புதன், 7 அக்டோபர், 2020

ஏழு உலகங்களின் அதிசயங்கள். சர் டேவிட் அட்டன்பரோவின் அழகான விரிவுரை

kondalaathi.blogspot.com : ஏழு உலகங்களின் அதிசயங்கள். >கடந்த ஞாயிற்றுக்கிழமை பிபிசி எர்த் தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான ஆப்பிரிக்கா என்ற நிகழ்ச்சி இரண்டு மணிநேரத்தை முழுதாக கட்டிப்போட்டது. பிபிசியின் செல்லப்பிள்ளை மற்றும் இயற்கை ஆய்வாளரான சர் டேவிட் அட்டன்பரோவின் அழகான விரிவுரையால் (அவருக்கு வயது 93. தழுதழுத்தாலும் அற்புதமான குரலுக்கு சொந்தக்காரர். அதேபோல் தமிழில் அவருக்கு யார் மாற்றுக் குரல் கொடுக்கிறார்? எனத் தெரியவில்லை. அவ்வளவு பொருத்தமான தேர்வு. அந்த இரண்டு குரல்களின் ரசிகன் நான்) தொகுக்கப்பட்ட இந்நிகழ்ச்சி மறுஒளிபரப்பு செய்யப்பட்டதுதான் என்றாலும் நிகழ்ச்சியின் நடுவில் விரைவில் என விளம்பரப்படுத்தப்பட்ட செவன் வேர்ல்ட்ஸ் ஒன் பிளானட் என்ற நிகழ்ச்சியைப் பற்றிய நான்கு நிமிட முன்னோட்டம் கவர்ந்திழுத்தது. ஹான்ஸ் சிம்மர் என்பவரின் இசையில் பிரபல பாடகி ஷியாவின் குரலில் ஒரு பாடலுடன் அந்த முன்னோட்டம் அழகாக அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பப்படும் என்ற ஆர்வத்தையும் தூண்டியது.


பல மில்லியன் வருடங்களுக்கு முன்னால் நம்பமுடியாத ஏதோ சக்திகள் இணைந்து நாம் வசிக்கும் பூமியை சீண்டிப் பார்த்து ஏழு அசாதாரண கண்டங்களை உருவாக்கின. இந்த ஏழு கண்டங்களிலும் நம் மனித இனத்தையும் சேர்த்து தனித்துவமான விலங்குகள் பல வாழ்ந்து வருகின்றன. அவைகளுக்கு ஏழு கண்டங்கள் என்பது ஏழு உலகங்கள். அந்த ஏழு உலகங்களும் அங்கு வசிக்கும் விலங்குகளின் வாழ்க்கையை எவ்வாறு வடிவமைத்தன என்பதைப் பற்றியும், மனிதன் மட்டுமே ஆதிக்கம் செலுத்த நினைக்கும் இந்த நவீன யுகத்தில் அந்த விலங்குகள் எதிர்கொள்ளும் இன்றைய சாவல்களைப் பற்றியும் விவரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிதான் செவன் வேர்ல்ட்ஸ் ஒன் பிளானட் (Seven Worlds One Planet). அதே நேரத்தில் இந்த ஏழு உலகத்தில் வாழும் ஆச்சரியமான, அதிசயத்தக்க விலங்குகளையும் அவைகளின் வாழ்க்கை நாடகங்களையும் இந்த நிகழ்ச்சி விளக்க இருக்கிறது.


ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா என ஏழு கண்டங்கள் அதாவது ஏழு உலகங்களுக்கென மொத்தம் ஏழு தொடர்களாக மிகவும் சிரமப்பட்டு எடுத்த இதுவரை கண்டிராத காட்சிகளுடன் இந்நிகழ்ச்சியை பிபிசி நிறுவனத்தார் உருவாக்கியுள்ளனர். வழக்கம்போல் சர் டேவிட் அட்டன்பரோ இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க காத்திருக்கிறார். ஏற்கனவே பிபிசியின் புளு பிளானட், பிளானட் எர்த், பார்சன் பிளானட் போன்ற நிகழ்ச்சிகள் பார்வையாளர்கள் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கக்கது. அந்த வரிசையில் இந்த நிகழ்ச்சியும் இருக்கும் என நம்பலாம். அந்த நம்பிக்கையில் விரைவில் என்ற காத்திருப்பில் தங்களுக்கும் அறிமுகப்படுத்துகிறேன்.

கருத்துகள் இல்லை: