வெள்ளி, 9 அக்டோபர், 2020

ராம் விலாஸ் பாஸ்வான்.. 9 முறை எம்.பி, 1989 முதல் மத்திய அமைச்சர்

BBC : இந்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு விநிகோயகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் (74), டெல்லியில் அக்டோபர் 8ஆம் தேதி காலமானார். இந்திய அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலான அவரது அரசியல் பயணம் இறக்கங்களை விட பல ஏற்றங்கள் கொண்டதாகவே இருந்தது. ஆனால், அதற்கு அவர் எதிர்கொண்ட சவால்கள் கடினமானவை.1946ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி, பிஹார் மாநிலம், ககாரியா மாவட்டத்தில் உள்ள ஷாஹாபன்னி என்ற இடத்தில் ராம் விலாஸ் பாஸ்வான் பிறந்தார். சட்டத்துறையில் இளங்கலையும் கலைத்துறையில் முதுகலையும் படித்த அவர், 1969ஆம் ஆண்டில் பிஹார் மாநில காவல்துறையில் துணை கண்காணிப்பாளர் பதவிக்கு தேர்வானார். 

அதன் பிறகு தனது வாழ்வில் தாம் தேர்வு செய்த பாதையை   2016ஆம் ஆண்டில் ராம் விலாஸ் பாஸ்வான் விவரித்தார்.

அதில் அவர், “1969இல் நான் டிஎஸ்பி பதவிக்கும் எம்எல்ஏ பதவிக்கும் தேர்வானேன். அப்போது எனது நண்பர் ஒருவர் என்னிடம் நீ அரசாங்கம் ஆக ஆசைப்படுகிறாயா, அரசு சேவகராக இருக்க ஆசைப்படுகிறாயா என கேட்டார். அப்படித்தான் நான் அரசியலுக்குள் நுழைந்தேன்” என்று ராம் விலாஸ் பாஸ்வான் கூறியிருந்தார். 

அதே ஆண்டில் பிஹார் மாநில சட்டமன்ற தேர்தலில் சம்யுக்தா சோஷலிஸ கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் எம்எல்ஏ ஆனார். தலித் இயக்க தலைவர்களான ராஜ் நாராயண், ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோரின் தீவிர பற்றாளராக தன்னை அடையளப்படுத்திக் கொண்ட ராம் விலாஸ் பாஸ்வான், லோக் தளம் கட்சியில் சேர்ந்ததும் அதன் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ராஜ் நாராயண், கர்பூரி தாக்கூர், சத்யேந்திர நாராயணம் சின்ஹா உள்ளிட்ட அவசரநிலைக்கு எதிராக முழக்கமிட்ட தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு, ராம் விலாஸ் பாஸ்வானுக்கு ஏற்பட்டது.

அந்த காலகட்டத்தில் மொரார்ஜி தேஸாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரது கட்சியில் இருந்து விலகிய பாஸ்வான், லோக்பந்து ராஜ் நாராயண் வழிநடத்திய மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவராக தேர்வானார்.

1975இல் இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, பாஸ்வான் கைது செய்யப்பட்டு, அவசரநிலை காலம் முழுவதும் சிறையிலேயே கழித்தார். 1977இல் விடுதலையானதும், ஜனதா கட்சி உறுப்பினரானார் பாஸ்வான். அப்போது முதல் முறையாக மக்களவைக்கு போட்டியிட்டு முதல் முயற்சியிலேயே அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது அவர் அடைந்த தேர்தல் வெற்றி உலக சாதனையாக பேசப்பட்டது.

>1983இல் அவர் தலித் சேனா என்ற ஒரு இயக்கத்தை நிறுவினார். அந்த இயக்கம், தலித் மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் அமைப்பாக வலுப்பெற்றது. பிறகு வந்த ஆண்டுகளில் அந்த அமைப்பு அவரது சகோதரர் ராம் சந்திர பாஸ்வானால் வழிநடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பீம் ராவ் அம்பேத்கர் நிறுவிய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு போல, ராம் சந்திர பாஸ்வானின் அமைப்பும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான சேனை என்ற பெயரில் செயல்பட்டது.

1989இல் 9ஆவது மக்களவைக்கு தேர்வானபோது, அப்போது ஆட்சியமைத்த வி.பி. சிங் அரசில் ராம் விலாஸ் பாஸ்வான் இந்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1996இல் அப்போதைய பிரதமர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததால், ஆளும் கூட்டணியின் மக்களவை அவைத் தலைவராக ராம் விலாஸ் பாஸ்வான் சில காலம் இருந்தார். அந்த காலகட்டத்தில்தான் ராம் விலாஸ் பாஸ்வான் இந்திய ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அந்த பதவியில் அவர் 1998வரை அவர் தொடர்ந்தார்.

பிறகு 1999 முதல் 2001ஆம் ஆண்டுவரை இந்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்த அவர், பின்னர் நிலக்கரித்துறை அமைச்சராக மாற்றப்பட்டு அந்த பதவியில் 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்வரை நீடித்தார்.

1989ஆம் ஆண்டு முதல், மத்தியில் ஆட்சியமைத்த நரசிம்ம ராவ் அமைச்சரவை மற்றும் மன்மோகன் சிங்கின் இரண்டாவது பதவிக்கால அமைச்சரவை நீங்கலாக 2020ஆம் ஆண்டுவரை பிரதமராக இருந்த அனைவரது அமைச்சரவையிலும் பாஸ்வான் இடம்பெற்றார்.

தனி கட்சி தொடக்கம்

2000இல் ஜனதா தளம் கட்சி பிளவுபட்டபோது, லோக் ஜன சக்தி என்ற பெயரில் தனி கட்சியை பாஸ்வான் தொடங்கினார்.

அப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இவரது கட்சி சேர்ந்தது. தேர்தலில் அந்த கூட்டணி வென்று ஆட்சியைப்பிடித்தபோது, ராம் விலாஸ் பாஸ்வான், இந்திய ரசானம், உரத்துறை, எஃகு துறை அமைச்சராக்கப்பட்டார்.

">2005ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிஹார் மாநில சட்டமன்ற தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தார். அப்போது எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் பிஹாரில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க பாஸ்வானின் ஆதரவை காங்கிரஸ் கட்சி கோரியபோது, லாலுவுக்கு எதிரான தீவிர அரசியலை நடத்திய தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முடியாது என்று பாஸ்வான் உறுதிபடக் கூறினார்.

இந்த நிலையில், பாஸ்வான் கட்சியின் 12 உறுப்பினர்கள் நிதீஷ் குமாருக்கு ஆதரவாக களம் மாறியதைத் தொடர்ந்து நீடித்து வந்த அரசியல் முட்டுக்கட்டை முடிவுக்கு வந்தாலும், அப்போது பிஹார் மாநில ஆளுநராக இருந்த பூட்டா சிங், மாநில சட்டமன்றத்தை கலைத்து, புதிய தேர்தலுக்கு உத்தரவிட்டார். அதுவரை பிஹாரில் குடியரசு தலைவர் ஆட்சிபிரகடனம் செய்யப்பட்டது.

2005ஆம் ஆண்டு நவம்ரில் பிஹார் மாநில சட்டமன்ற தேர்தல் நடந்தபோது, பாஸ்வான் மேற்கொண்ட மூன்றாவது அணி படுதோல்வி அடைந்தது. அந்த தேர்தலில் லாலு பிரசாத், காங்கிரஸ் கூட்டணி சிறுபான்மையாக மாறியதால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது.

இதேவேளை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்த பாஸ்வான், அதே கட்சி தலைமையிலான அணியில் மத்திய அமைச்சராக தொடர்ந்தார். அப்போது அதே அமைச்சரவையில் பிஹாரின் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக தொடர்ந்தார்.

1996 முதல் 2020ஆம் ஆண்டுவரை ஐந்து வெவ்வேறு பிரதமர்களின் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக பதவி வகித்தார் ராம் விலாஸ் பாஸ்வான். இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் அங்கம் வகித்த ஐக்கிய முன்னணி, பாஜக அங்கம் வகித்த தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் அங்கம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மீண்டும் பாஜக அங்கம் வகித்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவை ஆட்சியில் இருந்தன.

லாலுவுடன் கூட்டணி

2009ஆம் ஆண்டில் லாலுவின் கட்சிக்கு எதிராக அரசியல் செய்ததாக 2000களின் தொடக்கத்தில் முழங்கிய பாஸ்வான், அதே லாலுவுடன் 2009இல் அரசியல் கூட்டணி செய்து கொண்டார். இந்த இரு தலைவர்களும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் சேர்ந்து நான்காவது அணியை அமைத்து தேர்தல் களம் கண்டனர்.

ஆனால், ராம் விலாஸ் பாஸ்வான் தனது 33 ஆண்டுகால அரசியலில் தன்னை முதன் முதலாக மக்களவைக்கு தேர்வு செய்து அனுப்பிய ஹாஜிபூர் தொகுதியில் முதல் முறையாக முன்னாள் முதல்வர் ராம் சுதந்தர் தாஸிடம் தோல்வியைத் தழுவினார். 15ஆவது மக்களவையில் ராம் விலாஸ் பாஸ்வானின் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

2014ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்த ராம் விலாஸ் பாஸ்வான், அதே ஹாஜிபூர் தொகுதியில் வென்றார். அவரது மகன் சிராக் பாஸ்வான், ஜாமூயி தொகுதியில் வென்றார். இதைத்தொடர்ந்து பிரதமரான நரேந்திர மோதி அமைச்சரவையில் பாஸ்வானுக்கு நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2019இல் மீண்டும் இதே கூட்டணி ஆட்சியை தக்க வைத்தபோதும், அதே அமைச்சர் பொறுப்பு பாஸ்வானுக்கு வழங்கப்பட்டது.

மக்களவையில் எட்டு முறை உறுப்பினராக இருந்த அவர், கடந்த ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகவும் ராம் விலாஸ் பாஸ்வான் தேர்வானார்.

>1960களில் ராஜ்குமார் தேவியை திருமணம் செய்து கொண்ட ராம் விலாஸ் பாஸ்வானுக்கு, அவர் மூலமாக உஷா, ஆஷா ஆகிய மகள்கள் உள்ளனர். எனினும், 1981இல் அவரது வேட்பு மனு தாக்கலின்போது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக அவர் அறிவித்தார். 1983இல் விமான பணிப்பெண்ணாக இருந்த ரீனா சர்மாவை திருமணம் செய்து கொண்ட பாஸ்வானுக்கு சிராக் பாஸ்வான் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்

கருத்துகள் இல்லை: