புதன், 7 அக்டோபர், 2020

அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று காலை 9.45 மணிக்கு அறிவிப்பு

dailythanthi.com : அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் இன்று காலை 9.45 மணிக்கு வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

சென்னை,அதிமுகவில் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளாராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அக்டோபர் 7  இன்று  அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கபடுவார் என்று கூறினார்.இதனால், கடந்த சில தினங்களாகவே  முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.  குறிப்பாக நேற்று காலை முதல் அதிகாலை வரை மூத்த அமைச்சர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரையும்  மாறி மாறி சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினர். இதனால்,ஆளும் அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதும், வழிகாட்டுதல் குழு குறித்தும் இன்று காலை அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால், அதிமுக தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 


இந்த நிலையில் தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை 8.45 மணியளவில் தலைமை அலுவலகத்திற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதைத்தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வமும் தலமை அலுவலகம் வருவார் எனத்தெரிகிறது. 

இதையடுத்து, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து இன்று காலை 9.45 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர் செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிகிறது. அதேபோல், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவையும் ஓ பன்னீர் செல்வம் அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: