செவ்வாய், 6 அக்டோபர், 2020

BBC : துருக்கியை புறக்கணிக்க சௌதி அரசுக்கு குவியும் நெருக்கடி - இழப்பு யாருக்கு?

முகமது ஷாஹித் - ிபிசி செய்தியாளர்
சல்மான்

இந்த ட்வீட் ஏன் வெளியானது?

சமீபத்தில் துருக்கி அதிபர் எர்துவான் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் தருவதாக இந்த ட்வீட் பார்க்கப்படுகிறது.

சில வளைகுடா நாடுகள் துருக்கியை குறிவைக்கின்றன என்றும் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் கொள்கைகளை அவை பின்பற்றுகின்றன என்றும் சமீபத்தில் துருக்கியின் பொதுச் சபையில், அதிபர் எர்துவான் கூறினார்.

எர்துவான்

பின்னர் அவர் கிண்டலாக கூறினார், "இன்று கேள்விக்குள்ளான நாடுகள் நேற்று வரை இருக்கவில்லை என்பதையும், நாளை இல்லாமலும் போகலாம் என்பதையும் மறந்துவிடக் கூடாது. ஆயினும், அல்லாவின் சம்மதத்துடன் நாம் இந்தப்பிராந்தியத்தில் நமது கொடியை தொடர்ந்து பறக்கவிடுவோம்."

எர்துவானின் இந்த அறிக்கை ,1932 ஆம் ஆண்டில் அமையப்பெற்ற செளதி அரேபியாவுடன் நேரடியாக இணைத்து பார்க்கப்படுகிறது.

புறக்கணிப்பு ஏதேனும் விளைவை ஏற்படுத்துமா?

செளதி அரேபியாவின் புறக்கணிப்பு வேண்டுகோள், சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவரிடமிருந்து வந்தது. அதன் தாக்கம் எவ்வளவு விரிவாக இருக்கும் என்பதை காலம்தான் சொல்லும். ஆனால் இதன் மூலமாக ஒரு விளைவு ஏற்பட்டால், அது துருக்கியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

துருக்கியின் நாணயமான லிராவின் தொடர்ச்சியான வீழ்ச்சியே இதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின்படி, துருக்கியின் நாணயம் லிரா, தொடர்ந்து எட்டாவது ஆண்டாக வீழ்ச்சியடைந்து வருகிறது. கூடவே அதன் மதிப்பு கடந்த தசாப்தத்தில் 80 சதவிகிதம் குறைந்துள்ளது.

இந்த வேண்டுகோள் நடைமுறைப்படுத்தப்பட்டால், துருக்கியில் பாதிப்பு ஏற்படக்கூடும். ஏனெனில் துருக்கியில் செளதி அரேபியாவின் சுமார் ஆயிரம் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இது தவிர, பெரும் எண்ணிக்கையில் செளதி நாட்டவர்கள் துருக்கிக்கு சுற்றுலா செல்கின்றனர் என்று மத்திய கிழக்கு விவகாரங்களின் நிபுணர் கமர் ஆகா கூறுகிறார்.

"துருக்கிக்கும் செளதி அரேபியாவிற்கும் இடையிலான அரசியல் வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன. இதில் பிராந்திய நிலையில், யேமன், லிபியா, ஈராக் மற்றும் சூடான் தொடர்பான அரசியல் வேறுபாடுகளுடன் கூடவே இஸ்லாம் தலைமை மீதும் ஒரு இழுபறி நிலைமை உள்ளது, "என்று அவர் மேலும் தெரிவித்தார்.

செளதி அரேபிய அரசு இதுவரை இதுபோன்ற எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் செளதி அத்தகைய முடிவை எடுத்தால், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அதே போன்ற முடிவை எடுக்கும் என்றும் இதனால் துருக்கியின் பிரச்சனைகள் பெரிதும் அதிகரிக்கும் என்றும் கமர் ஆகா கூறுகிறார்.

துருக்கிக்கும், செளதி அரேபியாவுக்கும் இடையிலான வர்த்தகம்

துருக்கிக்கும்,செளதி அரேபியாவுக்கும் இடையிலான வர்த்தகம்

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின்படி, இரண்டாவது காலாண்டில் மொத்த இறக்குமதியைப் பொறுத்தவரை துருக்கி, செளதி அரேபியாவின் 12 வது இடத்தில் இருக்கும் வர்த்தக கூட்டாளியாகும். துருக்கியில் இருந்து சவுதி அரேபியாவிற்கு இறக்குமதி ஜூன் மாதத்தில் 18 கோடி டாலராக இருந்தது, இது ஜூலை மாதத்தில் 18.5 கோடி டாலராக அதிகரித்தது என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த முறையீடு செளதி அரேபியாவின் விரக்தியைக் காட்டுகிறது என்று அங்காராவில் உள்ள யில்டிரிம் பயாஃசிட் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஓமர் அன்ஸ் கூறுகிறார்.

"நான் இதை ஒரு அவநம்பிக்கையான நடவடிக்கை என்று ஏன் கூறுகிறேன் என்றால் இந்த பொருளாதார புறக்கணிப்பை அதிகாரப்பூர்வமாக்குவதற்கு, உலக வர்த்தக அமைப்பின் (WTO) பல சட்டங்கள் மீறப்பட வேண்டும். கத்தாரை செய்தது போலவே செளதி அரசு, துருக்கியையும் பொருளாதார ரீதியில் புறக்கணித்தால், துருக்கி அதை உலக வர்த்தக அமைப்பில் எதிர்க்கும். கத்தார் விஷயத்தில் உலக வர்த்தக அமைப்பு அதற்கு சாதகமாக முடிவு செய்ததைப்போலவே துருக்கியின் விஷயத்திலும் அந்த நாட்டிற்கு சாதகமாக முடிவு வரக்கூடும். "என்று அவர் தெரிவிக்கிறார்.

"உலக வர்த்தக அமைப்பின் சட்டத்தின்படி, தேசிய பாதுகாப்பில் ஒரு பெரிய பிரச்சனை ஏற்பட்டால் மட்டுமே, ஒரு நாட்டை பொருளாதார ரீதியாக புறக்கணிக்க முடியும். பொருளாதார புறக்கணிப்பின் இந்த வேண்டுகோள் ஒரு அரசியல் தந்திரம் என்று நான் கருத்துகிறேன். துருக்கியின் மீது நெருக்குதல் செய்வதே இதன் நோக்கம். செளதி மக்கள் இதை எவ்வளவு தூரம் பின்பற்றுவார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். "என்று ஓமர் அன்ஸ் குறிப்பிட்டார்.

செளதி அரேபியாவிற்கும் துருக்கிக்கும் இடையே 5 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் இருப்பதாக ஓமர் அன்ஸ் கூறுகிறார், அதில் இரண்டரை பில்லியன் டாலர்கள் துருக்கியிடமிருந்து வருகிறது. இரண்டரை பில்லியன் டாலர்கள் செளதி அரேபியாவிடமிருந்து வருகிறது.

"துருக்கி செளதி அரேபியாவிலிருந்து பெரும்பாலும் எண்ணெயை வாங்குகிறது. அதே நேரத்தில் இது செளதி அரேபியாவிற்கு நிறைய பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. செளதி அரேபிய மக்களுக்கு துருக்கியில் நிறைய முதலீடு உள்ளது. அவர்களுக்கு அங்கு வீடுகளும் நிறுவனங்களும் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5 முதல் 6 பில்லியன் டாலர்களை செளதி மக்கள் துருக்கியில் முதலீடு செய்துள்ளனர்," என்று அவர் கூறுகிறார்.

"செளதி சுற்றுலா பயணிகள் துருக்கியை சுற்றிப்பார்க்க அதிகம் வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் செளதி சுற்றுலாப் பயணிகள் துருக்கிக்கு வருகிறார்கள். இது சட்டமாகும் போதுதான் செளதி மக்கள் துருக்கியை புறக்கணிக்க முடியும். ஆனால் இந்த வேண்டுகோள் விரிவான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் அவர்.

உறவுகள் எப்போது மோசமடைய ஆரம்பித்தன

துருக்கிக்கும் செளதி அரேபியாவிற்கும் இடையிலான உறவு சுமூகமாக இல்லை என்று கருதப்படுகிறது. இந்த பின்னடைவு 2018 இல் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலைக்குப் பின்னர் தொடங்கியது.

2018 ல் , துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள செளதி தூதரகத்தில் சவுதி அரசின் முக்கிய விமர்சகரான கஷோக்ஜி, செளதி ஏஜெண்டுகளின் குழுவால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது சடலம் இதுவரை மீட்கப்படவில்லை.

கஷோக்ஜியின் கொலைக்கு செளதி அரேபியாவின் 'உயர் மட்டம்' தான் பொறுப்பு என்று எர்துவான் கூறிவருகிறார். அண்மையில், கஷோக்ஜி கொலை வழக்கு தொடர்பான ஐந்து குற்றவாளிகளின் தண்டனையை மாற்றியமைத்தது தொடர்பாகவும் துருக்கி சினம்கொண்டுள்ளது.

செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 5 பேரின் மரண தண்டனையை செளதி அரேபிய நீதிமன்றம் மாற்றியது. முதலில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அது, 7 முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டது.

கஷோக்ஜி

இதற்கு பதிலளிக்கும் வகையில், கஷோக்ஜி கொலை வழக்கில் சந்தேகத்திற்கிடமான ஆறு செளதி நபர்கள் மீது துருக்கி கடந்த வாரம் வழக்குத் தொடங்கியது. இவர்கள் யாருமே துருக்கியில் இல்லை. அவர்கள் இல்லாத நிலையில் இந்த வழக்கு தொடங்கப்பட்டுள்ளது.

இது தவிர, கஷோக்ஜி கொலை வழக்கில் 20 செளதி குடிமக்கள் மீது இஸ்தான்புல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

சில மத்திய கிழக்கு நாடுகள், இஸ்ரேலுடன் உறவுகளை இயல்பாக்கிவருவதில் துருக்கிய அதிபர் எர்துவானுக்கு மகிழ்ச்சியில்லை.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் சமீபத்தில் இஸ்ரேலுடனான சாதாரண தூதாண்மை உறவுகளை அறிவித்தன, சவூதி அரேபியாவும் அத்தகைய அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துருக்கி, செளதி இழுபறிக்கான காரணங்கள்

துருக்கியின் இரண்டாவது சக்திவாய்ந்த தலைவராக ரிசெப் தயீப் எர்துவான் கருதப்படுகிறார். அவருக்கு முன், துருக்கிய நிறுவகர் முஸ்தபா கெமல் அட்டடூர்க் அல்லது முஸ்தபா கமல் பாஷாவின் பெயர் மட்டுமே வருகிறது.

இந்த இரு நாடுகளான செளதி அரேபியாவும் துருக்கியும், உலகின் முஸ்லிம் நாடுகளின் தலைவராக ஆக விரும்புகின்றன .

ஏதாவது ஒரு விஷயத்திற்கு செளதி அரேபியா கருத்து தெரிவிக்கும் போதெல்லாம், துருக்கி அதை எதிர்க்க முயற்சிக்கிறது.

மெக்கா தன்னிடம் இருப்பதாலும், நபிகள் நாயகம் அங்கே பிறந்தார் என்பதாலும், தான்தான் உலக இஸ்லாமிய நாடுகளின் தலைவர் என்று செளதி அரேபியா கருதுகிறது..

இருப்பினும், துருக்கி தன்னை செளதியை விட சக்திவாய்ந்ததாகவும், முஸ்லிம்களின் உண்மையான நலம்விரும்பி என்றும் நினைக்கிறது,

இதனால்தான் செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலைக்கு எதிராக துருக்கி குரல் கொடுத்தது. இப்போது அது, இஸ்ரேலுடன் இயல்பாகிவரும் பல நாடுகளின் உறவுகளுக்கு எதிராகவும் பேசுகிறது.

இருப்பினும் செளதி அரேபியா, துருக்கி போன்ற ஒரு நாட்டுடன் நீண்டகாலம் வரை சண்டையை நீட்டிப்பது கடினம் . துருக்கி நேட்டோவில் ஒரு உறுப்புநாடாக இருப்பதும், தொடர்ந்து தனது வலிமையை அதிகரித்து வருவதும் இதற்கான காரணங்கள் என்றும் ஒமர் அன்ஸ் கூறுகிறார்.

"கஷோக்ஜியின் வழக்கைத் தவிர, துருக்கிக்கும் செளதி அரேபியாவிற்கும் இடையில் உறவுகள் கடுமையாக சேதமடையும் அளவிற்கு எதுவும் நடக்கவில்லை. செளதி அரேபியாவில் மன்னர் சல்மான் இருக்கும் வரையிலும், துருக்கியில் எர்துவான் உள்ளவரையிலும், இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் மோசமாகாது என்று அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் கூறியிருக்கிறார். ஒரு முன்முயற்சி செய்யப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் உறவு மோசமடையும் சூழல் உள்ளது ஆனால் உடைவதற்கான நேரம் இன்னும் வரவில்லை," என்று அவர் கூறுகிறார்.

இது தவிர துருக்கி , முஸ்லிம் நாடுகளின் தலைவராக விரும்புகிறது என்பதையும் ஒமர் அன்ஸ் ஏற்கவில்லை.

"துருக்கியின் வெளியுறவுக் கொள்கையையும் அதன் வரலாறையும் பார்த்தால், துருக்கி முஸ்லிம் நாடுகளின் தலைவராக இருக்க விரும்புகிறது என்று சொல்வது அவ்வளவு சரியாக இருக்காது. துருக்கி தன்னை ஒரு ஐரோப்பிய நாடு என்று கூறிக்கொள்ளும் வழக்கத்தை எப்போதும் கொண்டுள்ளது. அதன் போட்டி, எகிப்து மற்றும் ஆசியாவுடன் அல்ல. ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுடன் அதன் போட்டி இருந்துவருகிறது. துருக்கி, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக விரும்புகிறது. அது ஏற்கனவே நேட்டோவின் உறுப்பினராகவும் உள்ளது," என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.

செளதி அரேபியா, ஈரான் மற்றும் எகிப்து ஆகியவை முஸ்லிம் உலகின் பாரம்பரிய தலைமை நாடுகள் என்பதால் துருக்கியை இந்தவகையில் ஒரு புதிய நுழைவாக பார்க்க வேண்டும் என்று ஒமர் அன்ஸ் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை: