திங்கள், 5 அக்டோபர், 2020

நான்கு மாதங்களாகத் துன்புறுத்தப்பட்ட இளம்பெண்!’ - ஹத்ராஸ் சம்பவத்தில் நடந்தது என்ன?

vikatan - அந்தோணி அஜய்.ர : சந்தீப், லவ்குஷ் ஆகிய இருவரும் தொடர்ந்து அப்பெண் வீட்டை விட்டு வெளியே வரும்போதெல்லாம் இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டுள்ளதாக ஹத்ராஸ் இளம்பெண்ணின் தாயார் கூறியுள்ளார்.உத்தரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு நாடுமுழுவதும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கொலையை அடுத்து அப்பெண்ணின் உடல், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படாமல் காவல்துறையினரால் எரிக்கப்பட்டது சந்தேகத்தையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட 19 வயது பெண்ணின் தாய் கடந்த சில மாதங்களாகவே அப்பெண் அப்பகுதி ஆண்களால் துன்புறுத்தப்பட்டிருக்கிறாள் என கூறியுள்ளார். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள தாகூர் எனப்படும் ஆதிக்க சாதி ஆண்களில் இருவர் ஏற்கெனவே அப்பெண்ணின் பின்னால் துரத்திவருவதும் வழியில் செல்லவிடாமல் தடுப்பதுமாக துன்புறுத்தி வந்ததாகவும், அதை முதலில் விளையாட்டாக எடுத்து கொண்டதாகவும் பாதிக்கப்பட்டபெண்ணின் தாய் கூறியள்ளார்.

சந்தீப் மற்றும் லவ்குஷ் இருவரும் தொடர்ந்து அப்பெண் வீட்டை விட்டு வெளியே வரும்போதெல்லாம் இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹத்ராஸ் - ராகுல், பிரியங்கா காந்தி
ஹத்ராஸ் - ராகுல், பிரியங்கா காந்தி

ஆனால், குற்றம்சாட்டப்பட்ட சந்தீப்பின் தாத்தா மற்றும் லவ்குஷ்-ன் குடும்பத்தினர் இதனை மறுத்துள்ளனர். இம்மாதிரியான குற்றங்களில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் முன்னரே புகார் தெரிவித்திருப்பர் என்றும் தற்போது வீண் பழி சுமத்துகிறார்கள் என்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.


சந்தீப் மற்றும் லவ்குஷ்-இன் அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்ட பெண் வீட்டை விட்டு வெளியே செல்வதையே முற்றிலும் தவிர்த்துள்ளார். அருகிலுள்ள கடைகளுக்குச் செல்லும்போது கூட உறவினர் பெண் ஒருவரை உடன் அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்திக்கிறார். இதுகுறித்து அவரின் உறவினர் பெண் கூறியதாவது, ``தாகூர் பிரிவு இளைஞர்கள் இருவரும் அவரை வழிமறைத்ததையும், பின்னால் துரத்துவதையும் கவனித்திருக்கிறேன். மேலும், நான் அவர்களை போலீஸில் பிடித்து கொடுப்பதாகவும் எச்சரித்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார். எனினும் அவர்கள் நடத்தையில் எந்த மாற்றமும் தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஹத்ராஸ் சம்பவத்துக்கு எதிரான போராட்டம்
ஹத்ராஸ் சம்பவத்துக்கு எதிரான போராட்டம்

பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்கள் திட்டமிட்டு நடத்தப்படுபவையே. நம் நாட்டில் பாலியல் வன்முறைகளுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதே கேள்விக்குறியாக உள்ள நிலையில், சிறிய அளவில் கேலிசெய்தல் உள்ளிட்ட குற்றங்களை நாம் கண்டுகொள்ளாமல் விடுவதும் பின்னாள்களில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கருத்துகள் இல்லை: