வியாழன், 8 அக்டோபர், 2020

தேவேந்திர குல வேளாளர் அரசாணை? விரைவில் தென் மாவட்ட அரசியலில் திருப்பம்?

minnambalam :வரும் சட்டமன்றத் தேர்தலில் தென் தமிழ்நாட்டின் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தப் போகும் ஓர் அரசாணை இன்னும் சில தினங்களில் மத்திய அரசால் வெளியிடப்பட இருக்கிறது என்ற தகவல் அதிகார வட்டாரங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பேசப்பட்டு வருகிறது.

குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திர குலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்பதும், பின் தங்களை பட்டியல் சமூகத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதும் அச்சமூகத்தினரின் நெடு வருடக் கோரிக்கை. இது தொடர்பாக பிரதமர் வரை அவர்கள் சந்தித்துள்ளனர். மதுரையில் பாஜக தலைவர் அமித் ஷா இது தொடர்பாக தேவேந்திரர் கூட்டமைப்பு நடத்திய மாநாட்டுக்கு வருகை தந்து இதற்காக உறுதியளித்துச் சென்றார்.

கடந்த வருடம் நடைபெற்ற நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின் போது இந்த கோரிக்கையை முன் வைத்து தேவேந்திர குல வேளாளர்கள் அத்தொகுதி முழுதும் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினார்கள்.  

இந்த நிலையில்தான், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் சென்னை பல்கலைக்கழக மானுடவியல் தலைவர் சுமதி தலைமையில் இதுபற்றி ஆராய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தமிழக அரசிடம் அறிக்கை அளித்துவிட்ட பிறகும் அதை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்ப தாமதமாக்குவதாக புகார் எழுந்தது. இதனிடையே இந்த அரசாணை தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி ஹான்ஸ்ராஜ் வர்மா தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிஷன் அறிக்கையும் தமிழக அரசிடம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து ஜூலை 4ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் எல். முருகன் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக அரசு அந்த அறிக்கையை உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசு இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருப்பதால் தமிழக அரசின் அறிக்கை கிடைத்தவுடன் துரித நடவடிக்கை எடுப்போம். தேவேந்திர குல வேளாளர்களின் நெடுநாள் கோரிக்கை நிறைவேறும்’ என்று தெரிவித்திருந்தார். காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார்.

கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் விருதுநகர் காங்கிரஸ் உறுப்பினர் மாணிக் தாகூர், “தமிழகத்தின் தென் மாவட்டங்களிலே அதிகமான எண்ணிக்கையில் வாழ்பவர்கள் தேவேந்திர குல மக்கள் ஆவார்கள். இவர்கள் ஏழு கிளைப் பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் விவசாயத்தை சார்ந்த வேளாண் குடிமக்கள். நீர்மேலாண்மை செய்து விவசாயம் செய்தவர்கள் என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் இருக்கின்றன. இந்த ஏழு உட்பிரிவுகளையும் ஒன்றாக தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயர் சூட்டி அழைக்க வேண்டும் என்பது இந்த சமூகத்தின் கோரிக்கை. தமிழக அரசு இதற்காக ஹன்ஸ்ராஜ் ஐ.ஏ.எஸ். தலைமையில் ஒரு குழு அமைத்து அறிக்கையும் பெற்றிருக்கிறது. ஆனால் தமிழக அரசு இதில் காலதாமதம் செய்கிறது. மத்திய அரசின் சமூக நீதித்துறை இதில் தலையிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கிடையில் அக்டோபர் 6 ஆம் தேதி இந்த கோரிக்கையை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வசிக்கக்கூடிய 10,000 கிராமங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. அதிலும் பல இடங்களில் உண்ணாவிரதப் பந்தல்களை காவல்துறையினரே பிரித்து எறிந்திருக்கிறார்கள். உடுமலையில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடக்கவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மதியம் 2 மணிக்கு போடப்பட்ட 120 அடி பந்தல் இரவு 8 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினரால் சூறையாடப்பட்டது என்று கிருஷ்ணசாமியே குற்றம் சாட்டினார்.

“தேனி மாவட்டம் பெரியகுளம், கோம்பை, சீலையம்பட்டி, கோட்டூர் உள்ளிட்ட இடங்களில் போடப்பட்ட பந்தல்களை வலுக்கட்டயமாகப் பிரித்து இருக்கிறார்கள். கோவையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டாயப்படுத்தி பந்தல்களை பிரித்து எடுத்துச் சென்றுள்ளனர். அதேபோல, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 6000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பந்தல்களைப் பிரித்துள்ளனர்” என்றும் குற்றம் சாட்டினார் கிருஷ்ணசாமி.

புதிய தமிழகம் கட்சியின் போராட்டத்துக்கு இத்தனை கெடுபிடிகள் காட்டப்பட்ட நிலையில் அதே தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் இன்று (அக்டோபர் 8) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியிருக்கிறார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்காக எடப்பாடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள ஜான் பாண்டியன், தேவேந்திர குல மக்களின் கோரிக்கை பற்றியும் முதல்வரிடம் தெரிவித்துள்ளார். முதல்வரும் அதுபற்றி ஜான் பாண்டியனிடம் உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில் அதே அக்டோபர் 7 ஆம் தேதி தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தலைவர் ம.தங்கராஜ் தேவேந்திர குல வேளாளர் அரசாணை வரும் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் வந்துவிடும் என்று உறுதியாகத் தெரிவித்திருக்கிறார். இவர் அமித் ஷாவை மதுரைக்கு அழைத்து வந்து கூட்டம் நடத்தியவர்களில் முக்கியமானவர்.

தங்கராஜ் தனது அமைப்பினருக்காக வெளியிட்டுள்ள செய்தியில், “அக்டோபர் 5,6 ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் இருந்தேன். தேவேந்திரகுல வேளாளர் அரசாணை சம்பந்தமாக நடந்து வரும் நகர்வுகளை பற்றி அறிந்து கொண்ட செய்தியை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக்கு ஆதரவாக இருப்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் , தேவேந்திரகுல வேளாளர் அரசாணை அறிவிப்பு சம்பந்தமாக தொலைபேசியில் பேசியதாக நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்தி கிடைத்துள்ளது. மத்திய,மாநில அரசுகள் சேர்ந்தே தேவேந்திரகுல வேளாளர் அரசாணை சம்பந்தமான அறிவிப்பை அக்டோபர்15க்குள் வெளியிட இருப்பதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. தேவேந்திரகுல வேளாளர் அரசாணை என்ற நகர்வு புறப்பட்ட இடத்தில் தேங்கி நிற்காமல் வெற்றியை நோக்கி நகர்ந்து விட்டது” என்று கூறியுள்ளார்.

இந்த அரசாணை வெளியிடப்படும் பட்சத்தில் அதிமுகவும், பாஜகவும் இதற்கு தனித்தனியே சொந்தம் கொண்டாடும் என்பதற்கு அச்சாரமான சம்பவங்கள் இப்போதே ஆரம்பித்துவிட்டன.

-ஆரா

கருத்துகள் இல்லை: