திங்கள், 3 ஜனவரி, 2022

சைடு டிஷ் லாபம் 90 கோடி: செந்தில்பாலாஜி மாஸ்டர் பிளான்(டாஸ்மார்க்) பின்னணி!

சைடு டிஷ்  லாபம் 90 கோடி:  செந்தில்பாலாஜி  மாஸ்டர் பிளான்  பின்னணி!

மின்னம்பலம் : டாஸ்மாக் மது பான பார் டெண்டரில் முறைகேடு நடப்பதாக இன்று (ஜனவரி 3) பார் உரிமையாளர்கள் அத்துறைக்கான அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டின் முன் போராட்டம் நடத்திய நிலையில், அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து, “டெண்டர்கள் இப்போதுதான் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. எந்த முறைகேடும் இல்லாமல் வெளிப்படையாக நடந்திருக்கிறது” என்று பதிலளித்துள்ளார்.
அதேநேரம், “டெண்டர் நிபந்தனைகளைப் பின்பற்றாதவர்கள் யாராக இருந்தாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அவர்கள் யார், எந்த கட்சி என்பது பற்றிய எந்த விறுப்பு வெறுப்பும் இல்லை” என்றும் சொல்லியிருக்கிறார்.

இந்த நிலையில் நாம் ஏற்கனவே இன்று (ஜனவரி 3) காலை 7 மணிப்பதிப்பில் மது பான பார் மாஸ்டர் பிளான்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். நமது தொடர் விசாரணையில் அந்த மாஸ்டர் பிளான் பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

“மது பான பார்கள் தமிழகம் முழுதும் வெவ்வேறு நபர்களுக்கு கொடுப்பது போல வெளியே தெரிந்தாலும் ஒரு சில தனி நபர்களின் கட்டுப்பாட்டுக்குள் இந்த பார்களை கொண்டு செல்வதற்கான முயற்சி நடக்கிறது. இதன் மூலம் பெரும் தொகையை கட்சிக்காக புரட்ட முடியும் என்பது செந்தில்பாலாஜியின் ஆலோசனை. அதன்படியே சில செயல்திட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

அதாவது தமிழகத்திலுள்ள மொத்த மது பான பார்களையும் ஒரு சில பெரும்புள்ளிகள் மொத்தமாக வாங்கி அதற்கான சைடு டிஷ்களையும் அவர்களே சப்ளை செய்வார்கள். அவர்களே இதன் மூலம் ஒரு பெரும் தொகையை புரட்டித் தருவார்கள். இதை கட்சிப் பணிக்கு செலவு செய்துகொள்ளலாம் என்பதுதான் செந்தில்பாலாஜி போட்டுக் கொடுத்துள்ள மாஸ்டர் பிளான்.

அந்த செயல் திட்டங்களில் ஒரு சின்ன சாம்பிள்... மது பான பார்களில் விற்பனையாகும் கடலைப் பாக்கெட்டுகளில் இருந்து ஆரம்பிக்கலாம்.

மது பான பார்களில் மசாலா கடலை பருப்பு, மசாலா பீனெட், காராசேவு , முள் காராசேவு தலா 12 கிராம் பாக்கெட், மிக்சர் 20 கிராம் இப்படி ஒவ்வொரு பாக்கெட்டும் 2 ரூபாய் 80 காசு அடக்கச் செல்வாகிறது. போக்குவரத்து செலவு ஒரு ரூபாய், எக்ஸ்ட்ரா கமிஷன் ஒரு ரூபாய் 20 காசு என்று வைத்துக் கொண்டால் கூட மொத்தம் 5 ரூபாய் ஆகிறது. இந்நிலையில் இந்த ஒவ்வொரு பாக்கெட்டும் பத்து ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் குவார்ட்டர் பாட்டில் விற்பனையாகிறது. அதிபட்சமாக 80 ஆயிரம் பாட்டில்களை வாங்கிக் கொண்டு வெளியே சென்றுவிடுவதாக வைத்துக் கொண்டாலும் பார்களில் ஒரு லட்சம் குவார்ட்டர் பாட்டில்கள் குடிக்கப்படுகின்றன. (பீர், ஹாஃப் பாட்டில்கள், ஃபுல் பாட்டில்கள் கணக்கு தனி)

ஒரு லட்சம் குவார்ட்டர் பாட்டில்களை அருந்துவோர் மேற்குறிப்பிட்ட பாக்கெட்டுகளைத்தான் வாங்கியாகவேண்டும். வெளியில் இருந்து அவர்களுக்கு வாய்ப்பே கிடையாது. இவ்வாறு ஒரு லட்சம் பாட்டில்களுக்கு சைடு டிஷ் ஆக மேற்குறிப்பிட்ட பாக்கெட்டுகளில் குறைந்தபட்சம் ஒரு பாக்கெட் விற்பனையானால் கூட ஒரு லட்சம் பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன. இதில் ஒவ்வொரு பாக்கெட்டுக்கும் 5 ரூபாய் லாபம் கிடைக்கிறது. ஆக ஒரு நாளைக்கு 12 கிராம் கடலை பருப்பு பாக்கெட் மூலமாக மட்டுமே 5லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது. இதேபோல மற்ற 5 சைடிஷ் பாக்கெட்டுகளும் விற்பனையாகும் போது மொத்தம் 25 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது. ஆக ஒரு நாளைக்கு 25 லட்சம் ரூபாய் லாபம் மட்டுமே என்றால் ஒரு மாதத்துக்கு ஏழு கோடியே 50 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. ஒரு வருடத்துக்கு என்றால் சுமார் 90 கோடி ரூபாய் சைடிஷ் பாக்கெட்டுகள் மூலமாக லாபம் மட்டுமே கிடைக்கிறது

இதுதான் சென்ட்ரலைஸ்டு விற்பனைக்கான மாஸ்டர் பிளான். அதாவது தமிழ்நாட்டு பார்களில் விற்பனையாகும் கடலை பருப்பு பாக்கெட் கூட தமிழகம் முழுவதற்கும் ஒருவரால்தான் சப்ளை செய்யப்படும். இதுபோன்ற சின்னச் சின்ன பாக்கெட்டுகளிலேயே இவ்வளவு வருமானம் என்றால் மற்ற சைடு டிஷ்களின் விலை அதற்கான லாபம் பற்றி கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்கிறார்கள்.

அடுத்ததாக வாட்டர் பாட்டில்... மது பான பார்களில் விற்பனை செய்யப்படும் வாட்டர் பாட்டில் விற்பனைக்குப் பின்னாலும் ஒரு பெரும் மாஸ்டர் பிளான் தயாராக இருக்கிறது.

அது நாளை காலை 7 மணி பதிப்பில்....

-வேந்தன்

 

மது பார்கள்... மாஸ்டர் பிளான்: மூர்ச்சையில் திமுக மாசெக்கள்!

மது பார்கள்: செந்தில்பாலாஜி வீட்டு முன் போராட்டம்

பார் டெண்டர்:செந்தில்பாலாஜி விளக்கம்!

கருத்துகள் இல்லை: