சனி, 8 ஜனவரி, 2022

ஓபிசி பிரிவினருக்கு மருத்துவப்படிப்பில் 4,000 இடங்கள் கிடைக்கும் - வில்சன், வழக்கறிஞர்

 மின்னம்பலம் : மருத்துவக் கல்வியில் சேரும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுவதன் மூலம் 4000 இடங்கள் கிடைக்கும் என்று மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடும் வழங்கி மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கில், திமுக சார்பில் நடப்பு கல்வியாண்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதில் எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் இன்று (ஜனவரி 7) தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ஓபிசி பிரிவினருக்கு, மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்தது. அதுபோன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு மட்டும் கடைப்பிடிக்க உத்தரவிட்டது. இதுதொடர்பான விரிவான விசாரணை மார்ச் மாதம் நடைபெறும் என்று தெரிவித்தது.

தீர்ப்பு குறித்து இவ்வழக்கில் திமுக சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சமூக நீதியைக் காக்க வேண்டும் என்று முன்னெடுத்துச் சென்ற இந்த வழக்கில் ஒரு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. இதன்மூலம் ஓபிசி மாணவர்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ இடங்களில் 4 ஆயிரம் இடங்கள் கிடைக்கும். இளநிலை மருத்துவ படிப்பிற்கு மட்டுமல்லாமல் முதுகலைப் பட்டப் படிப்புக்கும் கிடைக்கும். இதை மிகவும் நல்ல தீர்ப்பாகப் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதுபோன்று இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், முதல் முறையாக அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீடு இவ்வாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 4,000 மாணவர்கள், ஒவ்வோர் ஆண்டும் இதன்மூலம் தங்களுடைய உரிமையை, பலனைப் பெறுவார்கள்.

அண்மைக் காலங்களாக எல்லா மாநிலங்களிலும் பரவலான அளவில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு, அந்த மாநில மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை படிப்புகள் மட்டுமன்றி, எம்.பி.பி.எஸ். படிப்பிலும் அகில இந்தியத் தொகுப்புக்கு இடங்கள் ஒதுக்கப்படும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒவ்வொரு மாநிலமும் அதன் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி 100 விழுக்காடு இடங்களையும் நிரப்பிக் கொள்ளும் நடைமுறை வர வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலை.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்ற பெயரில், உயர் சாதியினருக்கு வழங்கப்படும் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இது தொடர்பாகத் திமுக தொடர்ந்துள்ள வழக்கு அரசியல் சாசன அமர்வு முன் நிலுவையில் உள்ளது. நேற்று நடந்த வாதத்தின்போதும் கூட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டையும் , உயர் சாதியினருக்கான ஒதுக்கீட்டையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக்கூடாது என்றும், சமமற்ற இரு பிரிவினரைச் சமமான தட்டில் வைத்துப் பார்க்கக்கூடாது என்றும் கழகத்தின் சார்பில் வாதாடிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் எடுத்துரைத்துள்ளார்.

வருமானத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று இந்திரா சஹானி வழக்கில் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பையும் அவர் நினைவூட்டி, தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். வரும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ள விரிவான விசாரணையின்போதும், அரசியல் சாசன அமர்வின் முன் உள்ள மூல வழக்கிலும், 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டவிரோதமானது என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்து திமுக விரிவான வாதங்களை வைக்கும், அந்த அநீதியை முறியடிக்கும் போராட்டத்திலும் வெல்லும்” என்று கூறியுள்ளார்.

-பிரியா


கருத்துகள் இல்லை: