வெள்ளி, 9 அக்டோபர், 2020

காங்கிரஸுக்கு இவ்வளவுதான்: திமுகவின் புதுக் கணக்கு! 15 ( + Rajya Saba or) to 20 ?

minnambalam.com :ஏற்கனவே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூட்டணிக் கட்சியினரை அவன் இவன் என ஏக வசனத்தில் அழைத்தது காங்கிரஸ் கட்சிக்குள் கோபத்தை உண்டாக்கி இருக்கும் நிலையில்... திமுக தலைமையில் தற்போது நடைபெற்று வரும் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பற்றிய ஆலோசனைகள் காங்கிரஸுக்குள் மேலும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடங்கள் என்பது பற்றிய ஆலோசனைகள் திமுக தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழு முடிந்த நிலையில், அதற்கு அடுத்த நாள் தலைமை கழக நிர்வாகிகளை அழைத்து கட்சித் தலைவர் ஸ்டாலின் தன் வீட்டில் ஒரு ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிகப்பட்சம் 200 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் மீதி உள்ள இடங்களில் தனி சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சிகள் போட்டியிடலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதுபற்றி 200 தொகுதிகளில் உதயசூரியன்! முதல் நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய முடிவு! என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதன் பிறகு தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலினையும் சந்தித்துப் பேசி விட்டுச் சென்றிருக்கிறார்.

தேர்தல் தொகுதிப் பங்கீட்டை முடிந்தவரை சீக்கிரமாக முடித்துவிட்டு பிரச்சார களத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் திமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பற்றி தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அந்த அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்களை ஒதுக்கலாம் என்பது பற்றியும் பிரசாந்த் கிஷோர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் காலத்தில் இருந்தது போல காங்கிரஸ் கட்சிக்கு அதிக சீட்டுகளை அள்ளித் தர வேண்டாம் என்று நினைக்கிறார் ஸ்டாலின். காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கும் தொகுதிகளில் அதிமுக எளிதாக வெற்றி பெற முடியும் என்ற ஒரு எண்ணம் அவரிடம் இன்னும் இருக்கிறது என்கிறார்கள் அறிவாலயத்தில். சில நாட்களுக்கு முன்பு திமுக தலைமையில் நடந்த ஆலோசனைப்படி காங்கிரசுக்கு 15 சட்டமன்றத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்பி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை ராஜ்யசபா எம்பி சீட்டை காங்கிரஸ் வேண்டாம் என்று சொன்னால், அதற்காக ஐந்து தொகுதிகள் சேர்த்து 20 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடலாம் என்பதுதான் திமுகவின் தற்போதைய கணக்கு.

அதேநேரம் காங்கிரஸ் கட்சி 2014 இல் தனித்து நின்றதன் அடிப்படையில் சட்டமன்றத் தொகுதி வாரியாக மூவாயிரம் வாக்குகள் பெற்ற தொகுதிகள், 5 ஆயிரம் வாக்குகள் பெற்ற தொகுதிகள், 10 ஆயிரம் வாக்குகள் பெற்ற தொகுதிகள் பெற்ற தொகுதிகள் என கணக்கெடுத்து பட்டியல் தயார் செய்து அந்த விவரங்களின் அடிப்படையில் குறைந்தது 40 தொகுதிகளில் இருந்துதான் பேச்சையே ஆரம்பிக்க வேண்டும் என்று கூறிவருகிறார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: