சுமதி விஜயகுமார் : முகமத் அலி ஜின்னாவின் பரிந்துரையால் மூன்று வட்ட மேசை மாநாடுகள் நடைபெற்றது. அதன் முக்கிய நோக்கம் இந்திய அரசியல் அமைப்பை சீர்திருத்தம் செய்வது. முதல் வட்ட மேசை மாநாடு நவம்பர் 12 1930 முதல் 19 ஜனவரி 1931 வரை லண்டனில் நடைபெற்றது. அதில் இந்தியாவை சேர்ந்த 74 பேர் கலந்து கொண்டார்கள். அதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் தலைமையில் இருந்து ஒருவரும் கலந்து கொள்ளவில்லை.
1930ல் காந்தியடிகள் துவங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் பல காங்கிரஸ் தலைவர்களும் கைதாகி சிறையில் இருந்தார்கள். இந்திய பிரிட்டிஷ் அரசில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று துவங்கப்பட்டது தான் காங்கிரஸ் என்பதும் , பின்னர் காந்தியடிகளின் வருகைக்கு பின்னே மக்கள் இயக்கமாய் மாறி விடுதலைக்கு போராடியதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். அப்படி இந்திய அரசியலில் பங்கு கொள்வதற்காக துவங்கப்பட்ட காங்கிரஸ் , இந்திய அரசியல் சீர்திருத்த மாநாட்டை, காந்தியின் தலைமை புறக்கணித்தது.ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக அண்ணல் அம்பேத்கரும், தாத்தா ரெட்டைமலை சீனிவாசனும் கலந்து கொள்ள, ஜின்னாவோ ஏனைய சிறுபான்மையினர் சார்பாக கலந்து கொண்டார்.
துரதிஷ்டவசமாக இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் ( 7 செப்டம்பர் 1931 முதல் 1 டிசம்பர் 1931) காந்தியடிகள் கலந்து கொள்கிறார்.கலந்து கொண்டதுடன் மட்டுமில்லாது இஸ்லாமியர்கள் , சீக்கியர்கள் , தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் இதர சிறுமான்மையினருக்கு தான் தான் பிரதிநிதி என்றும் வாதாடுகிறார். அதாவது ஒட்டுமொத்த இந்திய அரசியலுக்கும் காங்கிரஸ் தான் பிரதிநிதி என்கிறார்.
Communal Award எனப்படும் வகுப்புவாத பிரதிநிதித்துவம் 1919களில் இருந்தே இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், இந்திய கிறிஸ்துவர்கள், ஆங்கிலோ இந்தியன்ஸ்க்கு வழங்கப்பட்டு வருகிறது. அண்ணல் அம்பேத்கர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வகுப்புவாத பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதை போதிய வாதங்களுடன் எடுத்துரைக்கிறார். அன்றைய ஆங்கிலேய பிரதமராக இருந்த Ramsay McDonald அதை ஆதரித்து சட்டமாக்க சம்மதிக்கிறார். வகுப்புவாத பிரதிநிதித்துவம் என்பது, ஒவ்வொரு சாதி மற்றும் சிறுபான்மையினராக இருக்கும் சமுதாயத்திற்கும் அவர்களின் விகிதாச்சார முறைப்படி தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் தேர்தல் அரசியலில் பங்கு.
மற்ற சிறுபான்மை மக்களுக்கான வகுப்புவாத பிரதிநித்துவதை ஓரளவிற்கு பொறுத்து கொண்ட காந்தி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை கடுமையாக எதிர்த்தார். அதற்காக அவர் சொன்ன காரணம், ஹரிஜன் மக்களும் ஹிந்துக்கள் தான். அவர்களுக்கு வகுப்புவாத பிரதிநிதித்துவம் கொடுப்பதால் அவர்கள் ஹிந்துக்கள் இல்லை என்றாகி ஹிந்துக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துகிறது என்பதே ஆகும். அண்ணல் அம்பேத்கரின் திறமையான வாதம் மட்டுமில்லாமல் அவர் வாதத்தில் இருக்கும் நியாயத்தை ஏற்று கொண்டு ஆங்கிலேய அரசு அதற்கு சம்மதிக்கிறது .
இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்ட காந்தி மட்டும் இல்லை அம்பேத்கரும் கடும் அதிருப்தியில் இருந்தார். 'ஒரு நாட்டின் முக்கிய தீர்மானத்தின் போது அந்த நாட்டின் பிரதிநிதியாய் செல்வதற்கு காந்தியை போல ஒரு தகுதியற்றவர் கிடையாது' என்றார். அவ்வளவு கடுமையான விமர்சனத்திற்கு தகுதியானவராகவே காந்தி இருந்தார் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஹிந்து மதம் என்பது ஜாதிகளால் கட்டமைக்கப்பட்டது. ஜாதியை நீக்கிவிட்டு பார்த்தல் ஹிந்து மதமே இருக்காது. அப்போது தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் ஜாதிகள் ஒழிய வேண்டும். ஜாதிகள் ஒழிய வேண்டுமென்றால் ஹிந்து மதம் ஒழிய வேண்டும் என்று சற்றும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் பேசியும் எழுதியும் வந்தவர் அம்பேத்கர். காந்தியோ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஹரிஜன் என்று பெயர் வைப்பதிலும் , தீண்டாமை ஒழிய வேண்டும் என்று பரப்புரையினாலேயே தீண்டாமையை ஒழித்துவிடலாம் என்று கனவு கண்டவர்.
காந்தியின் கடும் எதிர்ப்பிற்கு பின்னரும் ஆங்கிலேயே அரசு 16 ஆகஸ்ட் 1932 Communal Award அறிவிக்கிறது. வகுப்புவாத பிரதிநிதித்துவதுடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்குரிமையை 20 ஆண்டுகளுக்கு அறிவிக்கிறது. அண்ணல் கேட்டதோ குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் தான். இரட்டை வாக்குரிமை என்பது ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களில் ஒரு பிரதிநிதியை முதலாம் வாக்குரிமையின் மூலம் தேர்ந்தெடுப்பது. இரண்டாம் வாக்குரிமை பொது தேர்தலில் வாக்களிப்பது. இப்போது தந்தை பெரியார் ஏன் இந்திய விடுதலையை தூக்க நாளாக அறிவித்தார் என்பதையும் நாம் ஓரளவிற்கு புரிந்து கொள்ளலாம். சூத்திர மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவேனும் நீதியை ஆங்கிலேயர்கள் கொடுத்தார்கள் என்றால் அதற்கு பெரும் முட்டுக்கட்டையாய் இருப்பது சுதந்திரம் பெற்ற ஆட்சியாளர்கள் தான் என்பதற்கு காந்தியின் உண்ணா விரதமே சாட்சி.
Communal Award அறிவிக்கப்பட்டதும் காந்தி, அது திரும்ப பெரும் வரையில் சாகும் வரை உண்ணா விரதம் அறிவித்தார். நாடெங்கும் பதட்டம் உருவானது. அம்பேத்கருக்கு பல திசைகளில் இருந்தும் அழுத்தம் வந்துகொண்டிருந்தது. தமிழகத்தில் இரண்டு குரல்கள் முக்கிய பங்காற்றின. ராஜாஜி செப்டம்பர் 20ஐ காந்திக்கு ஆதரவாக முழு நாள் உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுத்தார். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கருக்கு எந்த காரணம் கொண்டும் பின் வாங்காதீர்கள் என்று தந்தி அடித்தார். ஆங்கிலேய அரசு அம்பேத்கர் ஒப்புக்கொண்டால் மட்டுமே சட்டத்தை திரும்ப பெறுவோம் என்று உறுதியாய் இருந்ததோடு மட்டுமல்லாமல், இந்த சட்டத்தினால் ஹிந்துக்களுக்குள் பிரிவினை வராது என்பதை காந்திக்கு எடுத்துரைத்தது. காந்தி எதையும் கேட்பதாய் இல்லை. ஒருவேளை உண்ணா விரதத்தில் காந்தி உயிர் இழக்க நேரிட்டால், அது ஒடுக்கப்பட்ட மக்களின் மேல் மிக பெரிய வன்முறை நிகழ்த்துவதற்கான வழியாய் அமையும் என்று கணக்கிட அண்ணல் அம்பேத்கர் வேறுவழியின்றி அந்த சட்டத்தை திரும்ப பெற சம்மதித்தார்.
இதனை அடுத்து, பூனா ஒப்பந்தம் 24 செப்டம்பர் 1932 ல் போடப்பட்டது. Communal Award ல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கக்கூடிய பிரதிநித்துவதை விட பூனா ஒப்பந்தத்தில் அதிக இடங்கள் கிடைத்தாலும் அதில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவம் இருக்காது என்றே அம்பேத்கர் சொன்னார். அவர் சொன்னதை நிரூபிக்கக்கூடியதாகவே 1937 தேர்தலின் முடிவுகள் அமைந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான 151 தொகுதிகளில் 78 இடங்களில் காங்கிரஸின் பிரதிநிதிகளும் 73 இடங்களில் மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உண்மையான பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
Communal Award மூலம் ஹிந்துக்களுக்குள் பிரிவினை வந்துவிடும் என்பதை விட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிட கூடாது என்று காந்தியின் பின்னால் அணிதிரண்டு நின்ற கூட்டம் தான், காந்தியை பின்னாளில் கொலை செய்தது. 1930 களிலேயே காந்தி இதை உணர்ந்திருந்தால் இந்தியாவின் வரலாறு சிறப்பானதாக அமைந்திருக்கும். Communal Award காக Dr அம்பேத்கர் கொடுத்த தரவுகளுக்கான உழைப்பை உண்ணா விரத பூச்சாண்டி அடித்து நொறுக்கி விட்டது.
அதனால் என்ன, உண்மையான இந்திய விடுதலை என்பது அண்ணலை படிக்காமல் சாத்தியமே இல்லை. தொடர்ந்து உலகின் மிக சிறந்த அறிவாளிகளில் ஒருவரான Dr அம்பேத்கரை படிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக