ஞாயிறு, 4 அக்டோபர், 2020

துரைமுருகன் : கூட்டணி கட்சிகளைத் தவறாகப் பேசினேனா?

 கூட்டணி கட்சிகளைத் தவறாகப் பேசினேனா? துரைமுருகன்

minnamblam :கூட்டணி குறித்து தான் பேசியது தொடர்பாக துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டரந்தாங்கல் கிராமத்தில் நேற்று முன்தினம் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், வேலூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு, “இப்போது நேசக் கட்சியாக இருப்பவை தேர்தல் காலத்தில் கேட்ட சீட் கொடுக்கவில்லை அல்லது கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை எனக் கூறி கூட்டணியிலிருந்து வெளியேறலாம். எதிர்க்கூட்டணியில் இருந்தும் எங்கள் கூட்டணியில் வந்து இணைவதும் உண்டு. வேட்புமனுவை திரும்பப் பெற்ற பின்னர்தான் எவன் எவன் கூட இருக்கிறான் என்று தெரியும்” என்று கூறியிருந்தார். எனினும், கூட்டணியில் இருக்கும் கட்சிகளை அவதூறாகப் பேசியதாக இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த நிலையில் தனது பேச்சுக்கு நேற்று (அக்டோபர் 3) விளக்கம் அளித்த துரைமுருகன், “வாயில் மாஸ்க் அணிந்து பேசிக்கொண்டிருந்த காரணத்தால், சில வார்த்தைகள் தவறுதலாக வந்திருக்கலாம். அதனை நான் ஒருமையில் பேசியதாக சில பத்திரிகைகள் வெளியிட்டிருப்பதாகவும், அதனால், எங்களிடத்தில் ஆழ்ந்த உறவோடு இருக்கக்கூடிய சிலர் வருத்தம் அடைந்திருப்பதாகவும் எனக்கு செய்திகள் வந்தது. நான் அவ்வாறு கூறவில்லை. அப்படி நான் கூறியதாக எடுத்துக்கொண்டாலும், அதற்காக நான் மெத்த வருத்தப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தான் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, தனது பேச்சு மற்றும் நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டிருப்பதாகவும், யாருடைய உள்ளமாவது வருத்தப்பட்டிருந்தால் அதற்காக மிகவும் வருத்தப்படுவதாகவும் தெரிவித்த அவர், “ஆனால், எல்லோரிடத்திலும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நீண்டகாலமாக என்னை அறிந்தவர்கள், அப்படி நினைக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன். இருந்தாலும், இனி இப்படி நிகழாவண்ணம் நானும் நடந்துகொள்வேன்” என்றும் உறுதியளித்தார்.

எழில்

கருத்துகள் இல்லை: