சனி, 10 அக்டோபர், 2020

வைகோ தனி சின்னத்தில் போட்டி பேட்டியின் பின்னணி!

minnambalam.com : சட்டமன்றத் தேர்தலில் தனி சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.  

 தனி சின்னத்தில் போட்டி: வைகோ பேட்டியின் பின்னணி!

சென்னை எழும்பூரில் மதிமுக தலைமையகமான தாயகத்தில் வைகோ தலைமையில் மதிமுகவின் சூளுரை நாள் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 10) நடைபெற்றது. இதில், உயிர்த்தியாகம் செய்த 5 பேரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, வரும் சட்டமன்றத் தேர்தலை திமுக கூட்டணியில் மதிமுக சந்திக்கும் எனத் தெரிவித்தார். தேர்தலில் அதிமுகவுக்கு மரண அடி விழும், திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் எனவும், முதலமைச்சராக ஸ்டாலின் வருவார் என்றும் கூறினார்.

வரும் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுமா அல்லது தனி சின்னத்தில் போட்டியிடுமா என அவரிடம் கேள்வி எழுப்ப, “இவையெல்லாம் கற்பனையாக எழும் கேள்விகள். இதுபோன்ற கேள்விகளுக்கே இங்கு இடமில்லை. மதிமுக தனித்தன்மையோடுதான் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும். மதிமுக தனக்கென ஒரு சின்னத்தைப் பெற்று அதில்தான் போட்டியிடும்” எனத் தெரிவித்தார்.ஏற்கனவே மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி வெற்றிபெற்றார். இந்த நிலையில் தற்போது தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என அதிரடியாக அறிவிக்க காரணம் என்னவென்று விசாரித்தோம்...

மக்களவைத் தேர்தலில் தரப்பட்ட இடங்களின் அடிப்படையில் கூட்டணி கட்சிகளுக்கு சட்டமன்றத் தேர்தல் இடங்களை ஒதுக்க திமுக ஆலோசனை செய்துள்ளது. அதாவது ஒரு மக்களவைத் தொகுதி அளித்திருந்தால், அந்த கட்சிக்கு இரண்டு சட்டமன்ற இடங்களைக் கொடுப்பதுதுதான் இந்தத் திட்டம். மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதிகள் அளிக்கப்பட்டது. ஒரு மக்களவைத் தொகுதிக்கு பதிலாகவே, வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது என்பதால், அதையும் கணக்கிட்டு 4 சட்டமன்றத் தொகுதிகளை மதிமுகவுக்கு தரலாம் என்ற அளவுகோளை திமுக வைத்திருக்கிறது.

சீட் தொடர்பான திமுகவின் இந்தமுடிவு வைகோவுக்குத் தெரியவரவே, இவ்வாறு தனித்தன்மையோடுதான் தேர்தலில் போட்டியிடும் என அறிவித்திருக்கிறார் வைகோ என்கிறார்கள் மதிமுக தரப்பில்.

எழில்

கருத்துகள் இல்லை: