செவ்வாய், 4 ஜனவரி, 2022

ஆன்லைன் சூதாட்டம் எப்படி பொறிவைத்து பிடிக்கிறது? ஆய்வு கட்டுரை - பனிமலர் பன்னீர்செல்வம்

May be an image of 2 people and people standing

Panimalar Panneerselvam :  ஆன்லைன் சூதால் மற்றுமொரு அழகிய குடும்பம் சிதைந்திருக்கிறது.
பார்க்ளேஸ் வங்கியில் வேலை. ஆண்டுக்கு 28 லட்சம் சம்பளம்.
அத்தனை அழகான இரண்டு பிள்ளைகள் என வரம் வாங்கி வாழ்ந்திருந்த வாழ்வை,
ஆன்லைன் ரம்மி ஒரு நொடியில் முடித்து வைத்த கொடூரத்தால் மனம் பற்றி எரிகிறது.
மற்ற மரணங்கள் போல இதிலும் சூது விளையாட்டாய்த்தான் ஆரம்பித்திருக்கிறது.
பாதியில் விட முடியாமல் நண்பர்களிடத்தில் கடன் பெற்றும் விளையாடியிருக்கிறார்.
ஒரு கோடிக்கு மேல் இழந்து பரிதவிக்க அப்போது தான் இது மனைவிக்கு தெரிய வந்திருக்கிறது.
பிரச்சினை வெடிக்க, கோபத்தில் மொத்த குடும்பத்தையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.


ஆன்லைன் சூதில் வெல்வது மிகமிகக் கடினம். அதன் RNG (Random Number Generator )அல்காரிதம் அதிநுணுக்கமாக உருவாக்கப்பட்டது.
நியாயமாக இதன் வேலை ரேண்டமாக எண்களை உருவாக்கி அனுப்புவதுதான் என்றாலும், நீங்கள் தோல்வி அடைந்ததும் எவ்வளவு துரிதமாக மற்றுமொரு ஆட்டத்தை ஆரம்பிக்கிறீர்கள்,
பண இருப்பு கரைந்ததும் எவ்வளவு வேகமாக மீண்டும் ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்பதையெல்லாம் வைத்து நீங்கள் அடிமையாகி விட்டீர்களா, இல்லையா என்பதையும் RNG கண்டுகொள்ளும்.

அடிமை என்று தெரிந்தால் அதன் அரக்க முகம் வெளிவரும். மிகமிகக் கடினமாகத்தான் கார்டுகளை (எண்களை) வழங்கும். மூன்று அல்லது நான்கு தோல்விகளுக்கு இடையே ஒரு சொற்ப வெற்றியைக் கொடுக்கும். காரணம், இது நியாயமாகத்தான் செயல்படுகிறது, என்னுடைய கெட்ட நேரம் என்று உங்களை நம்ப வைக்கும் உத்தி தான் இது. ஆனால் உண்மையில் நீங்கள் எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் மீண்டும் வருவீர்கள் என்பதை அது நன்கு அறியும். ஒருவேளை நீங்கள் அன்இன்ஸ்டால் செய்து தப்பித்தாலும், சரியாக மூன்று நாள் கழித்து, போனஸ் பணத்தை க்ரெடிட் செய்திருக்கிறேன் வா என வலை விரிக்கும். ஆகவே அல்காரிதத்தை வென்று பணக்காரனாவது என்பதற்கு வாய்ப்பே இல்லை.

இதிலிருந்து மீள வேண்டும் என நினைப்பவர்களுக்கு, முறையான மனசிகிச்சை இன்றி இந்த மயக்கத்திலிருந்து தப்புவது கடினம். மனதின் ஓரத்தில் இதன் மீதான ஆசை இருந்து கொண்டே இருக்கும். மனைவியுடன் விஷயத்தை சொல்லிவிட்டு ஸ்மார்ட்போனை தூக்கி கடாசி விடுங்கள். நல்ல மனநல மருத்துவரிடம் பேசுங்கள். அதெல்லாம் தேவையில்ல ! நான் சும்மா டைம் பாஸுக்கு என்று இன்னும் மழுப்பினீர்கள் என்றால் கமெண்டில் கொடுத்திருக்கும் இன்ஸ்டாகிராம் இணைப்பை சொடுக்கி மூன்று நாட்கள் முன்பு வரை அவர்கள் வாழ்ந்திருந்த ஆதுரமான வாழ்வை பார்த்து விடுங்கள். எத்தனை நேசம், அன்பு, மகிழ்ச்சி. அதில் ஏதாவது ஒன்றிலாவது இன்னும் இரண்டு நாட்களில் ஆன்லைன் ரம்மி எங்களை அடித்துக் கொல்லப் போகிறது என்பதைக் கணிக்க முடிகிறதா ! இல்லையல்லவா ! சூதை விளையாட்டாய் விளையாடுவோர் அனைவருக்கும் இது பொருந்திப் போகும்.

தமிழக அரசு ஆன்லைன் சூது எனும் அரக்கனை தடை செய்தது. நீதிமன்றம் தடையை நீக்கி மீண்டும் உயிர் தந்தது. இதற்கு முன்பான மரணங்களுக்கு விளையாட்டுப் போதை காரணமாக இருக்கலாம். ஆனால் தடை செய்ததை மீண்டும் உயிர்ப்பித்த பின் நிகழ்ந்துள்ள இக்கொடூரத்திற்கு அல்காரிதமோ, ஆன்லைன் சூது மட்டுமோ காரணமல்ல !

கருத்துகள் இல்லை: