வியாழன், 6 ஜனவரி, 2022

ராஜேந்திர பாலாஜி கைதில் அவசரம் ஏன்?- தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

 மாலைமலர் : கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி வரை பெற்று மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவரை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மதியம் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் காரில் சென்ற ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை விசாரணைக்காக விருதுநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். உச்ச நீதிமன்றத்தில்   ஏற்கனவே ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இன்று விசாரணைக்கு வரும் நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மீதான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றில்   நடந்தது. அப்போது நீதிபதிகள் சரமாரியாக தமிழ்நாடு  அரசுக்கு கேள்வி எழுப்பினார்கள்.

ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம். அதற்குள் ஏன் இவ்வளவு அவசரம்? ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர்.

ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் அவர் சார்ந்த வழக்கறிஞர்களை தொந்தரவு செய்தது ஏன் என்றும் சரமாரியாக கேட்டனர்.

இதற்கு பதில் அளித்து  அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கூறும்போது, ராஜேந்திர பாலாஜி கைதில் நிச்சயமாக அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றார்.

இதைத்தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்பிணை  வழக்கு விசாரணையை வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை)க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

கருத்துகள் இல்லை: