வியாழன், 6 ஜனவரி, 2022

கிரகங்களுக்கும் ஜாதி உண்டாம் ... ? குரு பார்ப்பனராமே? சந்திரன் சூத்திரனாமே? அப்புறம் நெப்டியூன் யுரேனஸ் புளூட்டோ இத்தியாதி?

 Dhinakaran Chelliah :   RedPix 24X7 சேனலில் சமீபத்தில் வெளியான Sri Ramji அவர்களின் நேர்முகம் நிகழ்ச்சியைக் கேட்டேன். இதில்,Sri Ramji ஐயா அவர்கள் ஜோதிடத்திற்கும் வர்ணாசிரமத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றும், வர்ணம் மாறக் கூடியது அதை தொழில் சார்ந்தது பிறப்பால் அல்ல எனப் பல பொய்களைக் கூறியிருக்கிறார்…
ஜோதிட சாஸ்திரம் வர்ணாஸ்ரமம் சாராதது என அவர் கூறியது பொய் என இப்பதிவை வாசிப்பவர்களுக்கு விளங்கும்.
ஜோதிட நூல்கள் அனைத்தும் வர்ணம் சாதியை அடிப்படையாகக் கொண்டவை. உதாரணத்திற்கு சில ஜோதிட நூல்களில் உள்ளவற்றைத் தருகிறேன்…
முதல் நூல்:Bangalore Venkata Raman (Editor,The Astrological Magazine) அவர்கள் எழுதிய Hindu Predictive Astrology
எனும் நூலில் உள்ள குறிப்பைத் தருகிறேன்;
கிரகங்களின் ஜாதிகள்:


சுக்கிரன் (Venus), குரு(Jupiter) பிராம்மணர்களுக்கு உரிய கிரகங்கள்.
சூரியன்(Sun), செவ்வாய்(Mars) க்ஷத்ரியர்களுக்கு உரிய கிரகங்கள்.
சந்திரன்(Moon) வைசியர்களுக்கு உரிய கிரகம்.
புதன்(Mercury) சூத்திரர்களுக்கு உரிய கிரகம்.
சனி(Saturn) வர்ணமற்றவர்களுக்கு (Antyaja) உரிய கிரகம்.
Planetary Castes.-Venus and Jupiter are Brahmins or holy people; the Sun and Mars are Kshatriyas or belong to the warrior caste; the Moon is Vaisya or trader; Mercury is Sudra or farmer and Saturn is Antyaja or untouchable.
இரண்டாவது நூல்:N.P.Subramaniya Iyer அவர்கள் எழுதிய Kalaprakasika எனும் நூலிலிருந்து சில குறிப்புகள்;
கிழமைகளில்,
ஞாயிறு : பிராம்மணர்களுக்குச் சாதகமானது
செவ்வாய்: க்ஷத்ரியர்களுக்குச் சாதகமானது
சனி: வைசியர்களுக்குச் சாதகமானது
திங்கள்,புதன்,வியாழன்,வெள்ளி: மற்றவர்களுக்கு.
Among malefic days, Sunday is favourable for Brahmanas; Tuesday for Kshathriyas; and Saturday for Vaisyas and other castes.
ஆணுக்கு தனி கோத்திரம்,பெண்ணுக்கு தனி கோத்திரம் இருக்க வேண்டும்,ஒரே கோத்திரம் உள்ள ஆண் பெண் சேர்ந்தால் தீயதை விளைவிக்கும்.
The Gothras of the man and the woman should be different. If it be the same, it will produce evil.
கடகம்,மீனம்,விருச்சிகம் பிராம்மணர்களுக்கானது,
துலாம்,சிம்மம்,தனுசு க்ஷத்ரியர்களுக்கானது,
மேஷம்,மிதுனம்,கும்பம் வைசியர்களுக்கானது,
ரிஷபம்,கன்னி,மகரம் சூத்திரர்களுக்கானது.
மேல் ஜாதி ஆணுக்கும் கீழ் ஜாதிப் பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுதல் கூடாது.
The Castes of the Signs-Signs Cancer, Pisces and Scorpio belong to Brahma caste; Libra,Leo and Sagittari are of Kshathrya caste; Aries, Gemini and Aquarius are of Vaisya caste; Taurus, Virgo and Capricorn are of Sudra caste. There should be no marriage between a man of a lower caste and a woman of a higher.
மூன்றாவது நூல்: N.Chidambaram Iyer (Founder of Tiruvadi Jotistantra Saba) மொழிபெயர்த்து 1884 ல் வெளியிட்ட Brihat Samhita of Varaha Mihira எனும் நூல்.
Venus (சுக்கிரன்) தலைப்பில் உள்ள ஒரு பகுதியில் நட்சத்திரக் கூட்டம் பற்றி பல குறிப்புகள் உண்டு, அதில் ஒரு சில குறிப்புகள்;
If Venus who so reappears in the said circle, should be crossed by a planet, the Mlechas, forestmen, persons that live by dogs, the hill men of Gomanta and Gonards, the Chandalas, the Sudras and the people of Videha will become wicked and lawless:
The five constellations from Magha form the third mandala: if Venus should reappear in it, crops will suffer; there will also be suffering from hunger and robbers. Chandalas will prosper and there will be an intermingling of castes.
If Venus, who so reappears in the said mandala, should be crossed by a planet, shepherds, hunters, the Sudras, the Pundras, the border Mlechas, the Sulikas, forestmen, the Dravidas and persons who live close to the sea will be afflicted with miseries.
The three constellations from Swati form the fourth mandala; if Venus should reappear in it, mankind will be free from fear; the Brahmins and Kshatryas will prosper and friends will turn into enemies.
நான்காவது நூல்:”சர்வபிரயாண சகுணசாஸ்திரம்”,1902 ஆம் ஆண்டு பதிப்பு நூலிலிருந்து,
நாமகரணஞ் செய்ய விதி(பிள்ளைக்கு பெயர் சூட்டுவதற்கான விதி);
“பிராமணருக்குப் பிள்ளை பிறந்த 12-ந் நாளும்,க்ஷத்திரியருக்கு16-ந் நாளும்,வைசியருக்கு 21-ந் நாளும், சூத்திரருக்கு 31-ந் நாளும், நாமகரணஞ் செய்யவேண்டும்”
ஐந்தாவது நூல்:
பரமசிவன் பார்வதிக் குபதேசித்த தாக  “மழைக்குறி சாஸ்திரம்” எனும் ஜோதிட நூல் வழங்கப் படுகிறது.
ஜோதிட நூல்கள் முழுமையாகவே வர்ணங்களையும் ஜாதிப் பிரிவினைகளையும் அடிப்படையாகக் கொண்டவை.
பரமசிவன் பார்வதிக்கு வேறு வேலையில்லாமல் பாடல்கள் பாடி உபதேசிப்பதும் கிரகங்களின் மாறுதல்களும் ஜாதி வர்ணத்திற்கு சாதகமாக பாதகமாக அமையும் என்றும் இன்றைய விஞ்ஞான யுகத்திலும் நம்புகிறவர்கள் அதிகம்.
சொல்லு மரசன் றனைவேடன் சூழப் பீடை யந்தணர்க்காம்
செல்லுங் குசனைக் கவித்திடிலோ சேட்டை யதிகஞ் செய்திடுவர்
புல்லுங் கன்னிக் குடையோனைப் பொருந்த விதைக்கு முதலில்லை
வெல்லுங் கவியைக் கலந்திருக்க மேவும் பெண்கட் காகாதே.
(இ-ன்) வியாழனைச் சுற்றிப் பரிவேடமிட்டால்(கோளங்களைச் சுற்றியிருக்கும் ஒளிவட்டம்) பிராமணர்களுக்குப் பீடையாம். செவ்வாயைச்சூழ்ந்து வட்டமிட்டால் மனிதர்கள் அநேக விதமான சேட்டைகளைச் செய்வார்கள்.புதனைப் பரிவேடங் கவிக்கில் விதை விதைக்க முதலில்லாமற் செய்யும். சுக்கிரனைப் பரிவேடம் வளையுமாகில் புடவியில்(புவி) மடவாருக்(பெண்கள்) காகாவாம்.
திருவாங் குணக்கிற் பொன்னனுறத் திகழுங் குடக்கிற் சுங்கனுமே
வரவாங் கொருவர்க் கொருவர்கதி மாறா தேழாம் பார்வையுறில்
பெரியோ ரென்ற யோகிகட்கும் பிறங்கு மறையோர் தங்களுக்கும்
அரிதா மசுரன் போன்றோரா லதிக பயந்தா னுண்டாமே.
(இ-ள்) கிழக்கில் வியாழனும் மேற்கில் சுக்கிரனும் உதயமாகி ஒருவர்க்கொருவர் ஏழாமிடத்திலிருந்து பார்த்துக்
கொள்வார்களாகில் அக்காலத்தில் முக்காலமுணர்ந்த மூதறிவுடைய முனிவர்களுக் கொப்பாகிய பெரியோர்களுக்கும் வேத சாஸ்திரங்களை யோதியுணரும் அந்தணருக்கும் தீயசெய்கையை யுடைய மாயவரக்கரைப் போன்ற வஞ்சமிகுந்த நெஞ்சையுடைய கசடர்களால் அதிக பயங்கரமுண்டாகும்.
சேமம் பொய்கை முதலிரலை சேரும் வரையி லுதகமிலை
நாம மெந்த மதியுஞ்சேய் நாலி லுதிக்க வன்னிகள்ளர்
பூமன் னவராற் றான்பயமாம் பொருந்து மந்தன் விலைகுறையும்
நேமக் கதிரோன் வாரமெனின் நிகழும் விபத்தா மெனச்சொல்லே.
(இ-ள்) பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம் பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுவனி இந்த வொன்பது நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரத்திலாவது எந்த மாதமேனும் பிறக்குமாகில் இப்புவியிலற்பமேனும் மழை பெய்யாது. அன்றியும் எந்த மாதமேனுஞ் செந் தீவண்ணனாகிய செவ்வாய்க்கிழமையிற் பிறக்கு மாகில் அரசர்கள் சோரர்கள்(கள்ளர்கள்) அக்கினியினாலும் பயமுண்டாகும். சனிக்கிழமையிற் பிறக்குமாகில் அகவிலை குறையும். ஞாயிற்றுக் கிழமையிற் பிறக்குமாகில் நோயுற்றுப் பின் சுகமடைவார்கள்.
வற்புசே யாட்சி யஸ்த மனமுந்தா னாகும் போதும்
உற்பவ முலக மெங்கு மொளிபெற விளக்க மாகும்
அற்பமாம் பகை நீ சத்தி லமர்ந்துமவ் விதமே யாகிற்
கற்புடை மகளீர் கேடாய்க் காசினி விளங்கும் காணே.
(இ-ன்) செவ்வாயானவன் ஆட்சியாகிய மேடவிருக்ஷிகத்தி லஸ்தமன மாயிருக்கில் சகலசீவ செந்துக்களுற்பத்தி யாகும் உலகத் திற்குணவாகிய தானியங்கள் விளைந்து அகவிலை மலிந்து சுபமங்கள கரமாக விருக்கும். இவ்வாறின்றி செவ்வாயானவன் பகையாகிய சிம்மம், தனுசு, கும்பம், மீனத்திலும். நீசமாகிய கடகத்திலு
மிருக்கும்போது அத்தமனமாகில் உலகத்திலுள்ள உத்தமஸ்திரீகளின் கற்பழித்து வேசிகளாய் பிரசித்திகளா யிருந்து வாழ்வார்கள்.
உருவமோ டுற்ற பொன்ன னுச்சம்பெற் றிருப்பா னாகில்
இருண்மழை பொழிந்து மண்மே லிராசராற் பயமுண் டாகும்
வருமறை யுலகுக் கெல்லாம் வக்கரித் திருக்கு மாகில்
திருவிருத் திலங்கு மெல்லாத் தேசமுங் கூறுங் காலே.
(இ-ள்) வியாழன் உச்சமாகிய கடகத்திலிருந்தால் மேகமானது வாரியின்(கடல்) நீரையுண்டு இருண்டு மேதினியெங்கும் நல்ல மழைபெய்து சகல தானியங்களும் விளைந்து மலிவாயிருக்கும். ஆனால் பூபதிகளாகிய அரசர்களாற் சிறிது பயமுண்டாகும். அன்றியும் மேற்கண்ட உச்ச வீடாகிய கடகராசியிற் வியாழன் வக்கரித்திருக்கில் அக்காலத்தில் ருக்கு, யசுர், சாம, அதர்வன, மென்ற நான்கு வேதங்களுஞ் சப்திக்கின்ற இவ்வுலகின் கண் திருமகளாகிய இலக்குமியிருந்து தாண்டவம் புரிவாள்.அதனாற் சகலபாக்கியமும் புத்திரபவுத்திர விருத்தியுடன் மனிதர்கள் மங்களகரமாக வாழ்ந்திருப்பார்கள்.
வர்ண, ஜாதி ரீதியான விடயங்களை ஜோதிட நூல்களில் எழுதப்பட்டவைகளை இப்போது யாரும் பெரிதுபடுத்துவதில்லை.அதிலுள்ள விசயங்களை அனைவருக்கும் பொருந்தும் வண்ணமாக ஜோதிடர்கள் ஜோடித்துவிடுகின்றனர்.அதன் ஆரம்ப கால தடுமாற்றங்களை இந்த நூலில் உள்ள பாடல்களின் பொருள் மற்றும் விளக்கங்களில்
காண முடிகிறது.
கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையிலும் நெய் வடியும்னு சொல்லுவாங்க, நாம் முட்டாள்களாக இருந்தால் ஏமாற்றுகிறவர்கள் அறிவாளியாகி விடுகின்றனர்.
Sri Ramji ஐயா அள்ளி விட்ட மற்ற பொய்களை விளக்க ஆரம்பித்தால் பதிவு மிக நீண்டு போய்விடும். எனது பழைய பதிவுகளில் பதில்கள் உண்டு…
அவை பற்றி Sri Ramji ஐயா வுடன் நேரடியாக விவாதிப்பதற்கும் தயார்… யாராவது ஏற்பாடு செய்தால் நல்லது.

கருத்துகள் இல்லை: