வியாழன், 8 அக்டோபர், 2020

ம.க.இ.க, மக்களதிகாரம் துணை அமைப்புகளிலிருந்து பலர் விலகி.. விலக்கப்பட்டும்... இருக்கிறார்கள்.

Raj Dev ; ம.க.இ.க, மக்களதிகாரம் மற்றும் அவற்றின் துணை அமைப்புகளிலிருந்து பல முன்னணியாளர்கள் விலகிக் கொண்டும், விலக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். 

இது எங்கு, எப்போது, எப்படி முடியும் என்று தெரியவில்லை. இதன் விளைவுகள் ஏற்படுத்தப் போகும் தாக்கம் பற்றி பொது சமூகத்தில் எந்த அக்கறையான விவாதமும் எழவில்லை. இந்த அமைப்புகள் நீண்ட காலமாக தமிழ் மண்ணில் உணர்வுப் பூர்வமான போராட்டங்களை நடத்தி வந்துள்ளன. கடந்த தேர்தலில் வீழ்த்தவே முடியாது என்று இறுமாந்திருந்த ஜெயலலிதாவுக்கு கோவனின் பாடல்கள் உருவாக்கிய எழுச்சி கண்ணில் விரலை விட்டு ஆட்டியது. மயிரிழையில் மட்டுமே அவர் ஆட்சியை பிடிக்க முடிந்ததற்கு மக்களதிகார அமைப்பின் செயல்பாடுகள் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

அதே போன்று முந்தைய திமுக ஆட்சியில் சிதம்பரம் நடராஜர் கோயில் அரசுடமையாக்கப்பட்டதற்கு பின்பும் ம.க.இ.க உருவாக்கிய கருத்துருவாக்கமும், களப் போராட்டங்களும் கலைஞர் அந்த தீர்மானத்தில் உறுதியாக இருக்க உதவியது. ம.க.இ.க.வின் பொதுச் செயலாளராக தோழர் மருதையன் இருந்த காலத்தில் மது ஒழிப்புக்கு கோவன் முதலானோர் கருணாநிதியை சந்திப்பது எப்படி தகும்? என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் முக்கியமானது. கலைஞரின்   வாக்குறுதி எந்த நிலையில் தரப்படுகிறது என்ற சூழ்நிலை முக்கியத்துவத்தை குறிப்பிட்டு சில வாக்குறுதிகளிலிருந்து நழுவ முடியாத தன்மையை எடுத்துக் கூறினார். போராட்டத்தில் தீவிரத்தை கடைப்பிடித்த அதே நேரம் உடனடி முக்கியத்துவம் வாய்ந்த மிக அத்தியாவசிய நடவடிக்கைக்கு வேண்டிய நெளிவு சுளிவையும் கூட அவ்வப்போது இந்த புரட்சிகர இயக்கங்கள் தமிழ் - தமிழர் நலன் சார்ந்து எடுத்துள்ளன.

இப்படி நேரடியாகவும், மறைமுகமாகவும், ஒரு தார்மீக அழுத்தத்தை தமிழக அரசியலில் ம.க.இ.க ஏற்படுத்தி வந்ததை எவராலும் மறுக்க முடியாது. இன்று அந்த அமைப்புகள் நிலைகுலைந்து போயிருப்பது போன்ற தோற்றம் அதனோடு ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டிருந்த நண்பர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை வெளிப்படையாக பேச வருபவர்கள் யாருமில்லை. சமீபத்தில் வெளியேறிய பலரும் வெளியிடும் கருத்துக்களில் நேர்மை இருப்பதாக எனக்கு படவில்லை. அவர்கள் ஒரு கொதி உணர் நிலையில் இருந்து வெளிவர முடியாதவர்களாக இருக்கின்றனர். மற்ற இடசாரி கட்சிகளும் இந்த அமைப்புகளின் உடைவை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. காரணம் மஜஇக மாதிரியான கட்சிகள் பல முறை உடைந்து உள்ளது. தேர்தல் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கவலைகள் வேறு. அவர்களை கடந்த காலங்களில் கடுமையாக இந்த அமைப்புகள் எதிர்த்து எழுதி உள்ளன. ஒரு வேளை தேர்தல் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த அமைப்புகளின் சிதைவை ரசிக்கவும் கூடும்.
ம.க.இ.கவின் எதிர் தரப்பிலிருந்து நேர்மையான மகிழ்ச்சி வெளிப்படல் ஒன்று வந்தது என்றால் அது ஜெயமோகனிடமிருந்தே வந்தது. இடதுசாரிய புரட்சிகர அரசியல் பற்றிய தனது ஆரூடம் பலித்து விட்ட திருப்தி அவரிடம் வெளிப்பட்டது. ம.க.இ.க மிகக் கடுமையாக விமர்சித்து வந்த அ. மார்க்ஸ் தனது வருத்தத்தை வெளியிட்டிருந்தார். மற்றபடி எவரும் பெரிதாக இந்த பிரச்சினையை கண்டு கொள்ளவில்லை. இந்த சிதைவை ம.க.இ.க மிகத் தீவிரமாக எதிர்த்து வந்த இந்துத்துவ சக்திகளோ, அரசோ கண்டு கொண்டிருப்பதாக தெரியவில்லை. ம.க.இ.க மற்றும் மக்களதிகாரம் அமைப்புகளில் ஏற்பட்டிருக்கும் இந்த குழப்பம் தவிர்க்க முடியாததா? இந்த பிரிந்து செல்லலும், மனமுறிவுகளும் ஒரு மயக்கத் தெளிவை நோக்கியதா?
(தொடரும்)

கருத்துகள் இல்லை: