வெள்ளி, 9 அக்டோபர், 2020

ஸ்டேன் ஸ்வாமி மாவோயிஸ்டா? என்ஐஏ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள்

  RAVI PRAKASH / BBC : ஸ்டேன் ஸ்வாமி தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்தவரும் ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் மற்றும் ஆதிவாசிகளின் நலன்களுக்காக பிரசாரம் செய்து வருபவருமான 83 வயது ஸ்டேன் ஸ்வாமி உள்பட எட்டு பேரின் பெயரை, மகாராஷ்டிராவின் பீமா கோரேகான் வன்முறை வழக்கின் துணை குற்றப்பத்திரிகையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சேர்த்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் வசிக்கும் பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி, மும்பையைச் சேர்ந்த பேராசிரியர் ஆனந்த் டெல்டும்ப்டே (70), டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஹனி பாபு (54), டெல்லியைச் சேர்ந்த கெளதம் நவ்லாகா (67), கபீர் காலா மஞ்ச் என்ற அமைப்பின் சாகர் கோர்கே (32), ரமேஷ் கோய்ச்சூர் (38), ஜோதி ஜக்தாப் (32), மிலிந்த் டெல்டும்ப்டே ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் பக்க துணை குற்றப்பத்திரிகை...

10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட துணை குற்றப்பத்திரிகையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை என்ஐஏ விவரித்துள்ளது.

அதில், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடன் சேர்ந்து கொண்டு குற்றம்சாட்டப்பட்ட எட்டு பேரும் இந்தியாவில் பிரசாரம் செய்தார்கள் என்றும் ஆனந்த் டெல்டும்ப்டே, கெளதம் நவ்லாகா, ஹனி பாபு, சாகர் கோர்கே, ரமேஷ் கோய்ச்சூர், ஜோதி ஜக்தாப், ஸ்டேன் ஸ்வாமி ஆகியோர் மாவோயிஸ சித்தாந்தத்தை பரப்பினார்கள் என்றும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

இந்த குழுவினர் சமூகத்தில் அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும் வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் சதி செய்து பிரசாரம் செய்ததாக அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி புணேவின் ஷனிவார் வாடாவில் நடந்த பீமா கோரேகான் வீர வணக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக கோவாவில் இருந்து ஆனந்த் டெல்டும்ப்டே வந்ததாகவும், அப்போது பிற மாவோயிஸ்ட் குழுவினருடன் சேர்ந்து தங்களுடைய செயல்பாடுகளுக்காக அவர்கள் நிதி திரட்டியதாகவும் என்ஐஏ கூறியுள்ளது.

இது தொடர்பான தங்களுடைய விசாரணையில், கெளதம் நவ்லாகாவுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் அதன் பிறகு அரசுக்கு எதிராக அறிவார்ந்த ரீதியில் மக்களை மூளைச்சலவை செய்யும் பொறுப்பு அவருக்கு ஒப்படைக்கப்பட்டது தெரிய வந்துள்ளதாகவும் பீமா கோரேகான் வழக்கை விசாரித்து வரும் புலனாய்வு அதிகாரிகள் குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளனர்.

என்ன குற்றச்சாட்டுகள்?

அதுவும் மாவோயிஸ்டுகளின் கொரில்லா போர் தந்திர குழுவில் சேர்க்கப்படும் நபர்களின் பின்புலத்தை கண்டறியும் பணி அவருக்கு ஒப்படைக்கப்பட்டதாகவும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் தங்களுடைய விசாரணையில் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

என்ன குற்றச்சாட்டுகள்?

டில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹனி பாபு, மாவோயிஸ்டுகள் வாழும் பகுதிக்கு வெளிநாட்டு செய்தியாளர்களை அழைத்துச் சென்று மாவோயிஸ்டுகளுக்கு சாதகமான செய்திகளை வெளியிட உதவி வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் அம்மாநில அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள புரட்சிகர ஜனநாயக நிதியம் என்ற அமைப்புக்காக நிதி திரட்டும் பொறுப்பு ஹனி பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும் ஏற்கெனவே கைதாகி தண்டனை பெற்ற ஜி.என். சாய்பாபாவை வழக்கில் இருந்து வெளியே கொண்டு வர மாவோயிஸ்டுகளின் ஆதரவை ஹனிபாபு பெற்றிருந்ததாகவும் துணை குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேன் ஸ்வாமி, மாவோயிஸ்டுகளின் பிரதான அமைப்பான பிபிஎஸ்சி அமைப்பாளராக செயல்பட்டு அந்த இயக்கத்தினரின் சித்தாந்த கோட்பாடுகளுக்கு உரமிட்டு வந்ததாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் ஒரு நாளுக்கு முன்பே ஸ்டேன் ஸ்வாமியை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் 2018ம் ஆண்டு முதல் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் பழங்குடி சமூகத்தினருக்காக குரல் கொடுத்து வந்த வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் உள்பட இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்குக்கு மூல காரணமான வன்முறை

1818 ஆம் ஆண்டில் பேஷ்வாக்களுக்கு எதிராக பெருமளவு தலித் சமூக வீரர்களைக் கொண்ட பிரிட்டிஷ் ராணுவம் வெற்றி பெற்ற பீமா கோரேகான் போரின் 200ஆவது ஆண்டு நினைவு தினம் 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, லட்சக்கணக்கான தலித்துகள் புணே அருகே கூடியபோது ஏற்பட்ட வன்முறையில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன, பலர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டது.

தீ

அந்த சம்பவம் தொடர்பாக ஜனவரி 2ம் தேதி பிம்ப்ரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் வன்முறையைத் தூண்டியதாகக் கூறி, ஹிந்துத்துவா தலைவர்கள் மிலிந்த் எக்போட் மற்றும் சம்பாஜி பிடே ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

இதேவேளை, அதே ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி, புணே காவல்துறை பதிவு செய்த மற்றொரு வழக்கில் டிசம்பர் 31, 2017ஆம் தேதி புணேவில் உள்ள சனிவார் வாடாவில் எல்கர் பரிஷத் என அழைக்கப்பட்ட நிகழ்ச்சியாலேயே வன்முறை நடந்ததாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் தீவிரவாத தொடர்பு உள்ளதாக கூறப்பட்டதையடுத்து தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

மாவோயிச நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறி சிலரை புணே காவல்துறை கைது செய்தது. இதில்தான் தற்போது ஸ்டேன் ஸ்வாமி உள்ளிட்ட பலரை என்ஐஏ கைது செய்துள்ளது.

இந்த நிலையில், தன் மீதான சட்ட நடவடிக்கை குறித்து ஸ்டேன் ஸ்வாமி கைதுக்கு முன்பாக வெளியிட்ட காணொளியில், "எனக்கு நடப்பது தனிப்பட்டது அல்ல.இது பல செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர் தலைவர்கள், கவிஞர்கள், அறிவுஜீவிகள், ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காக நின்று நாட்டின் ஆளும் சக்திகளுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் நபர்கள் இலக்கு வைக்கப்படுவதன் அடையாளம்" என்று ஸ்வாமி கூறியிருந்தார்.

மேலும், வறிய நிலை மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர், அரசியலமைப்பு அவர்களுக்கு தந்த உரிமைகள் பற்றி குரல் கொடுத்து வருவோரை ஒடுக்குவதற்காக சட்டங்களை தவறாக அரசு பயன்படுத்துகிறது. நான் சென்றிருக்காத பீமா கோரேகான் பகுதியில் நடந்த வன்முறையுடன் என்னை தொடர்புபடுத்துவதில் இருந்தே இது வெளிப்படுகிறது என்று ஸ்டேன் ஸ்வாமி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: