திங்கள், 3 ஜனவரி, 2022

புதுக்கோட்டை துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு ! சிகிச்சை பலன் அழிக்கவில்லை!

மாலைமலர் :  புதுக்கோட்டை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகேயுள்ள கொத்தமங்களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன், கூலித் தொழிலாளி. இவரது மகன் புகழேந்தி (வயது 11). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால் நார்த்தாமலையில் உள்ள தனது தாத்தா முத்து என்பவரது வீட்டிற்கு வந்திருந்தான். சிறுவன் புகழேந்தி தனது பாட்டி வீட்டில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

அப்போது அங்கிருந்து சுமார் 1½ கி.மீ. தூரத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியில் இருந்து வெளியான 2 தோட்டாக்கள் மின்னல் வேகத்தில் வந்தன.

அதில் ஒரு குண்டு வீட்டின் சுவரிலும், மற்றொரு குண்டு சிறுவன் புகழேந்தியின் இடது தலையிலும் பாய்ந்தது.

அடுத்த விநாடி சிறுவன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தான். இதைப்பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை காரில் தூக்கிக்கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.

உடனடியாக மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் தலைமை மருத்துவர்கள் சிறுவனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

சிறுவனின் இடது தலையில் மிகவும் ஆழமாக துப்பாக்கி குண்டு புகுந்துள்ளதால் அதனை அகற்றும் முதல்கட்ட சிகிச்சையில் டாக்டர்கள் ஈடுபட்டனர்.

மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: