புதன், 7 அக்டோபர், 2020

இந்தியில் தேர்ச்சி பெறாத வடமாநிலத்தவர் தமிழில் (மோசடி) தேர்ச்சி.. .தமிழக மின்வாரியத்தில் வடமாநிலத்தவர் படையெடுப்பு?

 இந்தியில் தேர்ச்சி பெறாத வடமாநிலத்தவர் தமிழில் தேர்ச்சியா?

மின்னம்பலம் : வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ் மொழியில் அதிகமாகத் தேர்ச்சி பெறுவது எப்படி என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், நீலகிரி ஆயுதத் தொழிற்சாலையில் பணிக்காக விண்ணப்பித்திருக்கிறார். சரவணன் 40 மதிப்பெண் பெற்ற நிலையில், அவரைவிடக் குறைவான மதிப்பெண் பெற்ற ஆறு பேருக்குப் பணி வழங்கப்பட்டது. ஆனால், அவருக்குப் பணி ஆணை வழங்கப்படவில்லை.இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நிர்வாக நீதிபதி கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று (அக்டோபர் 6) விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளூர் மக்களுடன் தகவல் தொடர்பு கொள்ளும் வகையில் அதிகாரிகள் தமிழ் மொழியை அறிந்திருக்க வேண்டும். இது இயலாத நிலையில் எப்படி அவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “இந்தியாவிற்குள் வசிப்பவர்களுக்கு மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வு எழுதி எங்கு வேண்டுமானாலும் பணியில் சேரட்டும். ஆனால், தேர்வு முறையில் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் தேவை.

 தமிழக மின்வாரியத்தில் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதற்குத் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்” என்று குறிப்பிட்டனர்  

இந்தி மொழியில் தேர்ச்சி பெற இயலாத வடமாநிலத்தவர்கள் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நேர்முகத் தேர்வில் கலந்துகொண்ட 176 பேரின் விடைத்தாள்கள் இருக்கிறதா, இல்லையா என்பது குறித்துப் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

எழில்

கருத்துகள் இல்லை: