செவ்வாய், 4 ஜனவரி, 2022

உள்ளத்தில் நல்ல உள்ளம் .. வஞ்சகர் கூட்டமடா .. சீர்காழியும் சித் ஸ்ரீ ராமும்

May be an image of 1 person and text that says 'Ullathil Nalla Ullam...'
May be an image of 1 person

Govi Lenin :  வருவதை எதிர்கொள்ளடா...       உள்ளத்தில் நல்ல உள்ளத்தை அவர் எப்படிப் பாடினார் என்பதைவிட, ஏன் பாடினார் என்பது முக்கியமானது.
சங்கீத மும்மூர்த்திகளில் முதன்மையானவரான, தியாகராஜர் எனும் தியாகய்யர் கர்நாடக சங்கீத வித்வான்களுக்குத் தியாகப் பிரம்மம். இசையின் பிரம்மாவான அவர்.
 அடைக்கலமான திருவையாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் தியாகராஜர் ஆராதனையில் பங்கேற்றுப் பாடுவது என்பது அவர்களைப் பொறுத்தவரை வரம்.

இறைவனை நினைத்துப் பாடப்படும் அந்தக் கீர்த்தனைகள் எதுவும் தமிழில் இருக்காது. தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளின் கலவையாக இருக்கும். அப்படிப்பட்ட தியாராஜர் ஆராதனை விழா மேடையில் 1946ஆம் ஆண்டு தண்டபாணி தேசிகர்  பாடினார்.
சித்தி விநாயகனே என்று பிள்ளையார் பாட்டுடன்தான் பக்தி சொட்டச் சொட்டச் தொடங்கினார். ஆனால், தமிழில் பாடிவிட்டார்.
அடுத்ததாக பாட வேண்டிய அரியக்குடி இராமானுஜய்யங்காருக்கு கோபம்னா கோபம். தேசிகர் பாடிய மேடையைத் தண்ணீர் விட்டுக் கழுவச் சொல்லி, அதன்பிறகே மேடையேறி தியாகய்யர் கீர்த்தனைகளைப் பாடினார் அரியக்குடியார். தியாகராஜர் ஆராதனை அரங்கில் தமிழுக்கு நேர்ந்த கதி பற்றி, பெரியாரின் குடிஅரசு இதழில் ‘தீட்டாயிடுத்து’ என்ற தலைப்பில் துணைத் தலையங்கம் வெளியானது. அதை எழுதியவர், 22 வயது இளைஞரான கலைஞர்.
திருவையாறுகள் பல இடங்களிலும் ஊடுருவிப் பாய்ந்ததால், தமிழிசை மேடைகளின் தேவை அதிகமானது. தமிழ் இசை மன்றம் உருவானது. மேலும் பல தமிழ் அரங்குகள் பெருகின. அதன்பிறகே, ‘சபா’க்களில் தமிழுக்கும் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனாலும் திருவையாறு தியாகராஜர் ஆராதனையில் தமிழ் ஒலிக்காது. இதனை எதிர்த்து, மக்கள் கலை இலக்கியக் கழகம் (ம.க.இ.க) 1980களின் இறுதியிலும் 1990களின் தொடக்கத்திலும் ‘தமிழில் பாடு.. இல்லையேல் ஒடு..’ என்ற முழக்கத்தை முன்வைத்து போராட்டக் குரல் எழுப்பியது. திருவையாறு நிகழ்வுக்குப் போட்டியாக தஞ்சாவூர் திலகர் திடலில், தமிழ் இசை நிகழ்ச்சிகளை நடத்தியது. உழைக்கும் மக்களின் போர்க்குரலாக இசை மேடை அமைந்தது. பல ஆடியோ கேசட்டுகள் வெளியாயின.
தனித் தனியாகப் பல கலைஞர்களும் தமிழ் இசையை, நாட்டுப்புறப் பாடல்களைக்  கேசட்டுகளாக வெளியிட்டனர். கொல்லங்குடி கருப்பாயி, விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் தொடங்கி செந்தில்-ராஜலட்சுமி வரையிலான நாட்டுப்புற நல்லிசைக் கலைஞர்களுக்கு கிடைத்திருக்கும் திரைத்துறை அங்கீகாரத்திலும் அரசு விருதுகளிலும் அரசு அமைப்பிற்கு எதிரான கலகக்காரர்களான ம.க.இ.க.வினரின் மக்கள் இசை உருவாக்கிய மறைமுகத் தாக்கம் உண்டு.
‘சபா’ சான்ஸ் பெற்று, ‘சபாஷ்’ வாங்குவதே சங்கீதத்திற்கான உயர்ந்த அங்கீகாரம் என்கிற ‘சிந்து பைரவி’ காலம் முடிந்து, தெருவில் பாடியே மக்களை ஈர்த்து, அரங்கத்தில் அசத்த முடியும் என்கிற ‘புது வசந்தம்’ உருவாகியிருந்தது. சபாவில் கீர்த்தனைகளைப் பாடினால் போதும் என நினைத்திருந்தவர்களும் பிற மேடைகளுக்கு வந்து மக்கள் விரும்பும் பாடல்களை-மக்களின் மொழியில் பாட வேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.
மக்கள் மொழியை நன்கறிந்த கலை வடிவம், திரைப்படம். தமிழ்த் திரைப்படம் எல்லா வகையான இசையையும் தன் ரசிர்களுக்குத் தகுந்தபடி வழங்கியிருக்கிறது. ஜி.ராமநாதன் காலத்துக்கு முன்பிருந்து ஜி.வி.பிரகாஷூக்குப் பின்பு வரையிலான இசையமைப்பாளர்கள் இதனை நேர்த்தியாகப் படைத்து வருகிறார்கள். கொடிக்கட்டிப் பறந்த இசையமைப்பாளர்களான கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள் ‘சபா‘வில் நீட்டி முழங்கியதை மூன்று நான்கு நிமிடங்களில் கச்சிதமாகத் திரையில் வழங்கிய மாமேதைகள்.  
‘சபா’ கச்சேரி என்பது டெஸ்ட் மேட்ச் டைப். திரை இசை ட்வெண்ட்டி 20. சித்ஸ்ரீராம் ட்வெண்ட்டி20 ரசிகர்கள் நிறைந்த உலகில், டெஸ்ட் மேட்ச் பாணியைக் கடைப்பிடித்ததால், உள்ளத்தில் நல்ல உள்ளம்‘ கொத்துப் புரோட்டாவாகி விட்டது. சபா ரசிகர்களுக்கு அவருடைய அட்சர சுத்தமான ஆலாபனைகள், சங்கதிகள், கமகங்கள், லாவகம் எல்லாம் கட்டி இழுத்திருக்கும். திரை இசை வடிவில் அந்தப் பாடலைத் தலைமுறைக் கடந்தும் ரசிப்பவர்களுக்கு, சீர்காழி கோவிந்தராஜனே நேரில் வந்து,  வேறு பாணியில்  பாடினாலும்கூட  உயிரை வதைப்பது போலத்தான் இருக்கும்.
அந்தப் பாடலின் காட்சியே, வாழ்நாள் முழுவதும் தனது சுயமரியாதைக்காகப் போராடிய ஒரு புராண கதாபாத்திரத்தின் உயிரை வஞ்சகமாக உருவி எடுப்பதற்காக வைக்கப்பட்டதுதான். சீர்காழியார் தன் வெண்கலக் குரலால், கேட்பவர்களின் உயிரை எல்லாம் உருக்கி, கதாபாத்திரத்தின் உயிரை  உருவுவதை நியாயப்படுத்தி விடுவார். சித்ஸ்ரீராமிடம் சீர்காழி அளவுக்கு இரக்கமில்லை. மனுசன் கொன்னுட்டாரு.   
திருவள்ளுவர் ஆண்டு 2052 மார்கழி 19

May be an image of 1 person and text that says 'Ullathil Nalla Ullam...'

கருத்துகள் இல்லை: