இந்தியாவிலுள்ள செய்தி சேனல் நெறியாளர்களில், முக்கிய முகமாக அறியப்படுபவர் அர்னாப் கோஸ்வாமி. 1996 முதல் 2006-ம் ஆண்டு வரை `என்.டி.டி.வி’, `டெலிகிராப்’ உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய ஊடகங்களில் பணிபுரிந்தார். அதன் பின்னர் 2006-ம் ஆண்டு `டைம்ஸ் நவ்’ செய்தி சேனலில், செய்தி வாசிப்பாளராக பணியைத் தொடங்கி அந்த சேனலின் முக்கிய நெறியாளராகவும், பின்னர் செய்திப் பிரிவின் சிறப்பு ஆசிரியராகவும் பணி உயர்வு பெற்றார். 2016, நவம்பர் மாதத்தில் டைம்ஸ் நவ் சேனலிலிருந்து வெளியேறினார் அர்னாப்.
2017 மே மாதத்தில், `ரிபப்ளிக் டி.வி’ தொடங்கப்பட்டது. இந்தத் தொலைக்காட்சி தொடங்குவதற்கான ஒரு பகுதி நிதியுதவியை `ஏசியாநெட்’ ஊடக நிறுவனம் வழங்கியது. அந்த நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் ராஜீவ் சந்திரசேகர், அர்னாப்-உடன் இணைந்து ரிபப்ளிக் தொலைக்காட்சியைத் தொடங்கினார். ராஜீவ் சந்திரசேகர், 2018-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தார். இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துவருகிறார். பா.ஜ.க-வில் இணைந்த பின்னர், ரிபப்ளிக் டி.வி நிறுவனத்திலிருந்து விலகினார் ராஜீவ். 2019-ம் ஆண்டு ஏசியாநெட் நிறுவனத்தின் பங்கை அர்னாப் கோஸ்வாமியே வாங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
Also Read
அர்னாப் டைம்ஸ் நவ்விலிருந்து விலகினார்! இதுதான் காரணமா…?
2017-ல்,`ரிபப்ளிக் டி.வி’ என்ற பெயரில் ஆங்கிலச் செய்தி சேனலும், 2019-ல் `ரிபப்ளிக் பாரத்’ என்ற பெயரில் இந்திச் செய்தி சேனலும் ரிபப்ளிக் ஊடக நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.
ரிபப்ளிக் டி.வி தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து 100 வாரங்களுக்கு, இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கில செய்தி சேனலாக அதுதான் இருந்தது எனச் செய்தி வெளியிட்டது `ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை. இந்தியாவில், டி.ஆர்.பி-யைக் கண்டறியும் நிறுவனமான BARC, 2019-ம் ஆண்டின், முதல் காலாண்டில் அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கிலச் செய்தி சேனல்களின் பட்டியலில் பல நாள்கள் ரிபப்ளிக் டி.வி-தான் முதலிடம் பெற்றது என்ற தகவலை வெளியிட்டது. `ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் ரிபப்ளிக் டி.வி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், போகப் போக நெகட்டிவ் கமென்ட்டுகளுக்கும் ஆளானது ரிபப்ளிக் டி.வி’ என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
முதலாவதாக, மே 2017-ல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சசி தரூர், ரிபப்ளிக் டி.வி மீது வழக்கு தொடர்ந்தார். தன் மனைவியின் மரணம் குறித்துத் தொடர்ந்து தவறான செய்திகளைப் பரப்புவதாகக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில், ரிபப்ளிக் டி.வி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் சசி தரூர். அதைத் தொடர்ந்து இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் செய்தி ஒளிபரப்புத் தர நிர்ணய ஆணையம் ஆகியவற்றின் விதிகளை மீறியதற்காகத் தண்டனை பெற்றது ரிபப்ளிக் டி.வி. பின்னர், ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், போலிச் செய்திகளை வெளியிடுவதாகவும் சமூக வலைதளங்களில் ரிபப்ளிக் டி.விமீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சி குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பிவருவதாகக் கூறி, தங்கள் கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்புகளில், ரிபப்ளிக் டி.வி செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்தது காங்கிரஸ்.
சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்தின் வழக்கைக் கையிலெடுத்து, இடைவிடாமல் தொடர்ந்து அந்த வழக்கு குறித்த செய்திகளைப் பதிவு செய்துவந்தது ரிபப்ளிக் டி.வி. இதனால் சுஷாந்த் சிங் ரசிகர்களின் ஆதரவையும், பலமுறை ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தையும் பெற்றது ரிபப்ளிக் டி.வி. அதன் பிறகு இந்த வழக்கை மட்டுமே முன்னிலைப்படுத்துவதன் மூலம் பல முக்கியச் செய்திகளை வெளியிட மறுக்கிறது ரிபப்ளிக் டி.வி என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. `ஜி.டி.பி வீழ்ச்சி உள்ளிட்ட பா.ஜ.க அரசின் தோல்விகளிலிருந்து மக்களை திசை திருப்பத்தான் சுஷாந்த் வழக்குக்கு ரிபப்ளிக் டி.வி இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது’ என்ற குற்றச்சாட்டை அரசியல் வல்லுநர்களும் நெட்டிசன்களில் சிலரும் தொடர்ந்து பதிவுசெய்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று, டி.ஆர்.பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளைப் பெறுவதற்காக மோசடி செய்திருப்பதாக ரிபப்ளிக் டி.வி உட்பட மூன்று தொலைக்காட்சி நிறுவனங்கள்மீது குற்றம்சாட்டப்பட்டிருப்பதாக மும்பை காவல்துறை தகவல் வெளியிட்டது. இது குறித்துப் பேசிய மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் (Parambir singh), “ஹன்சா ரிசர்ச் (Hansa Research) என்ற தனியார் நிறுவனம், `Fakt Marathi’, `பாக்ஸ் சினிமா’ ஆகிய மராத்தி சேனல்கள் மீதும் ஆங்கிலச் செய்தி ஊடகமான `ரிபப்ளிக் டி.வி’ மீதும் டி.ஆர்.பி-யில் முறைகேடு செய்திருப்பதாகப் புகாரளித்திருக்கிறது. டி.ஆர்.பி புள்ளிகளில் சந்தேகத்துக்கிடமான போக்குகள் இருந்ததை அவர்கள் கவனித்தாக எங்களிடம் அளித்த புகாரில் தெரிவித்திருக்கிறார்கள். அந்த முரண்பாடான விவரங்களையும் எங்களுடன் பகிர்ந்திருக்கிறார்கள்” என்று கூறினார்.
இந்தியாவில் ‘டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட்’ என்று சொல்லப்படும் டி.ஆர்.பி ரேட்டிங்கைக் கணக்கிடும் பணியை BARC (Broadcast Audience Research Council) என்ற நிறுவனம் செய்துவருகிறது. இந்த நிறுவனத்துக்குக் கீழ்தான் ஹன்சா ரிசர்ச் நிறுவனம் இயங்கிவருகிறது. BARC நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா முழுவதும் 30,000 டி.ஆர்.பி மீட்டர்களைவைத்து டி.ஆர்.பி கணக்கிடும் பணியைச் செய்துவருகிறது ஹன்சா ரிசர்ச். மும்பையில் மட்டும் ஹன்சா ரிசர்ச் நிறுவனம் 2,000 டி.ஆர்.பி மீட்டர்களை வைத்திருக்கிறது.
இந்த வழக்கில் மும்பை காவல்துறை மேற்கொண்ட விசாரணைகள் குறித்தும் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் பேசியிருந்தார். “BARC நிறுவனத்திடமிருந்தும் சந்தேகத்துக்கிடமாகப் பெறப்பட்டிருக்கும் டி.ஆர்.பி புள்ளிகள் குறித்த ஆதாரங்களைப் பெற்றிருக்கிறோம். இன்னும் பல ஆதாரங்களைச் சேகரித்துவருகிறோம். டி.ஆர்.பி ரேட்டிங்கில் மோசடி செய்து, அதன் மூலம் விளம்பரங்களைப் பெற்று பணம் ஈட்டினாலும் அது குற்றமே. அது குறித்த விசாரணையைத் தொடர்ந்து நடத்திவருகிறோம்” என்று கூறினார். மேலும் பேசிய அவர்,
டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகப்படுத்தி அதன் மூலம் விளம்பரங்களைப் பெறுவதற்காக மும்பையிலுள்ள சில வீடுகளுக்குப் பணம் கொடுத்து, குறிப்பிட்ட ஒரே சேனலை பார்க்கவைத்திருக்கிறார்கள். தங்கள் சேனலைப் பார்க்க வேண்டுமென்பதற்காக ஒரு வீட்டுக்கு, மாதம் ரூ.400 முதல் ரூ.700 வரை கொடுக்கப்பட்டிருக்கிறது.
பரம்பீர் சிங், மும்பை போலீஸ் கமிஷனர்
“BARC மற்றும் ஹன்சா நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இதுபோல நடக்கும் சில வீடுகளின் விவரங்களை எங்களுக்கு வழங்கினார்கள். அவற்றில் மூன்று வீடுகளைச் சேர்ந்தவர்களிடம் இது குறித்து விசாரித்தோம். ஒரு குறிப்பிட்ட சேனலைப் பார்ப்பதற்காகப் பணம் பெற்றதை அந்த மூன்று வீடுகளைச் சேர்ந்தவர்களும் ஒப்புக்கொண்டார்கள்” என்று பரம்பீர் கூறியிருந்தார்.
ரிபப்ளிக் டி.வி மீதான டி.ஆர்.பி முறைகேடு குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் அர்னாப் கோஸ்வாமி, “மும்பை காவல்துறை மீது அவதூறு வழக்கு பதியவிருக்கிறோம். சுஷாந்த் சிங் மரண வழக்கில் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீரிடம் நாங்கள் பல கேள்விகளை எழுப்பினோம். அதன் காரணமாகத்தான் இப்போது ரிபப்ளிக் டி.வி-யின்மீது பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்துகிறார். அவர் பொதுவெளியில் எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் அல்லது எங்களை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
அர்னாப்பின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்திருக்கும் கமிஷனர் பரம்பீர் சிங், “எங்களிடம் இந்த விவகாரம் குறித்துப் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் எங்கள் பணியைச் செய்கிறோம். இதில் எவ்விதப் பழிதீர்க்கும் எண்ணமும் இல்லை” என்று விளக்கமளித்துள்ளார்.
டி.ஆர்.பி விவகாரத்தில், இரண்டு மராத்தி சேனல்களின் அதிபர்களையும், அந்த சேனல் நிறுவனங்களுக்கு டி.ஆர்.பி மீட்டர் குறித்த தகவல்களை வழங்கிய ஹன்சா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரையும் கைதுசெய்து, விசாரணை நடத்திவருகிறது மும்பை காவல்துறை.
இதற்கிடையில் `இந்தியா டுடே’ செய்தி சேனலும் `ரிபப்ளிக் டி.வி’-யும் இந்த விவகாரத்தில் நேரடியாக மோதிக்கொண்டிருக்கின்றன. சுஷாந்த் வழக்கு தொடங்கி பல்வேறு விஷயங்களில் இந்த இரண்டு செய்தி நிறுவனங்களும் முரண்பட்ட கருத்துகளை முன்வைத்து மறைமுகமாக மோதிக்கொண்டிருந்தன. கடந்த 6-ம் தேதியன்று இந்தியா டுடே சேனலின் `கன்சல்டிங் எடிட்டர்’ ராஜ்தீப் சர்தேசாயும் ,அர்னாப் கோஸ்வாமியும் நேரடியாகவே மோதிக்கொண்டனர். `ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்துப் பேசாமல் சுஷாந்தின் வழக்கையே பிடித்துக்கொண்டிருக்கிறார்’ என்ற கருத்தை முன்வைத்து, “நீங்கள் நடத்துவது வாழைப்பழ ரிப்பப்ளிக் டி.வி… பத்திரிகைப் பணியை உங்கள் அளவுக்குத் தாழ்த்திவிடாதீர்கள். இதுதான் நான் உங்களுக்கு வழங்கும் ஒரே அறிவுரை” என்று லைவ் ஷோவிலேயே பேசியிருந்தார் சர்தேசாய்.
இதற்கு பதிலளிக்கும்விதமாக லைவ் ஷோவிலேயே, “இந்த நாட்டில் சில ஊடகங்கள் நீண்டகாலமாகக் கதை சொல்லப் பழகியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்றாற்போலக் குற்றங்களை மாற்றிக்கொள்கிறார்கள். ஹத்ராஸ் வழக்கு பற்றி அவர் கேள்வியெழுப்பினார். அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவரும் இந்தச் சம்பவத்துக்கு முன்பிருந்தே தொடர்பிலிருந்திருக்கிறார்கள். இது, இரு தரப்புக்கும் இடையே கலவரத்தை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது” என்று அர்னாப் பேசியிருந்தார்.
இந்தநிலையில், நேற்று `இந்தியா டுடே’ நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் அர்னாப் கோஸ்வாமி காரைப் பின்தொடர்ந்து டி.ஆர்.பி விவகாரம் குறித்துக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார். அதற்கெல்லாம் பதிலளிக்காமல் கேமராவை நோக்கிக் கையசைத்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்துவிட்டார் அர்னாப்.
இதையடுத்து டி.ஆர்.பி விவகாரத்தில், மும்பை காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், `ரிபப்ளிக் டி.வி’-யின் பெயர் இல்லை. `இந்தியா டுடே’-வின் பெயர்தான் இருக்கிறது என்று ரிபப்ளிக் டி.வி-யில் செய்தி வெளியிட்டார் அர்னாப் கோஸ்வாமி. இதற்கு பதில் கொடுக்கும்விதமாக மும்பை காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவரைப் பேட்டி கண்டிருக்கிறது இந்தியா டுடே. அந்தப் பேட்டியில், “இந்த டி.ஆர்.பி முறைகேடு வழக்கில் இந்தியா டுடே-வுக்கு எந்தத் தொடர்பும் இல்லை” என்று அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
`ரிபப்ளிக் டி.வி-யைச் சேர்ந்தவர்களிடம் அக்டோபர் 9 அல்லது 10-ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்’ என்று மும்பை காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்த விசாரணைக்குப் பின்னர் இந்த வழக்கில் மேலும் பல திருப்பங்கள் ஏற்படலாம் என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக