திங்கள், 5 அக்டோபர், 2020

பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் : பெண்களுக்கு நற்பண்புகள் கற்றுக் கொடுங்கள்

 பெண்களுக்கு நற்பண்புகள் கற்றுக் கொடுங்கள்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுப்படி, 2019ல் நாளொன்றுக்குச் சராசரியாக 87 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளது தெரிய வருகிறது. 2019ல் பெண்களுக்கு எதிராக 4,05,861 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன.   2019ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் 62.4 சதவீதமாக உள்ளது, இது 2018 ஆம் ஆண்டில் 58.8 சதவீதமாக இருந்தது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2018ஐ காட்டிலும், 2019ல் 7 சதவீதம் அதிகரித்துள்ளது என தேசிய குற்ற ஆவணக் காப்பக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் தான் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த பெண் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில், அந்த பெண்ணின் உடலை குடும்பத்தினரிடம் காண்பிக்காமல் தகனம் செய்தது, ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் அந்த பெண் வன்கொடுமையே செய்யப்படவில்லை என்று உபி போலீசார் கூறுகின்றனர்.இந்த உச்சக்கட்ட கொடூரத்துக்கு எதிராகத் தமிழகம் உட்பட நாடே எதிர்க்குரல் கொடுத்துப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர், பெண்களுக்கு நற்பண்புகள் கற்றுக்கொடுத்தால் தான் வன்கொடுமை சம்பவங்கள் குறையும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பல்யா தொகுதி பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் கூறுகையில், “அரசாங்கம் தனது கைகளில் வாளை ஏந்தி நின்றாலும் இதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுக்க முடியாது. பெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்குக் கலாச்சாரத்தையும், நற்பண்புகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி பெண் குழந்தைகள் அமைதியாக இருக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அரசு எப்படி மக்களைக் காக்க வேண்டுமோ அதுபோன்று குழந்தைகளைப் பெற்றோர்கள் காக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அரசும் நல்ல பண்புகளும் இணைந்தால் சிறப்பாகச் செயல்பட முடியும் ” என்று அவர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹத்ராஸ் பெண் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட விவகாரமே நாட்டை உலுக்கி வரும் நிலையில், இதிலிருந்து மீள்வதற்குள் அலிகர் நகரில், 4 வயது சிறுமி தனது உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். அடுத்தடுத்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக வன்கொடுமைகள் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கட்சியான பாஜக எம்.எல்.ஏ.வே இப்படி ஒரு சர்ச்சை கருத்தைத் தெரிவித்துள்ளார்.

-கவிபிரியா

கருத்துகள் இல்லை: