திமதி கூறி வீடுகளுக்குச் செல்லுமாறு கூறியுள்ளார்.இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்.கணேசன்

கருத்துகள் இல்லை: