Periyasaamy Chandrasekaran : 1994 இல் 'கிங்மேக்கராக' உருவெடுத்து மலையக மக்களின் வாக்குபெறுமதியை தேசிய மட்டத்தில் அடையாளப்படுத்திய அமரர்.பெ. சந்திரசேகரன்!
1994 ஆகஸ்ட் 16 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில்
நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சையாக களமிறங்கிய மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் 23,453 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையிலான மக்கள் கூட்டணி 14 போனஸ் ஆசனங்கள் சகிதம் 105 ஆசனங்களே கைவசம் இருந்தன. இந்நிலையில் ஆட்சியமைக்க ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேசக்கரம் நீட்டியது. (6+1) ஏழு ஆசனங்கள்.
இதனால் ஆட்சியமைப்பதற்கு (113) சந்திரிக்கா தலைமையிலான கூட்டணிக்கு மேலுமொரு ஆசனம் (எம்.பியின் ஆதரவு) தேவைப்பட்டது.
இதன்போதே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக சந்திரசேகரன் உருவெடுத்தார். சந்திரிக்காவுக்கு ஆதரவு வழங்கினார். பின்னர் பிரதி அமைச்சு பதவியும் வழங்கப்பட்டது.
மலையகத்தில் தனிவீட்டுத் திட்டம் உட்பட புரட்சிகரமான மாற்றங்களுக்கு இவரே பிள்ளையார் சுழி பிள்ளையார் சுழிபோட்டார்.
94 இல் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்தே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட்டது.
எனினும், தேர்தலின் பின்னர் மக்கள் கூட்டணியில் இணைந்துகொண்ட இ.தொ.காவின் தலைவருக்கு சந்திரிக்காவின் அமைச்சரவையில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு பதவி வழங்கப்பட்டது.
1977 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பித்த அமரர். சந்திரசேகரன், சலுகை அரசியலுக்கு அப்பால் உரிமை அரசியலுக்கே முன்னுரிமை வழங்கினார்.
அரசியல் பிரவேசத்துக்கு முன்னரே மாணவர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள் முன்னெடுத்தார்.மலையக தியாகி சிவனு லெட்சுமணன் கொல்லப்பட்டபோது அதற்கு எதிராக மலையகத்தில் மாணவர்களும் போராடினர். ஹட்டன் பகுதியில் இவரே தலைமை வகித்தார்.
வடக்கு, கிழக்கு சொந்தங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உரிமைப்போராட்டத்தையும் அங்கீகரித்தார். 'வெட்டு, 'குத்து' , சிறைவாசம் என அரசியலில் அத்தனை பாகங்களையும் பகுத்தறிந்து, சவால்களை முறியடித்து சமூகத்துக்காக எதிர்நீச்சல் போட்டார்.
இப்படியான பெருந்தலைவரை 2010 ஜனவரி முதலாம் திகதி இழந்துவிட்டோம். இன்று அவரின் 12ஆவது ஆண்டு நினைவு தினமாகும். எழுச்சி நாயகனுக்கு அகவணக்கம் செலுத்துகின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக